அமெரிக்க தூதர் ஜூலி சங் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – கடற்றொழில் அபிவிருத்திக்கு அமெரிக்கா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவது குறித்து ஆராய்வு!

Thursday, November 30th, 2023

இலங்கைக்கான அமெரிக்க தூதர் திருமதி ஜுலி சங் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் (29.11.2023) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கை கடற்றொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்காக அமெரிக்க அரசின் உதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் கடலட்டை உள்ளிட்ட நீர் உயிரின வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்வது மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமரிக்க அரசாங்கத்தின் உதவிகள் மிகவும் இன்றியமையாததென அமைச்சர் அமெரிக்க தூதரிடம் எடுத்துரைத்தார்.

இலங்கையின் கடற்றொழில் துறையை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதற்கு, குறிப்பாக கடற்றொழில் துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளின் ஒத்துழைப்பு தேவையென சுட்டிக்காட்டிய அமைச்சர் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஒத்துழைப்புடன் புதிய கடற்றொழில் சட்டமொன்று தயரிக்கப்பட்டு வருவதாகவும் அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு மாகாண சபை முறை என்பதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் பின்னர் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்; அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இம் முறை வரவு-செலவு திட்டத்தில் மக்களின் நன்மைக்காகவும் நாட்டின் அபிவிருத்திக்காகவும் சிறந்த பிரேரணைகளை ஜனாதிபதி முன் வைத்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் அதனை விமர்சித்தாலும் கூட இது அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட ஒரு வரவு-செலவு திட்டமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த அமெரிக்க தூதர், இலங்கையின் கடற்றொழிலை அபிவிருத்தி செய்வதற்காக அமெரிக்க அரசு தொழில்நுட்ப ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அனைத்து விதமான உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்தார்.

இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, அமைச்சரின் ஆலோசகர் தவராசா உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

000

Related posts:

பாலுற்பத்தித் திட்டம் வடக்கு கிழக்கு பகுதிக்கும் பரவலாக்கப்பட வேண்டும் - புதிய பாதீட்டினூடாக டக்ளஸ் ...
சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய பேருவளை துறைமுகத்தின் செயற...
இழுவைமடித் தொழிலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மறைமுகமான ஆசீர்வாதம் இருப்பதாக வெளியாகும் விமர்...