மாற்றம் ஒன்றுக்காக மக்களுக்கு சரியான வழியைக் காட்டுங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் விளக்கம்.

தமிழ் மக்களுக்கு தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வந்துள்ள போலித் தமிழ்த் தேசியவாதிகளின் சாயம் வெளுக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர்களை எதிர்த்து மக்கள் வெளிப்படையாக கேள்விகளையும், விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். எனவே தோழர்களும், கட்சி உறுப்பினர்களும், கட்சி ஆதரவாளர்களும் மக்களுக்கத் துணையாகவும், அவர்களின் குரலுக்கு வலுவாகவும் மக்களிடம் செல்லுங்கள் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறினார்.
யாழ்ப்பாணம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் தேசிய,மாவட்ட நிர்வாகிகள், தொகுதி, வட்டார அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்களுடனான விஷேட கூட்டத்திலேயே செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,
நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது இரவு பகலாக எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வைக்காண்பதிலும் அக்கறையாகச் செயலாற்றினோம். ஆனால் இப்போது அபிவிருத்திப் பணிகள் தொடராமலும், எமது மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலும் இருக்கின்றன.
தற்போது மாவட்ட அபிவிருத்திக் குழுச் செயற்பாடுகள் அர்த்தமற்றதாகவே காணப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிக்கான அக்கறைக்கான வேலைத்திட்டங்கள் நடைபெறாமலும், வடக்கு மாகாணசபை செயற் திறனற்றும் இருப்பதாலும் எமது மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளும் அடிப்படைப் பிரச்சினைகளும் தீர்வில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
எனவே மக்களைச் சந்தித்து நிலைமைகளை தெளிவுபடுத்தி உரையாடுங்கள். அவர்களின் நலன்சார்ந்த போராட்டங்களுக்கு எழுச்சியோடு துணையாக செயற்படுங்கள். நாம் அதிகாரத்தில் இருந்தபோது ஆற்றிய பணிகளை மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள். மக்களை சரியான திசை நோக்கி வழி நடத்துங்கள். தமிழ் உணர்வைத் தூண்டியும், போலித் தமிழ்த் தேசியம் பேசியும் மக்களின் வாக்குகளை அபகரித்தபின் மக்களை மறந்து சுகபோக வாழ்க்கை வாழும் கயவர்களை மக்களுக்கு இனங்காட்டுங்கள். மாற்றம் ஒன்றின் அவசியத்தை உணர்த்துங்கள் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலத்தில் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு கிடைத்த பல வாய்ப்புக்களை தமிழ்த் தலைமைகள் எனப்பட்டோர் தவறவிட்டும், குழப்பியடித்தும் உள்ளனர். அவ்வாறு ஒரு தவறு நடைபெறுவதற்கு இனியும் அனுமதிக்க முடியாது.
அதற்காக தமிழ் மக்கள் சரியான திசையில் சரியானவர்களுடன் அணி திரண்டு வருவார்களானால் எமது அரசியல் உரிமைகளை எம்மால் வென்றெடுக்க முடியும் எமக்கு கிடைக்கம் அரசியல் பலமே தமிழ் மக்களின் தற்போதைய அநாதரவான தலைவிதியை மாற்றிஎழுதும் என்றும் கூறினார்.
Related posts:
|
|