அனைத்து விடுதலை அமைப்புக்களையும் ஒன்றிணைக்க கடும் பிரயத்தனம் மேற்கொண்டேன் – தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரளவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, November 26th, 2023

உரிமையின் பேரால்  அனைத்து வாய்ப்புக்களையும் மறுதலித்து நிற்கும் போலித் தமிழ் தேசிய அரசியலின் தீய விளைவுகளை இன்று தமிழ் மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்பது,  சரியான அரசியல்  வழியொன்றை எமது மக்கள் எடுத்துக் கொள்வதற்கான நல்ல ஒரு ஆரம்பமாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் புதிய கடற்றொழில் திருத்த சட்ட வரைபு  மீதான விளக்கமளிக்கும் சந்திப்பு அண்மையில் பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தனது நீண்ட அரசியல் பயணத்தின் அனுபவங்களை கவனத்தில் எடுத்து உரையாற்றிய அமைச்சர் மேலும் தனது உரையில் – 

“மத்தியில் அனைத்து இன மக்களுக்குமான அரசாங்கத்துடன்  இணைந்து எமது மக்களுக்கான சுயாட்சி அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதே எனது பிரதான நோக்கமாகும்.

இதேவேளை நான் 80 களின் நடுப் பகுதியிலும்  ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து போராட்ட அமைப்புக்களையும், ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.  ஆனால் அது சிலரது சுயநலன்களால் முடியாமல் போனது.

ஆனாலும் இந்த தேசிய நீரோட்டத்தில்  கௌரவமான அரசியல்  அதிகாரத்தை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்காகக் கொண்டே அனைத்து இனங்களுக்கு மிடையிலான தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதை பிரதான இலக்காக கொண்டதே எனது  அரசியல் பயணம்  அமைந்துள்ளது.

இன்று உங்களின் அடிப்படை அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வினை பெறும்  எதிர்பார்ப்புடன் இங்கு  காத்திருப்பதிலிருந்து நீங்கள் உண்மையான சரியான மாற்றத்தை நோக்கி சிந்திப்பதற்கும்  பயணிக்கவும்  தயாராக இருப்பதையும்  என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

இன ரீதியான  சிந்தனைகளாலும் தமிழ் மக்களின்  அபிவிருத்திக்காக  ஒன்றுபட்டு சிந்திப்பதற்கான சூழல் இல்லாத நிலையிலும்,  தமிழ் தேசியத்தின் பேரால்  இதுவரை வாக்குகளை நீங்கள் வீணாக்கிக் கொண்டதன் விளைவுகளையும் நீங்களே புரிந்து கொண்டிருப்பதை உங்கள் முக பாவனைகளிலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த அனுபவங்களின் அடிப்படையில்,  தமிழ் மக்கள் தம் சொந்தக்காலில் நிற்பதற்கான தேசிய பொருளாதாரத்தையும் அரசியல் உரிமைகளையும்  கட்டியெழுப்புவதற்கான  எனது  அரசியல்  பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிக்க  அணிதிரள வேண்டும்” அவர்  மேலும்  கேட்டுக் கொண்டார்.

Related posts: