சிறுமி சேயா படுகொலை வழக்கு போல் மாணவி வித்தியா படுகொலை வழக்கும் துரிதப்படுத்தப்பட வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 17th, 2016

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த 2015 மே மாதம் 13ம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், இவ் வழக்கு இன்னும் தொடரும் நிலையிலேயே உள்ளது. தீர்ப்புகள் வழங்கப்படக் கூடிய நிலை காலதாமதமாகி வருவதானது, எமது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலையைத் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் 2015 செப்டெம்பர் மாதம் 11ம் திகதி கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயாவின் வழக்கு தொடர்பில் கடந்த 15ம் திகதி நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புங்குடுதீவு மாணவியின் படுகொலைச் சம்பவத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணம் சென்று, அம் மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்த தாங்கள், இந்த மாணவியின் படுகொலை தொடர்பில் விசாரணை செய்ய விசேட நீதிமன்றம் அமைப்பதாக வாக்குறுதி வழங்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனவே, இந்த வழக்கு தீர்ப்பின்றித் தொடரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணைகளை துரிதமாக முடித்து, உரிய தீர்வை வழங்குமுகமான நடவடிக்கைகளை உடனடியாகத் தாங்கள் எடுக்க வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Related posts:

வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழரது வரலாறு இருட்டடிப்பு தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் டக்ளஸ் த...
போராட்டத்தின் பங்காளிகளே மாகாணசபையை நிர்வகிக்க வேண்டும் - டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
நாடு இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் அதை நிலையானதாக முன்னெடுத்துச்செல்ல அனைவரும் ஒத்த...