கடந்தகால அனுபவங்கள் எதிர் காலத்திற்கான திறவுகோலாக இருக்கவேண்டும் – நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, April 25th, 2017

கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு எதிர்கால வளமான வாழ்வை நிர்ணயிக்கும் பொறுப்பை உணர்ந்து கொண்டவர்களாய் மக்கள் சரியான அரசியல் தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற உடுவில் உதயசூரியன் விளையாட்டுக் கழக நிர்வாகத்தினருடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் காலங்களில் மக்கள் எமக்கு பூரணமான ஆதரவை வழங்கி எமது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்களேயானால் அவர்களது வாழ்வை நிச்சயம் நாம் பாரிய மாற்றத்தை நோக்கி கொண்டு செல்ல முடியும்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நம்பி மக்கள் எம்மை அத்தேர்தலில் வெற்றிபெற வைத்திருப்பார்களேயானால் இந்த மூன்று வருடங்களுக்குள் வடமாகாணத்தை கல்வியிலும், பொருளாதாரத்திலும், மக்களின் நாளாந்த வாழ்வியலிலும் பாரிய முன்னேற்றங்களை கண்டிருக்கக்குடியதான வழிவகைகளை ஏற்படுத்தியிருப்போம்.

அதற்கான திறனும் மக்களின் பாலான அக்கறையும் எம்மிடம் இருக்கின்றன. ஆனால் வடக்கு மாகாண சபை துரதிஷ்டவசமாக ஆற்றலும் அக்கறையும் இல்லாதவர்களின் கைகளுக்கு சென்றதனால் அது இன்று செயலற்றுப்போயிருக்கின்றது. இதேபோன்றுதான் நாடாளுமன்றத் தேர்தலிலும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொண்டவர்கள் மக்களுக்கு எதனையும் செய்யாத நிலையில் இன்று மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களை தமிழ் தலைவர்களே தட்டிக்கழித்து விட்டனர் என்று தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா  உசுப்பேற்றல்களும், உணர்ச்சிப் பேச்சுக்களும் எமது மக்களுக்கு ஒருபோதும் எதனையும் பெற்றுத்தரப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த, நிகழ்கால அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் தமது வாழ்வை மட்டுமன்றி பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் மக்கள் சரியான அரசியல் தலைமைகளை தெரிவு செய்ய வேண்டியது அவசியமானது என்பதுடன் அதனூடாகவே மக்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலின் போது உதயசூரியன் விளையாட்டு கழகத்திற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட உதவித் திட்டங்களுக்கு கழக நிர்வாகிகள் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதன்போது யாழ்..மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் (ஜீவன்), வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் வலன்ரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts: