ஏப்ரல் 21 தாக்குதல்: கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி

Friday, November 22nd, 2019

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து உரிய விசாரணையை நடத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்றுக் கொண்ட பின்னர், கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையை இன்று மாலை முதற்தடவையாக சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் தண்டனை வழங்கும்படி கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் உரியவாறு இடம்பெற்றிருக்கவில்லை என்ற கவலையை கர்தினால் ஆண்டகை இதன்போது ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.

இந்நிலையிலேயே, ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து உரிய விசாரணையை நடத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார்.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500 பேர் வரையில் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பினர் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலை அடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட மூன்று இஸ்லாமிய அமைப்புகளுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பலர் தற்போது வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: