நித்திய வெளிச்சமாய் இருப்பவரை நேசியுங்கள்,நிமிர்ந்தெழும் காலம் பிறக்கும்!,…நத்தார் தின வாழ்த்து செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!
Tuesday, December 24th, 2024
அந்தகார இருளில் நித்திய வெளிச்சமாய் தோன்றிய ஒளி விடு தூதரை நேசியுங்கள் நிமிர்ந்தெழும் காலம் விரைந்து பிறக்குமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நத்தார் தின வாழ்த்தில் தெரிவித்துள்ளார்,..
மேலும் அந்த வாழ்த்து செய்தியில்,..
உலகுக்கு ஒளி கொடுக்க கருணை மைந்தன் இயேசு பிரான்
பிறப்பெடுத்த நத்தார் தினத்தை எமது மக்கள் ஆண்டு தோறும்
வரவேற்று கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
எமது மக்களின் ஆன்மீக நம்பிக்கை மகிழ்ச்சியில் நாமும் பங்கெடுக்கின்றோம்,.
காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியை கண்டார்கள்.
அழிவுகளும் அவலங்களும் சூழ்ந்த போரின் இருளில் அந்தரித்த
எமது மக்கள் மகிழ்ச்சியை தர வல்ல மைந்தர்களை கண்டார்கள்.
எல்லா இடங்களிலும் அழுகுரல்கள் அப்போது கேட்டன,
அழு குரல் கேட்டு யாரும் அப்போது அவலம் தீர்க்க வந்திருக்கவில்லை.
எமது மக்கள் துயர சிலுவைகளை சுமந்து நடந்தனர்.
சுமைகளை இறக்கி வைக்க யாரும் இங்கு வந்து நிற்கவில்லை.,
இது எமக்கென்று வாக்களிக்கப்பட்ட எமது சொந்த பூமி.
எமது மக்களின் துயர சிலுவைவைகளை இறக்கி வைக்க
கருணை வடிவில் நாமே வந்தோம்.
இருண்ட யுகத்தில் இடர்பட்டு நின்ற மக்களை வெளிச்சத்திற்கு அழைத்து வந்தோம்,..
எமது மக்கள் மறுபடி நிமிர்ந்தெழும் காலத்திற்கான
நம்பிக்கை வேர்கள் நாங்கள்,..
இரத்தப்பலிகளும் பசியும் பட்டினியும் என அழுகுரல் கேட்காத
அழகார்ந்த சமாதான பூமியை நாம் கனவு கண்டோம்,
இன்று இரத்தப்பலிகள் இங்கில்லை,.ஆனாலும் இயேசு பிறந்த பூமியில்
இன்னமும் அழுகுரல்கள் கேட்கின்றன. அவைகள் நிறுத்தப்பட வேண்டும்.
எமது தேசத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. கிடைத்த ஊதியத்தை வைத்து
மக்கள் வாழவே முடியாத துயர் நிலை தொடர்கிறது,..
விலைவாசி உயர்வு விண்ணை தொட்டு நிற்கிறது,..
இனவாதத்திற்கு இங்கு இடமில்லை என்ற தேனூறும் வார்த்தைகள்
வந்து காதில் விழுகின்றன,. இதை நான் வரவேற்கிறேன்,.
ஆனாலும் இன முரண்பாடுகள் எதனால் உருவானது என்ற
அடிப்படை பிரச்சினைக்கு
தீர்வு காண்பதை விரும்பி எதிர் பார்த்து மக்கள் நம்பிக்கையோடு
காத்திருக்கின்றனர்.
எவரும் எவரரையும் அடிமை என்று கொள்ளாத சமத்துவ
நீதியுள்ள தேசத்தையே நாம் விரும்புகிறோம்,..
உழைப்பவர் உரிமைகள் வெல்ல வேண்டும், வறுமையற்ற
வாழ்வு மலர வேண்டும்,..
எமது மக்களை மீட்க வல்லவர்கள் தாமே என பலரும் வந்து நிற்பார்கள்,.
அவர்கள் உள்ளத்தில் உண்மையின்றி உதடுகளில் அருவருப்பான
பொய்களை பூசிக்கொண்டு வருவார்கள்.
கடந்த காலங்களைப்போல் பசுந்தரைகள் இருக்க
கற்பாறைகளில் விதைத்து பயனற்றுபோகவே எத்தனிப்பார்கள்.
மக்களாகிய நீங்கள் புறாக்களை போல் கபடமற்றவர்களாகவும்
சர்ப்பத்தை போல் விழிப்புணர்வுடனும் இருப்பீர்கள் என நம்புகிறேன்,.
அன்பும் கருணையும் அவனியை ஆளட்டும்,.
இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சத்தை காண்பார்கள்.
இனி வரும் காலம் நல்ல கனிதரும் காலம்.
நம்பிக்கையோடு நத்தார் தினத்தை வரவேற்போம்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


