வடக்கிற்கு பனங்காய் தெற்கிற்கு தேங்காய் – கூட்டமைப்பு வீழ்த்திய இரண்டு காய்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, March 23rd, 2019

பொறுப்பு கூறல் என்பது இந்த நாட்டின் கடமை. தேசிய நல்லிணக்கத்தை நோக்கி செல்வதாகக் கூறும் உங்களது கடமை. உங்களைக் கொண்டு இதனை இப்போதல்ல, நல்லாட்சி என்ற அரசு ஆட்சிபீடமேறிய போதே செய்வித்திருக்க வேண்டியது உங்களை – அதாவது இந்த அரசை கொண்டு வந்தவர்கள் எனக் கூறிக் கொள்பவர்களும், கடந்த ஆட்சி மாற்றத்தின்போது இந்த ஆட்சியை மீளக் கொண்டு வருவதில் நாடாளுமன்றம் முதற்கொண்டு, உயர் நீதிமன்றம் வரையில் முழு முயற்சிகளையும் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கடமையாகும் இதை யாரும் மறுக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, வெகுசன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இலங்கைக்கு இன்னும் இரண்டு வருட கால அவகாசம் வாங்கிக் கொடுப்பதில் இந்த அரசின் பின்னின்று முதன்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உழைத்துள்ளனர். அது அவர்களது ஊதியத்திற்கானதும், ஆடம்பர சலுகைகளுக்கானதுமான உழைப்பு. மறுபக்கத்தில், கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும் சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும் என்றும் அதே தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும் கத்திக் கத்தி உழைக்கின்றனர். இது, அடுத்த தேர்தலில் தமக்கான தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்கான அவர்களது உழைப்பாகும்.

இதற்கு, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். இந்தத் தமிழ்த் தேசியத் தரப்பினர் ஒரு படி மேலே போய், ஒரு கல்லில் தேங்காயும், பனங்காயும் வீழ்த்தி தென்;பகுதிக்கும், வடக்கிற்கும் கொடுத்துவிட்டு, இரண்டு வருடங்களுக்கு இது போதும் சப்பிக் கொண்டிருங்கள் எனக் கொடுத்துவிட்டு, வடக்கிலும், தெற்கிலும், வெளிநாடுகளிலும் உல்லாசமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியம் என இவர்கள் கூறுகின்ற இவர்களது அரசியல் அகராதியில் ஐந்தே  ஐந்து வார்த்தைகள்தான் உள்ளன. அதாவது தேர்தல் காலங்களில், இந்த அரசை – அல்லது அவர்கள் சொல்கின்ற அரசை ‘நம்புகின்றோம்’ என்ற வார்த்தை. பிறகு அந்த அரசுடன் சில காலம் ஒட்டி உறவாடிக் கொண்டே, தங்களுக்கு தேiவாயன அனைத்தையும் பெற்றுக் கொண்டே இடையில், இந்த அரசு ‘ஏமாற்றுகிறது’ என்றொரு அறிக்கையை விடுவார்கள். அதுவும், தீராத எமது மக்களது பிரச்சினைகள் சற்று உக்கிரமாகும்போது அப்படியொரு அறிக்கை வரும். பின்னர் சிறிது காலம் கழித்து ‘அரசை நம்ப முடியாது’ என்றொரு கதையை அவிழ்த்து விடுவார்கள். இறுதியாக, அடுத்த தேர்தல் நெருங்கும்போது அரசு ஏமாற்றிவிட்டது” என்றொரு அறிக்கையுடன், ‘சர்வதேசம் தலையிட வேண்டும்’ என்றொரு அறிவிப்பும் வரும்.

ஆக, நம்புகின்றோம், ஏமாற்றுகின்றது, நம்ப முடியாது, ஏமாற்றிவிட்டது, சர்வதேசம் தலைலயிட வேண்டும். என்கின்ற ஐந்து வார்த்தைகளை வைத்துக் கொண்டு தொடர்ந்து அரசியல் செய்து வருகின்ற இவர்களிடம் இருந்து எமது மக்கள் வேறெதனை எதிர்பார்க்க முடியும்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

கடந்த வருட இறுதியில் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற்றது. அதன்போது இந்த தற்போதைய ஆட்சியை மீளக் கொண்டு வருவதில் இந்த நாட்டில் மிகக் கடுமையாக உழைத்த ஒரு தரப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை எல்லோரும் அறிவார்கள். அடுத்த தரப்பினர் சர்வதேசத்தினர் என்பதையும் எல்லோரும் அறிவார்கள்.

இத்தகையதொரு நிலையில், ‘சர்வதேசம் தலையிட வேண்டும்! சர்வதேசம் தலையிட வேண்டும்!’ என்றால், சர்வதேசம் யார் பக்கம் நிற்கப் போகிறது? என்ற கேள்வி எழுகின்றபோது, சர்வதேசம் நிச்சயமாக அரசு பக்கம்தான் நிற்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமேயில்லை. இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரியாத விடயமல்ல, ஏனெனில் அவர்கள்தான் இந்த அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு இத்தகைய காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில், மக்கள் மத்தியில் போலி நாடகத்தை அரங்கேற்றி வருகின்றார்கள். அரசுடன் ஒருவர் உட்கார்ந்துகொண்டு, அரசுக்கு சார்பான அனைத்தையும் தயாரிக்கின்றார். அவரே ஜெனீவாவுக்குப் போய் தமிழர் தரப்பிலும் உட்காருகின்றார் அவரது அணியைச் சேர்ந்த இன்னொருவர், ‘இலங்கை அரசுக்கு ஏன் இரண்டு வருட காலக்கெடு?’ எனக் கேட்கிறார். இறுதியில் அவர்கள் எதிர்பார்த்தாற்போல் இரண்டு வருட காலக்கெடு கொடுக்கப்படுகிறது. எல்லோரும் சிரித்தபடி கைகொடுத்துவிட்டு, மீண்டும் ஜெனீவாவில் சந்திப்போமெனக் கூறிவிட்டு, தங்களது வருமானங்களைப் பார்க்கப் போய்விடுகிறார்கள்.  இதுதான் இவர்களது ஜெனீவா என்கின்ற நாடகம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Related posts:

அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி...
இலங்கை – இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர் விவகாரம்: இருநாட்டு கடற்றொழிலாளர்களது நலன்களும் பாதுகா...
இந்திய இழுவலைப் படகுகள் மூலமான பிரச்சினை விரைவில் தீரும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

சரியான தீர்மானங்களை மக்கள் எடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் – டக்ளஸ் தேவானந்தா!
பொருளாதார மீட்சி என்று கூறி மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் - டக்ளஸ் எம...
வடமாராட்சி கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் விவசாய செயற்பாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுத் ...