மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வனவளத் திணைக்களம் தடையாகவுள்ளது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Thursday, April 4th, 2019

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழிருக்கின்ற காஞ்சிராமோட்டை கிராமத்தில் மக்கள் மீள்குடியேறுவதற்கு வனவளத் திணைக்களம் தடை விதித்து வருகின்ற ஒரு நிலைப்பாடு அங்கே காணப்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

காஞ்சிராமோட்டை கிராமத்திலிருந்து 1990களில் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இவர்களில் பலர் இந்தியாவுக்குச் சென்றிருந்து, தற்போது மீளத் திரும்பி வருகின்ற நிலையில்கூட இத்தகைய தடையானது அம் மக்களை பெரிதும் பாதிக்கின்ற – அம் மக்களது வாழ்விடங்களையே இன்று கேள்விக்குட்படுத்தி வருகின்ற விடயமாகவுள்ளது. 

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் மீள்குடியேறியுள்ள எமது மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதிலும் இந்த வனவளத் திணைக்களமே இன்று தடையாக இருந்து வருகின்றது.

இப்படியே வடக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளை வனவளத் திணைக்களமானது சொந்தம் கொண்டாடி வருகின்ற நிலையில், எமது மக்களின் வாழ்க்கையானது பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டே காணப்படுகின்றது.

குறிப்பாக, வவுனியா மாவட்டத்தில் 157 குளங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 66 குளங்களும், மன்னார் மாவட்டத்தில் 98 குளங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 78 குளங்களுமாக மொத்தமாக 399 குளங்கள் வனவளத் திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவே தெரிய வருகின்றது.

அதேநேரம், மேற்படி குளங்களின் கீழ் விவசாய செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள விவசாயக் காணிகள் குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர், கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1,600 ஏக்கர், மன்னார் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்து 150 ஏக்கர், வவுனியா மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 750 ஏக்கர் என விவசாயக் காணிகளையும் வனவளத் திணைக்களமே தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

அதுமட்டுமல்ல, கிளிநொச்சி ஊற்றுப்புலம் குளம், வவுனியா நீரியமோட்டைக்குளம், சித்தான்குளம், முல்லைத்தீவில் நஞ்சுண்டகுளம் போன்ற குளங்கள் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழிருந்தும், அக் குளங்களின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கென நிதி ஒதுக்கீடுகள் மேற்கொண்டுள்ள போதும், அந்தக் குளங்களின் புனரமைப்புப் பணிகளுக்கும் இந்த வனவளத் திணைக்களம் தடைகளை விதித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இத்தகையதொரு மோசமான நிலைமையானது வனவளத் திணைக்களத்தின் மூலமாக ஏற்படுத்தப்படுகின்ற நிலையில், எமது மக்கள் வாழ்வதற்கான சாதக நிலைமைகள் மறுக்கப்பட்டவர்களாக வாழ வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்ற அரச நிறுவனங்கள் காணி, நிலங்களை கைப்பற்றிக் கொள்வது தொடர்பில் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இதற்கென ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, அந்த ஆணைக்குழுவின் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, எமது மக்கள் இடப் பெயர்வுகளுக்கு முன் வாழ்ந்திருந்த இடங்கள், வாழ்வாதாரங்களில் ஈடுபட்டிருந்த இடங்கள் யாவும் இனங்காணப்பட்டு, அவை அனைத்தும் எமது மக்களுக்கென விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

Related posts: