பூநகரியில் மீண்டும் சுற்றுலா நீதிமன்றம் – நீதி அமைச்சரிடம் கடற்றொழில் அமைச்சர் வேண்டுகோள்!

Saturday, October 24th, 2020



பூநகரியில் சுற்றுலா நீதிமன்றத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பூநகரி, முழங்காவில், அக்காராயன், ஜெயபுரம், நாச்சிக்குடா போன்ற பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைய நீதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்திலேயே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏ9 பிரதான வீதிக்கு மேற்க்குப் பக்கமாக இருக்கின்ற குறித்த பிரதேசங்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லையினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் கிளிநொச்சி நகர எல்லைக்குள் காணப்படுகின்றது.
எனினும் முழங்காவில், நாச்சிக்குடா போன்ற பிரதேசங்கள் கிளிநொச்சியில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. அதேபோன்று பூநகரி 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

எனவே, குறித்த பிரதேங்களில் இருந்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திற்கு வருகின்ற மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன், குறித்த பிரதேசங்களில் வாழ்கின்றவர்களில் பெரும்பாலானவர்கள் கடற்றொழிலாளர்களாகவும் விவசாயிகளாகவும் காணப்படுகின்றமையினால், அவர்களின் தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன.

எனவே, 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் செயற்பட்டு வந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்ட பூநகரி சுற்றுலா நீதிமன்றின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று குறித்த கடிதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கடித்திற்கு பதில் அனுப்பியுள்ள நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கடற்றொழில் அமைச்சரின் வேண்டுகோள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் மொழியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிவரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே - வலிகாமம் வடக...
மக்கள் நலன்களை முன்னிறுத்தி சேவையாற்றுங்கள் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்த போதிலும், மக்களுக்கு முழுமையான சேவை கிடைக்காதுள்ளது - அமைச்சர் டக்...