கிளிநொச்சி கல்விச் சமூகத்திற்கு பொது நிதியம் உருவாக்க அமைச்சர் டக்ளஸ் புதிய திட்டம்!

Wednesday, August 17th, 2022

வெளிப்படைத் தன்மையுடனான நிதியம் ஒன்றினை உருவாக்கி கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் கணிசமானவற்றை தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராயும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி தெற்கு வலயப் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களை நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சந்தித்த அமைச்சர், வடக்கு வலயப் பாடசாலைகளின் அதிபர்களையும் ஆசிரிய ஆலோசகர்களையும் இன்று(17.08.2022) வலயக் கல்விப் பணிமனையில் சந்தித்திருந்தார்.

இதன்போது, கல்வி வலயங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றமை தொடர்பாகவும் வலய ரீதியில் எதிர்கொள்ளப்படும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அதேபோன்று, பாடசாலைகளில் நிலவுகின்ற உட்கட்டமைப்பு பிரச்சினைகள், பௌதீகவளக் குறைபாடுகள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பெரும்பாலான ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தினை சேர்ந்தவர்களாக இருக்கின்ற நிலையில், வடக்கு மாகாண போக்குவரத்து சபையின் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிபர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான போக்குவரத்து சேவையை ஒருங்கிணைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், மாகாணம் சார்ந்த அதிகாரிகளின் பங்குபற்றலுடனான கலந்துரையாடலை ஒழுங்குபடுத்தி மாகாண ரீதியில் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்த அமைச்சர், மத்திய அரசாங்கத்தின் மூலம் அணுகப்பட வேண்டிய விடயங்களை உரிய தரப்புக்களின் ஊடாக நிறைவேற்றித் தரப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய பொருளாதார சூழலில் அரசாங்கத்திடம் இருந்து பெருமளவு நிதியினை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர், நிலைபேறான சக்தி உருவாக்கம், கடற்றொழில், நீர்வேளாண்மை உட்பட்ட தொழில் துறைகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் செலுத்துகின்ற முதலீட்டாளர்களிடமிருந்து, சமூகக் கட்டுமானத் திட்டத்திற்கு கணிசமானளவு நிதியுதவியினைப் பெற்று, அதனை அரசாங்க அதிபர் தலைமையில் கல்விச் சமூகம் உள்ளடக்கிய நிதியம் மூலம் முகாமைத்துவம் செய்வதுடன், அவற்றைப் பயன்படுத்தி பாடசாலைகளில் காணப்படும் வரையறுக்கப்பட்டளவிலான உட்கட்டமைப்பு மற்றும் பௌதீகவளப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துவதற்கு கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த ஆசிரியர்களை மாவட்டத்திற்கு உள்ளேயே சேவையில் ஈடுபடுத்துவதும், கிளிநொச்சி மாவட்ட பட்டதாரிகளில் கணிசமானவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க வேண்டும் எனவும் பாடசாலை அதிபர் ஒருவர் முன்வைத்த கோரிக்கையை பாராட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி சாத்தியமான தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- 17.08.2022

Related posts:

வாழ்வின் இருப்பே கேள்விக்குறியாக இருந்தபோது கரங்கொடுத்து தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா - புங்...
தெளிவற்ற வரிச் சுமையை மக்களே சுமக்கின்றனர் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்...

நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பில் பெண்கள் அதிக ஈடுபாடுகளைக் கொள்வதற்கு  உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்...
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடுப்பங்களின் மேம்பாட்டிற்கு விஷேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் திடீர் வீழ்ச்சி - பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உர...