அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கை செலவு கூட்டத்தில் ஆராய்வு – திங்களன்று அமைச்சரவை அங்கீகாரத்திற்கு செல்வதாகவும் அறிவிப்பு!

Friday, September 24th, 2021

வாழ்கைச் செலவு அதிகரிக்காத வகையில் நியாயமான விலையில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட விசேட குழுவின் கலந்துரையாடல் மெய்நிகர் வழியினூடாக இன்றையதினம் நடைபெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்ததுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மக்கள் நலனை முன்னிறுத்தி கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதேவேளை அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துக்கொண்ட இந்தக்கலந்துரையாடலின் போது, பால்மா, சமையல் எரிவாயு, அரிசி, சீமெந்து மற்றும் கோதுமை மா ஆகிய பொருட்களுக்கு சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த பரிந்துரைகளை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்து அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: