பிரான்சில் ஆட்சி கவிழ்ப்பு – பதவி விலகினார் பிரதமர்!
Thursday, December 5th, 2024
பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்நாட்டின் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் பார்னியர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது, 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
இதன் மூலம், கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசு கவிழ்க்கப்பட்ட முதல் சந்தரப்பம் இதுவாகும்.
2025ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் அரசாங்கம் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தின் பல அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை எதிர்கொண்டன.
இந்நிலையில், பார்னியர் சர்ச்சைக்குரிய வகையில் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி கடந்த திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டத்தை வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றியதை அடுத்து எதிர்க்கட்சிகள் இந்த பிரேரணையை தாக்கல் செய்தன.
இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் பின்னர் நடைபெற்ற நேற்று நடத்தப்பட்டிருந்த வாக்கெடுப்பில் 577 உறுப்பினர்களில் 331 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பிரேரணை நிறைவேற்ற 288 வாக்குகள் தேவைப்பட்டன. பிரேரணைக்கு ஆதரவாக மொத்தம் 331 பேர் வாக்களித்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சபையின் பணிகள் நிறைவடைந்த பின்னர், தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் கையளிக்குமாறு பிரதமருக்கு சபாநாயகர் அறிவித்தார்.
இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் பிரதமராக பதவியேற்ற மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிரான்ஸ் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையை பார்னியர் பெற்றார்.
கடந்த ஜூலை மாதம் திடீரென நடைபெற்ற பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில், இடதுசாரிக் கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தீவிர வலதுசாரிக் கட்சிகளும் ஆதரவளிப்பது சிறப்பு.
எவ்வாறாயினும், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் பதவிக்கு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் நேரடியான தாக்கம் எதுவும் இல்லை என வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஆட்சி கவிழ்ப்பு இமானுவேல் மக்ரோனுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. தற்போது, அவர் புதிய பிரதமரை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனால் ஜனாதிபதி மக்ரோனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
Related posts:
|
|
|


