வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.கேள்வி!

Friday, March 15th, 2019

வடக்கு மாகாணத்திலே நீருக்கான – குடி நீருக்கான தட்டுப்பாடு எந்தளவிற்கு இருக்கிறதென்பதை கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நன்கறிவார்கள்.

அண்மையில் கூட இரணைமடு திட்டம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தபோது, ‘இரணைமடுத் திட்டத்தை அரசியல் ஆக்க வேண்டாம்’ எனத் தெரிவித்திருந்தார். இது உண்மை. யாழ்ப்பாணத்திற்கான உத்தேச இரணைமடு குடிநீர்த் திட்டமானது, கிளிநொச்சி வாழ் மக்களுக்கு எவ்விதமான பாதிப்புகளையும் கொண்டுதரப் போவதில்லை என்ற போதிலும், சில சுயலாப அரசியல்வாதிகள் இதனை அரசியல்மயப்படுத்தி வருகின்றனர்.

எனினும், இந்த பின்புலத்தை அறிந்துகொண்டுள்ள கௌரவ அமைச்சர் ஹக்கீம் அவர்கள் எமது மக்களின் நன்மை கருதி அத் திட்டத்தை நிச்சயமாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதேநேரம், இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகளின்போது ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக தற்போது ஒரு மாத காலமாக குளத்திலுள்ள அதிகளவிலான நீர் வெளியேறி வீண் விரயமாகி வருவதாக விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்தும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யாழ் குடாநாட்டுக்கான குடிநீர் தேவையினைத் தீர்ப்பதற்காக இரணைமடு திட்டத்திற்கு மேலதிகமாக, வேறு திட்டங்கள் குறித்தும் அவாதானங்களைச் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, மழை காலங்களில் பெறப்படுகின்ற நீரே நிலத்திற்குள் சென்று சுண்ணாம்புக் கற்பாறைகளுக்குள் சேகரிக்கப்படுவதால் நிலத்தடி நீர்வளம் பேணப்படுகின்றது. எனினும், நிலத்தினுள் செல்லக்கூடிய நீரின் அளவினைவிட அதிகளவு நீர் விவசாயத் தேவைகளுக்கென வெளியேற்றப்படுகின்ற காரணத்தால், அங்கு ஏற்படுகின்ற வெற்றிடங்களை கடல் உவர் நீர் புகுந்து நிரப்புகின்ற தாக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன.

எனவே, ஏற்கனவே இருக்கின்ற உவர் நீர்த் தடுப்பனைகளை மறுசீரமைப்பதும், புதிதாக பல்வேறு பகுதிகளிலும் – உவர் நீர்த் தாக்கங்கள் உள்ள பகுதிகளில் அமைப்பதும் தொடர்பில் அதிகளவிலான அவதானங்கள் செலுத்துப்பட வேண்டும். இதே நிலைமையே கிளிநொச்சி மாவட்டத்திலும் காணப்படுகின்றது என்றார்.

Related posts: