நீதிக்காக காத்திருக்கும் சூழலிலேயே தமிழ் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, November 7th, 2017

தமிழ் மக்கள் தமக்கான நீதிக்காக காத்திருக்கும் சூழலுக்குள்ளே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட மூலங்களை திருத்துவதற்கான இரண்டாம் (2) ஆம் வாசிப்பு நிலை விவாதம் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில் –

போர்க்குற்ற விசாரணைகள், மனித உரிமை மீறல்கள், காணாமல் போனவர்கள் தொடர்பான முறப்பாடுகள் ஆகியவற்றுக்கு நம்பகமான விசாரணைப் பொறிமுறையின் ஊடாக பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

அத்தகைய விசாரணகளின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், பரிகாரமும் கிடைக்கச் செய்வது நாம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இவ்விடயங்களில் நீதி கிடைக்க வேண்டும் என்று காத்திருக்கும் மக்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைக்க வழி செய்யப்படாமல் காலந்தாழ்த்தப்படுமாக இருந்தால் அது நீதி மறுக்கப்படுவதற்கு ஒப்பானதாகும்.

அதேபோல் புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்ட போது தன்னை கொலை செய்ய முயன்றவர் என்று கூறப்பட்டவருக்கு பொது மன்னிப்பு வழங்கி தனது நல்லெண்ணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தினார்.

அதுபோல் 1998ஆம் ஆண்டு என்னைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கியவர்களுக்கும், என்னை தற்கொலைத் தாக்குதல் நடத்தி கொலை செய்வதற்கு முயற்சி செய்தவர்களுக்கு உதவியதாக குற்;றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் நீதிமன்றம் தண்டனைகளை வழங்கி தீர்ப்புகளை வழங்கியிருந்தாலும், அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் என்பதால் அவர்களை மன்னித்து பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று நானும் விரும்புகின்றேன். எனது விருப்பத்தை அடிக்கடி வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றேன்.

இவ்வாறான சூழலில் பல ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டு தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து இந்த அரசாங்கம் தனது நல்லிணக்கச் சமிக்ஞையை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் இச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கூறிவைக்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:


தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் ...
வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
சட்டத் திருத்தங்கள் முழுமையாக அமுல்ப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்:- அமைச்சர் டக்ளஸ் ஆதங...