ஜா எலை மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, September 8th, 2020

இலங்கையில் முதலாவது மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலையாக நிர்மாணிக்கப்பட்ட எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை நாளொன்றுக்கான சராசரி 1500 கிலோ வரை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (07.09.2020) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மீன் உணவு உற்பத்திகளை அதிகரிப்பதில் காணப்படும் சவால்கள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனமானது தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (நாரா) ஆலோசனையுடன்  கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிறுவனமானது இலங்கையில் மீன்களுக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடும் முதலாவது நிறுவனமாகும்.

தற்போது இங்கு மீன்களுக்கான உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும் இயந்திரங்களின் வினைத்திறனற்ற செயல்பாடுகள் காரணமாக உற்பத்தியை முழுவீச்சுடன் மேற்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. இத்தொழிற்சாலை அமைக்கப்பட்ட போது விசேடமாக தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் தற்போது உலகில் பாவைனையில் உள்ள அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்ளுக்கு இணையானவை அல்ல என்பதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

நாரா நிறுவனத்தின் பொறியியலாளர்களும் எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின் பொறியியலாளர்களும் இவ்வியந்திரங்களை நவீனமயப்படுத்தவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதும் இத்தொழிற்சாலையின் மூலம் தற்போது நாளாந்தம் குறிப்பிட்ட அளவிலான மீன் உணவுகளையே உற்பத்தி செய்யக் கூடியதாக உள்ளது.

ஆகவே பொருத்தமான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களை பெற்றுத் தருமாறு இத்தொழிற்சாலையின் உரிமையாளர்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் இந்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து பொருட்களையும் இலங்கையிலேயே உற்பத்தி செய்யும் கொள்கையின் அடிப்படையில் நாட்டுக்கு தேவையான மீன் உணவவு அனைத்தையும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமென தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த தொழிற்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்து தீர்க்கமான மற்றும் சாதகமான முடிவொன்றை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாரா நிறுவனத்தின் பொறியியலாளர்கள் புதிய இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதைவிட இருக்கும் இயந்திரங்களை மேலும் மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொழிற்சாலைக்கான தனது விஜயத்தின் பின்னர் இவ்விடயம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா, எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜயந்த குரே, கடற்றொழில் ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோம, நாரா நிறுவனத்தின் பொறியியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts:

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது பொய்முகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்...
யாழ். மாவட்ட இளைஞர் சமேளனத்திற்கான நிர்வாகக் குழு அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான பொருளாதா எதிர்காலத்தினை அரசாங்கம் உருவாக்கு...

முற்றுகைக்குள் சிக்கியிருந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர்களை சிறை மீட்டெடுத்தார் டக்ளஸ் தேவானந்தா!
நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்கா...
சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட ...