மணலை அகழ்வு தொடர்பில் மீண்டும் விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Tuesday, March 19th, 2024

பேரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகப்பகுதி முழுவதும் மணல் நிறைந்து காணப்படுவதை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  குறித்த பிரதேசத்தில் மணலை அகழ்வது தொடர்பில் மீண்டும் விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை அப்பிரதேசத்தில் சிறிய படகுகளைப் பாவித்து கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு வசதியாக பொறுத்தமான இடத்தில் இறங்குதுறையை அமைப்பது குறித்து அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விஷேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் பேரலிய மீன்பிடித் துறைமுகப்பகுதியில் காணப்படும் மணல் பிரச்சினை தொடர்பாக கருத்துரைக்கும் போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறிப்பாக காலியில் இருந்து பாணந்துறை வரையான மீன்பிடித் துறைமுகங்கள் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் காலி மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்று அங்கு படகு உரிமையாளர்களையும், தொழிலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதனிடையே ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகத்திற்கும் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு மீன்பிடித்துறைமுகத்தின் நுழைவாயிலில் நிறைந்து காணப்படும் மணலை அகற்றித் தருமாறு படகு உரிமையாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்ததுடன் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் ஹிக்கடுவ பிரதேச மீன்பிடித் துறைமுகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடிய கடற்றொழிலாளர்கள் குறித்த மீன்பிடித் துறைமுகத்தில் 150 க்கும் அதிகமான சிறிய படகுகளும், 35 க்கு மேற்பட்ட பலநாள் படகுகளும் தரித்து தொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வெளிமாவட்ட படகுகளும் அதிகமாக வந்து செல்வதால் ஏற்படும் நெருக்கடி தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் குறித்த துறைமுகப்பகுதியிலுள்ள சிற்றூண்டிச் சாலையையும் புனரமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேவேளை தொடந்துவ பிரதேசத்தில் சிறு படகுத் தொழில் செய்வோரின் வேண்டுகோளுக்கு அமைய சிறிய படகு இறங்குதுறைப் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு உல்லாசப் பயணிகளுக்கு உகந்த கடற்கரையோரப் பகுதியும், கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பகுதியும் அருகருகே இருப்பதால் அந்தப்பிரதேசத்தை இரு தரப்புகளும் இடையூறு இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளும்  அதேவேளை அப்பிரதேசம் சுத்தமாகவும் இருக்கவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தொடந்துவ மூன்பிடித்துறைமுகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு ஏற்கெனவே கடற்றொழிலாளர்களால் முன் வைக்கபரபட்ட கோரிக்கைக்கு அமைய மீன்பிடித் துறைமுகத்தின் முகத்துவாரப் பகுதியையும் , படகுகள் உள்வர முடியாமல் மணல் நிறைந்து இடையூறு ஏற்படுவதையும் பார்வையிட்டார்.

அங்கு மணலை அகற்றவும் , படகுகளை பாதுகாப்பாக வைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அங்கு கூடியிருந்த கடற்றொழிலாளர்கள் மேலும் சில கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அரசியல் நாடகங்களைத் தவிர்த்து எமது மக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
ஊழல், மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற கருத்துகள் யாவும் வெறும் அரசியல் பேசு பொருளாகவ...
முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...