விபத்துகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவும் பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 7th, 2017

வீதி விபத்துகளுக்கு முகங்கொடுப்போரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதில் பொது மக்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படக்கூடிய வேலைத் திட்டமொன்று வகுக்கப்பட்டு, அது வெகு விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

வீதி விபத்து ஏற்படுகின்ற நிலையில், உயிருக்குப் போராடுகின்றவர் உட்பட காயமடைந்தோருக்கு உடனடி மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டியதே அவசியமாகும். இத்தகைய சிகிச்சைகள் தாமதாகி அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்ட பல சம்பவங்களையும் நாம் கண்டிருக்கின்றோம்.

அவ்வாறான விபத்துகளின்போது எவரேனும் காயமின்றி தப்பித்தாலும்கூட, உடனடியாக செயற்பட இயலாத நிலையில் அவர் நிலைகுலைந்து போகின்ற சந்தர்ப்பங்களே ஏராளமாகும் என்பதால், அவரால் காயப்பட்டவர்களை மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக உட்படுத்த இயலாத நிலை ஏற்படலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் விபத்துகளுக்கு உள்ளாகின்றவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கான உதவிகளை மேற்கொள்ள பொது மக்கள் முன்வராத ஒரு நிலையை எமது நாட்டிலும் காணக்கூடியதாக இருக்கிறது.

சட்ட சிக்கல்களில் தாங்கள் அகப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் காரணமாகவே பொது மக்கள் இந்த விடயத்தில் பின்னடிக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

எனவே, நான் இதற்கு முன்னரும் இந்தச் சபையில் கோரிக்கை விடுத்துள்ளதைப் போல், இந்த விடயம் தொடர்பில் ஒரு தேசிய சட்ட பொறிமுறை அவசியமாகின்றது. அதாவது விபத்துகளுக்கு முகங்கொடுப்போரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதில் பொது மக்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படக்கூடிய வேலைத் திட்டமொன்று வகுக்கப்பட்டு, அது வெகு விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Untitled-1 copy

Related posts:


விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதுபோல் கடற்றொழிலாளர்களின் கடன்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை வேண்...
அடங்காத நாற்காலி ஆசைகளுக்காகவே இங்கு சிலர் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர் - டக்ளஸ் தேவானந்தா!
பியரின் விலைகுறைப்பு இளவயதினரின் மதுப்பழக்கத்தை அதிகரிக்கும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக...