கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியதுபோல் மக்களது வாழ்வியலையும் பலப்படுத்து வேன் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, October 16th, 2017

யுத்தத்தால் அழிந்து சிதைந்துபோன கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவன் என்ற வகையில் எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்திகளை மக்களின் அதிகரித்த அரசியல் பலத்தோடு முன்னெடுப்பதற்கு நான் தொடர்ந்தும் தயாராக இருக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகச் செயலாளர்கள் சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யுத்தகாலத்தின்போது இம்மாவட்டத்தில் எமது கட்சியினூடாக பணிகளை முன்னெடுக்கமுடியாத துர்ப்பாக்கியம் இருந்துவந்ததை யாரும் மறக்கமாட்டார்கள். ஆனால் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அழிந்து சிதைந்துபோன கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தியால் கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு அப்போது அமைச்சராக இருந்த என்தலையில் சுமத்தப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அந்த தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்ட நான், இம்மாவட்டத்தில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் இலக்காக கொண்டு அப்போதைய எனது அமைச்சினூடாகவும் கட்சியின் நிதிப் பங்களிப்புடனும் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்தது மாத்திரமன்றி, உட்கட்டுமானம் உள்ளிட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் செயற்படுத்தி காட்டியுள்ளேன்.

விஷேடமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கென 1978 ஆம் அண்டு முதல் முயற்சி செய்யப்பட்டுவந்த பொறியியல் பீடத்தை எனது அரசியல் அணுகுமுறை காரணமாக கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பித்ததுடன் விவசாய பீடத்தையும் மீளவும் இங்கு ஆரம்பித்தமைக்கு என்னைத்தவிர வேறு யாரும் உரிமை கோரமுயாது.

எமது மாணவர்கள் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு சென்று பொறியியல் பட்டங்களை பெற்றுக்கொள்வதில் இருந்த இடர்பாடுகளுக்கு தீர்வுகாணும் வகையிலேயே அந்த பொறியியல் பீடத்தை கிளிநொச்சியில் ஆரம்பிக்கவேண்டும் என்பதில் எப்போதும் அக்கறையுடனும் விடாமுயற்சியுடனும் செயற்பட்டிருந்தேன்.

அதனூடாகவே எனது முயற்சிக்கு இன்று பலன் கிடைத்துள்ளமையையிட்டு நான் மனநிறைவடைகின்றேன். இருந்தபோதிலும் மக்களின் தேவைகள் பல இன்றும் பூரணப்படுத்தப்படாத நிலையில் இருப்பதனால் அவற்றுக்கும் உரிய தீர்வுகள் எட்டப்படவேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும்.

அவற்றை நிறைவு செய்வதற்கு மக்கள் இனிவருங்காலங்களில் தமக்காக சேவை செய்யும் சரியான அரசியல் தலைமையாக எம்மை தெரிவுசெய்வதனூடாகவே இது சாத்தியப்படும் என்பதை உணர்ந்து எமக்கு அரசியல் பலத்தை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன், வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளர் லிங்கேஸ், முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ் (கிருபன்) யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:

போக்குவரத்து விதிகள் தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் - டக்ளஸ் தேவானந்தா வல...
தேசிய நல்லிணக்க உருவாக்கத்தில் இரு மொழிக்கொள்கை அமுலாக்கம் அவசியமாகும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
"எமது மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதிலேயே முழுமையாக அக்கறை செலுத்த...