தமிழ் மக்கள் நலன் கருதிய இலக்கானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலத்திலேயே எட்டப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, February 9th, 2024

எமது மக்கள் நலன் கருதிய இலக்கானது எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களது காலத்திலேயே எட்டப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் இன்றையதினம் (09.02.2024) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இச்சாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, அரசியல் தீர்வுப் பிரச்சினையாக இருந்தாலும் சரி. இந்த காலகட்டத்ததை நாம் தவற விடுவோமானால், மீளவும் இத்தகையதொரு பொன்னான காலத்தை நினைத்துப் பார்க்க இயலாது என்றே கருதுகிறேன்.

தேர்தல்களில் நாங்கள் தனித்தனியே போட்டியிடுவோம். நாட்டைக் கட்டி எழுப்புவதில் ஒன்றிணைவோம் என்ற ஜனாதிபதி அவர்களது அழைப்பினையே நான் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்த நாடு அனைத்து நிலைகளிலும் வீழ்ந்திருந்த நிலையில், இந்த நாடு இத்தனைக் குறுகிய காலத்துள் இந்தளவு எழுந்திருக்கும் என எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள். அது இன்று சாத்தியமாக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய சாதனையை நிகழ்த்திக் காட்டி வருகின்ற ஜனாதிபதி அவர்களால், எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்றில்லை.

அவருக்கு எமது அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்புகள் முழுமையாக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் அவை அனைத்தும் சாத்தியமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.

அந்த நம்பிக்கையை நிறைவேற்ற அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது  

000

Related posts: