தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டும் அக்கறை காட்டும் வட மாகாண சபை அவற்றைச் செயற்படுத்த முயலாததேன்?- ஈ.பி.டி.பி

Saturday, April 23rd, 2016

எமது மக்களின் வாக்குகளால் வடக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், இன்றுவரை அச் சபை தீர்மானங்களை நிறைவேற்றுவதில் உலகிலேயே முதலிடத்தை வகிக்கின்றது என்றுகூட கூறலாம். எதற்கெடுத்தாலும் உடனே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி – அது மாகாண சபை கட்டளைச் சட்டத்திற்கு ஏற்றதா? இல்லையா என்பதுகூட அறியப்படாமல் – அதை ஊடகங்களில் பிரச்சாரப்படுத்தி விளம்பரங்களைத் தேடிக் கொள்வதோடு, எமது மக்களது பிரச்சினைகள் எதனையும் தீர்க்க முயற்சிக்காமல், அந்த பிரச்சினைகளை மூடி மறைக்கும் வகையில் மீண்டும் இன்னொரு தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கின்றனர். இப்படியே தீர்மானத்திற்கு மேல் தீர்மானங்களை நிறைவேற்றி விட்டனர்.

ஆனால், இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எதுவுமே நடைமுறைப்படுத்தப்பட்டாதாக எமது மக்களுக்குத் தெரியாது. சிலவேளை இந்த மாகாண சபையினருக்குத் தெரியுமோ தெரியாது. அந்த வகையில், மாகாண சபையானது, எமது மக்களின் பலதரப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சபை என்பதை மறந்து அல்லது, தெரியாமல் இது வெறுமனே தங்களது அரசியல் சுய நோக்கங்களுக்கான தீர்மானங்களை மாத்திரம் நிறைவேற்றும் சபை என எண்ணி இவர்கள் செயற்பட்டு வருவதாகவே தெரியவருகிறது.

இந்த நாட்டில் தற்போது செயற்பட்டு வருகின்ற மாகாண சபைகளை எடுத்துக் கொண்டால், தற்போது மாகாண சபைகளுக்கு இருக்க்ககூடிய அதிகாரங்களைக் கொண்டு அவை மிகவும் திறமையாக மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றன. அதே அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வடக்கு மாகாண சபையால் அவ்வாறு எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாதுள்ளது.

கேட்டால் அதிகாரங்கள் இல்லை என்ற வார்த்தையையே இவர்கள் மீண்டும், மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இருக்கின்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டு எமது மக்களுக்கு எவ்வளவோ செய்திருக்கலாம். வைரமுத்துவை அழைத்து உழவர் தினம் கொண்டாடியதற்கு செலவிட்ட பணத்தையும், விழாக்களுக்காக வெலவிடப்படும் பணத்தையும் எமது மக்களுக்காக செலவு செய்திருக்கலாம். மாகாண சபை அமர்வுகளின்போது உல்லாச ஹோட்டல்களில் இருந்து விதவிதமான உணவு வகைகளை தருவிக்க செலவிடும் பணத்தை சிக்கணப்படுத்தினால்கூட எமது மக்களில் பலரது பட்டிணியைப் போக்கலாம். வெற்றுத் தீர்மானங்களுக்காக செலவிடப்படும் நேரத்தை எமது மக்களின் தேவைகளை ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கு ஒதுக்கலாம்.

இவர்கள் கூறுவதைப்போல், அதிகாரங்கள் இல்லை எனில், பிறகேன் மாகாண சபையைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பானேன்? கௌரவமாக தங்களது பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு ஒதுங்கிவிடலாம்தானே? அதனை செய்யவும் மனமில்லை. பதவிகள் தேவை. அதற்கு எமது மக்களின் வாக்குகள் தேவை. ஆனால், எமது மக்களின் பிரச்சினைகள் தீரக்கூடாது. இதுதான் இவர்களது கொள்கை.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவுகூறும் வகையில் ஒரு தூபி ஒன்றை நிறுவ ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கென ஒரு குழுவையும் அமைத்தார்கள். அதற்கு என்ன நடந்தது? கடந்தகால ஆட்சியில் இயலாது போய்விட்டது என்றால் தற்போது இருப்பது இவர்கள் கொண்டு வந்த ஆட்சியல்லவா? அப்படித்தானே கூறிக்கொண்டு இணக்க அரசியலும் நடத்தி, எதிரக் கட்சித் தலைவர், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர், அபிவிருத்திக் குழுக்களின், ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைமைகள் போன்ற பதவிகளை பெற்றுள்ளார்கள்! அத்தகைய இந்த ஆட்சியில் அதை செயற்படுத்தியிருக்கலாம்தானே?…

ஏன் இவர்களால் முடியாது? தங்களால் செய்ய முடியாதவற்றைத்தான் இவர்கள் தீர்மானங்களாகக் கொண்டு வருகிறார்கள் என்பது இந்த விடயத்திலிருந்தே தெரிய வரவில்லையா? அல்லது, தங்களால் எதனையும் செய்யத் திறமை, அக்கறை, ஆளுமை என்பன எதுவுமே இல்லை என்பதை இது எடுத்துக்காட்டவில்லையா?

Related posts:

தகரத்திற்கு தங்க முலாம்!.. தேர்தல் கோசத்திற்கு தமிழ் தேசிய முலாம் பூசப்படுகின்றது எனக் கூறுகின்றார்...
ஜா எலை மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பில் கல...