சம்பூரில் காணி, நிலங்களை விடுவித்தோம் என மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை மக்கள் மீள்குடியேற என்ன செய்தீர்கள்? டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, April 21st, 2016

திருகோணமலை, சம்பூர் பகுதியில் எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்துக் கொடுத்தோம் என மார்தட்டிக் கொண்டிருப்போர், அப் பகுதி மக்கள் மீளக்குடியேற ஏதாவது வசதிகளை செய்து கொடுத்தார்களா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்திருக்கும் செயலாளர் நாயகம் அவர்கள், சம்பூர் பகுதி காணி, நிலங்களை ஏற்கனவே நிலவிய நூறு நாட்கள் ஆட்சியில் விடுவித்திருக்க சாத்தியப்பாடுகள் இருந்தும், ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தவர்கள் தாங்களே எனக் கூறிக்கொண்டிருந்த இந்தத் தமிழ்த் தலைமைகள் அந்த வாய்ப்பினை புறக்கணித்தன. இருந்தும் அப் பகுதி மக்கள் தொடர்ந்து மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக இத் தலைமைகள் கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தாங்கள் கொண்டு வந்ததாக மீண்டும் கூறிக்கொண்ட ஆட்சியில் இணக்க அரசியலை மேற்கொண்டு, பதவிகளையும், அதற்கான வசதிகளையும் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஒருவாறாக இப் பகுதி காணிகளை அரசு இணங்கியிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டது.

காணி, நிலங்களை விடுவித்தால் மாத்திரம் போதும் என நினைக்கும் இத் தலைமைகள் அதன் பின்னர் அங்குள்ள மக்களைக் கண்டுகொள்ளவே இல்லை. இனி அடுத்த தேர்தலில் கண்டுகொள்ளலாம் என நினைக்கிறார்கள் போலும். எனினும் அங்குள்ள தங்களது சொந்த காணி, நிலங்களுக்கு சென்ற மக்கள் அங்கு மீளக் குடியேற வசதிகளின்றி அவதிப்பட்டு வருவதை இந்தத் தமிழ்த் தலைமைகள் இதுவரையில் உணர்ந்ததாக இல்லை.

இப் பகுதியானது ஏற்கனவே படை முகாம்கள் இருந்த பகுதி என்பதால்  வெடிபொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் அப்புறப்படுத்தப்படாமல் காணப்படுகின்றன. எல்லைப் பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன. அத்துடன், மலசலகூட வசதிகள், பாதை வசதிகள் என்பன போதுமான அளவில் இல்லை. வாழ்வாதார வசதிகளின்றி இப் பகுதி மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர்.

இப் பகுதியில் அதிகளவு அரச அதிகாரிகள் இருப்பதாகத் தெரியவரும் நிலையில், அரச ஊழியர்களுக்கு உதவித் திட்டங்கள் பல வழங்கப்படாத நிலையில் அதற்கான மாற்றுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

இவ்வாறான பல்வேறு தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இம் மக்கள் அப் பகுதியில் மீளக் குடியேறுவது எப்படி? என்பதை இந்தத் தலைமைகள் சிந்தித்துப் பார்ப்பதாகவே தெரியவில்லை.

இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்தவர்கள் தாங்களே எனக் கூறிக்கொண்டு, இந்த அரசுடன் இணக்க அரசியல் நடத்திக் கொண்டு, அதனூடாக பதவிகளைப் பெற்று, சுக போகங்களை அனுபவித்துவரும் இத் தலைமைகள் இந்த அரசைக் கொண்டு தங்களது தேவைகளை மாத்திரம் பூர்த்தி கெய்து கொள்ளாமல், எமது மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க முன்வரவேண்டும்.

எமது மக்கள் தங்களது வாக்குகளை வழங்கியது எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கே அன்றி, இத் தலைமைகளுக்கு பதவிகளை வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக வைத்திருப்பது எமது பொறிமுறை அல்ல – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்ட...
மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ்...
வடக்கு - கிழக்கில் கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு அ...