5 மணிநேரம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா வாக்குமூலம்!

Friday, August 11th, 2017

 

மாணவி வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் நீண்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விசாரணையானது 5 மணித்தியாலங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட விஜயகலாவிடம், பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை விசாரணை மேற்கொண்டு, வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு விஜயகலா உதவியதாக   விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் மேலதிக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொலை தொடர்பில் யாழ். மாவட்ட பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, கொலையின் பிரதான சந்தேக நபர் சுவிஸ் குமார் உட்பட 9 பேர் தற்போது வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வித்தியா கொலை இடம்பெற்ற தினத்தன்று பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் என்பவரை பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். எனினும் சந்தேகநபரை தப்பி செல்வதற்கு இடமளிக்குமாறு உத்தரவிட்ட குற்றச்சாட்டின் கீழ் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுவிஸ் குமார் என்பவர் தப்பி சென்ற பின்னர் வெள்ளவத்தையில் வைத்து பொலிஸாரினால் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை பொலிஸ் கைதில் இருந்து விடுவித்து கொள்வதற்கு உதவியதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.இதனுடன் தொடர்பான காணொளிகளும் பரவலாக சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: