தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கே அரசுடன் உறவு –  டக்ளஸ் தேவானந்தா!

Sunday, September 18th, 2016

தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வின் ஊடாகவே நிரந்தரத் தீர்வைக்கான முடியும். தமிழ் மக்கள் நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை. இலங்கையர்களாக இருக்கும் அதேவேளை தமிழர்களாகவும் இருப்பதற்கே விரும்புகின்றார்கள்.

எனவே பிரதான தேசியக் கட்சிகள் இணைந்து ஆட்சிநடத்தும் இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது –

நேற்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகக் கட்டிடத் தொகுதியில் புதிதாக அமையப் பெற்றுள்ள புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதியை திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடும்போதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பாகவே தெளிவுபடுத்தினேன்.

1

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை இதற்கு முன்னரும் பல தடவைகள் சந்தித்திருந்த சந்தர்ப்பங்களிலும்நாம் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுடனான நிரந்தர அரசியல் தீர்வு காணப்படுவதற்கு தற்போது சாத்தியமான சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கிய வரலாற்றுப் பதிவில் நீங்கள் தேசத்தின் சமாதானத் தந்தையாக இடம் பிடிக்கவேண்டும் என்று கூறியிருக்கின்றேன்.நான் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் நெருக்கமாக உரையாடும்போதெல்லாம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையே எடுத்துரைப்பேன். ஆனால் அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களோ,

நான் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஆட்சியாளர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதாகப் பொய்யான புரளிகளைக் கட்டவிழ்த்து விடுகின்றார்கள். புதிய ஆட்சியிலும் சரி, முன்னைய ஆட்சியிலும் சரி நான் அரசுகளுடன் தனிப்பட்ட எந்த தேவைகளுக்காகவுமோ, தனிப்பட்ட பெருமிதங்களுக்காகவோ உறவு பாராட்டியதில்லை.

15

ஆட்சியாளர்கள் அடிக்கடி கூறுகின்ற ஒரு விடயத்தை இந்தச் சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக அரசாங்கத்தை எதிர்த்தாலும், தம்மை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து,

தமது நெருங்கிய உறவுகளுக்கு வேலைவாய்ப்பு, தமது பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில், தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு அரச சலுகைகள் என்பவற்றையே கேட்டுப் பெறுகின்றார்கள் என்று பகிரங்கமாகவே கூறும் ஆட்சியாளர்களோ,

டக்ளஸ் தேவானந்தா தம்மைத் தொடர்பு கொள்ளும்போதும், நேரடியாக உரையாடுகின்றபோதும், மக்கள் வாழும் பகுதிகளுக்குள் அமையப்பெற்றிருந்த காவலரண்களை அகற்றுவது தொடர்பாகவும், படையினர் வசமுள்ள மக்களின் சொத்துக்களை விடுவிப்பது தொடர்பாகவும், தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வது, அபிவிருத்தி தொடர்பாகவும்,

இனவிகிதார அடிப்படையில் முப்படைகளிலும் தமிழ் இளைஞர், யுவதிகளையும் இணைத்தக் கொள்வது தொடர்பாகவுமே கோரிக்கைகளை முன்வைப்பார் என்று கூறுவார்கள். இன்றும் அரசுகளிடம் நான் முன்வைக்கும் கோரிக்கைகள் இவையாகத்தான் இருக்கின்றது. இந்தக் கோரிக்கைகளை நேற்றையதினமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கூறியிருக்கின்றேன்.

நான் ஆட்சியாளர்களுடன் உறவாக இருப்பது எனக்காக அல்ல. தமிழ் மக்களுக்காகவே முன்னைய ஆட்சியாளர்களுடன் இணைந்து நீண்டகாலமாக ஆட்சிப் பொறுப்புக்களில் இருந்து

எமது தாயகப் பகுதியை மீண்டும் அபிவிருத்தியால் கட்டி எழுப்புவதற்கும், எமது மக்களின் வாழ்க்கையை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்துவதற்காகவும் கடுமையாக பணியாற்றியிருக்கின்றேன்.அரசியல் தீர்வை வலியுறுத்தி முன்னைய ஆட்சியாளர்களுடன் முழுமையான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்குக் கடந்த காலத்தில் எனக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் பலம் போதுமானதாக இருக்கவில்லை.

14

இருந்தபோதும் எமது தாயகப் பிரதேசத்தையும், எமது மக்களின் உணர்வுகளை இரத்தமும் சதையுமாக புரிந்துகொண்டு அவர்களுடனே வாழ்ந்துவருகின்றேன்.புதிய அரசாங்கம் புதிய தேர்தல் முறைமை ஒன்றை ஏற்படுத்துவதற்கும், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதற்கும்,

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கும் அரசியல் திருத்தச் சட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு குழுக்களை அமைத்து கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள முக்கிய குழுவில் ஒன்றான வழிநடத்தும் குழுவில் நானும் இருக்கின்றேன்.

எனவே இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் அரிய வாய்ப்பாகவே கருதுகின்றேன். எனவே அரசியல் தீர்வுக்கான இந்த முயற்சியை கடந்த காலத்தைப் போல் தமிழ் தலைமைகள் குழப்பியடிக்க முயற்சித்தால் அதற்கு இடமளிக்க மாட்டேன்.

Related posts: