வடக்கிற்கென தனியான வங்கி ஒன்றை நிறுவி மக்களுக்கு உதவவேண்டும் – யாழ்.வர்த்தகர் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா!

சமூகம் சார்ந்து உழைப்பது மட்டுமன்றி அதற்காகவே தொடர்ந்தும் எனது அரசியலுக்கூடாக பல்வேறுபட்ட பணிகளை முன்னெடுத்து வருகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட வர்த்தகர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ் குடாநாட்டில் மட்டுமல்லாது வடபகுதி வர்த்தகர்களுடன் பொது மக்களும் அரச மற்றும் தனியார்துறை நுண்கடன் திட்டங்களினால் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனால் மனரீதியான தாக்கங்களுக்கு உள்ளாகும் அதேவேளை தற்கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைகிறது.
எனவே இதுவிடயத்தில் வர்த்தகர்களும் மக்களும் எதிர்காலத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும். அந்தவகையில்தான் எனது நீண்டகால எண்ணமான வடமாகாணத்தக்கென தனியான வங்கி ஒன்றை நிறுவி அதனூடாக வர்த்தகர்களுக்கும் மக்களுக்கும் உதவவேண்டும் என்பதே எனது அவாவாகும்.
தென்னிந்தியாவிலிருந்து கொழும்பு ஊடாக வடபகுதிக்கு கொண்டுவரும் பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்படும் நிலையில் அவற்றை தென்னிந்தியாவிலிருந்து நேரடியாக வடமாகாணத்திற்கு தருவிக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படும் இடத்து வியாபாரிகளும் மக்களும் நன்மையடைய வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
குறிப்பாக வடக்கு மாகாணசபை சரியாக இயங்கும் பட்சத்தில் எமது மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமன்றி ஏனைய பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்படாது. இவ்விடயத்தில் வடக்குமாகாணசபை அக்கறையற்றிருப்பது வேதனையளிப்பதாக டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
குறித்த சந்திப்பின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன், யாழ்ப்பாணம் வர்த்தகசங்க தலைவர் ஜெனக்குமார், சட்டத்தரணி ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|