மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Friday, October 18th, 2024
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையில் எதிர்வரும் 29 ஆம் திகதி கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அறிவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் தேர்தல் பிரசாரக் கூட்டமும் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் நேற்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
யாழ் தேர்தல் தொகுதியில் கணிசமான ஆசனங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
இலங்கையில் ரணில் ஆட்சியில் இருந்திருந்தால் பல மாற்றங்களை கொண்டு வந்திருப்பார் என நாங்கள் எதிர்பார்த்து ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளித்து வாக்களிக்குமாறு கேட்டு இருந்தோம். ஆனாலும் மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்றை விரும்பி கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்திருக்கின்றார்கள்.
இதேவேளை ஜே.வி.பிக்கும் எங்களுக்கும் ஒரு புரிந்துணர்வு உடன்பாடு உள்ளது. மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும்.
அதாவது அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் அதில் ஒரு அரசியல்வாதி தன்னுடைய பார் லைசன்ஸை வெளியிட வேண்டாம் என்று கேட்டிருக்கின்றார். இதேநேரம் சக வேட்பாளர் அவற்றை வெளியிட வேண்டும் என கேட்டு இருக்கின்றார்.
நான் அவ்வாறு கேட்கவில்லை. இந்திய கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினை தொடர்பாக பேசவுள்ளேன். நாங்கள், ஆட்சியில் சம்பள உயர்வு கிடைக்கும் என்று குறிப்பிட்டோம். இப்போதைய ஜனாதிபதி சம்பள உயர்வு தற்போதைக்கு சாத்தியமற்றது என குறிப்பிட்டுள்ளார்.பொருட்களின் விலைகள் சரியாக குறைக்கப்படவில்லை.
அதைவிட இவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் அதிக கடன்களை பெற்றிருக்கின்றார்கள் எதிர்காலத்தில் பழையபடி வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை கூட ஏற்படுகின்றதோ தெரியாது.
இந்நிலையில், நாம் எதிர்காலத்தில் தென்னிலங்கையுடன் அரசியல் கலந்துரையாடல்களை செய்யவிருக்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


