தீர்வுகளைத் தரும் தீர்க்கமான ஆண்டாக புதிய ஆண்டு மலரட்டும் – அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Saturday, December 31st, 2022

தமிழ் மக்கள் சுமந்து நிற்கும் தீராப் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் தீர்க்கமான ஆண்டாக புதிய ஆண்டு மலரட்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள புதுவருடச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அந்தச் செய்தியில் தெரித்திருப்பதாவது,

மக்களை தோற்கடித்து அதில் சுயலாப அரசியல் செய்வோர் இன்னும் மாறவே இல்லை.
ஒற்றுமை என்கிறார்கள் அக்கணமே உள் முரண்பாடுகள் என்கிறார்கள், மக்களை மறந்து மறுகணமே மத்தியஸ்தம் என்றும் மாற்றுத் திட்டம் என்றும் புலம்பித் தள்ளுகிறார்கள்.

அவர்களை இனியும் நம்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏதும் நடந்தேறாது என்பது மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது..

தமக்கான அரசியல் இலாபம் தவிர தமிழ் மக்களுக்கு தொடர் தோல்விகளை மட்டுமே பரிசளிக்கும் அவ்வழியை மறந்து, பிறக்கும் புத்தாண்டிலாவது நடைமுறைச் சாத்தியம் எனும் நல் வழி நடந்திட தமிழ் மக்கள் உறுதி ஏற்றிட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிகளுக்கும், வேரோடிவிட்ட அரசியல் பிரச்சினைக்கும் நிலையான தீர்வொன்றை கண்டுவிட வேண்டுமென்ற தீர்மானம் ஏற்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் விருப்பமும் முயற்சிகளும் நாட்டிற்கு விடிவொன்றை கண்டு தரும் என்று நம்புவோம்.

பல தசாப்த கால பிச்சினையான தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றை தருவதென்பது இலகுவான காரியமல்ல. அதற்கு ஜனாதிபதி தென் இலங்கையில் பல தடைகளை கடக்கும் பலம்பெற வேண்டும்.

அதற்கு தமிழ் மக்களும் தமது நேசக்கரம் நீட்டி புதிய நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும்.

இத்தகைய தீர்க்கமான காலச்சூழலில் ஆரம்பமாகும் புதிய வருடமானது தீர்வுகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் விருப்பமுமாகும்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். – 31.12.2022

Related posts:

கீரிமலை வலித்தூண்டல்றோ.க.த.க.பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ...
கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு இருவரை பரிந்துரையுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பண...
கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை...