30 ஐ தாண்டினால் அமைச்சரவையை ஜனாதிபதி நிராகரிக்கலாம் – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்!

Wednesday, December 19th, 2018

தனி ஒருவரை இணைத்துக் கொள்வதால் அதனை தேசிய அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஐ தாண்ட முடியாதென தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அவ்வாறு அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க முற்பட்டால் அதனை ஜனாதிபதியால் நிராகரிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

பிரதமராக ரணில் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அமைச்சரவையை தெரிவு செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு அமைச்சரவையைத் தெரிவு செய்யும்போது அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஐ தாண்ட முடியாது. அதுவே நியதி. அது மட்டுமல்லாது பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட அமைச்சரவையின் எண்ணிக்கை 70 ஐ தாண்ட முடியாது. 19 ஆவது திருத்தத்தில் இது தொடர்பாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட பிரதான கட்சி வேறு கட்சியுடன் அல்லது கட்சிகளுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் இந்த வரையறை செல்லுபடியற்றது. அவ்வாறு இல்லாது தனி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமாயின் அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஐ தாண்ட முடியாது. அதற்கு உட்பட்டே செயற்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் வேறு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு தேசிய அரசாங்கம் என கூறிக்கொண்டு அமைச்சரவையின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால் அது ஒருபோதும் முடியாத காரியமாகும்.

அரசியலமைப்பில் நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சி ஏனைய கட்சியுடன் அல்லது சுயாதீன உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவதே தேசிய அரசாங்கமென குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் தனி நபர் ஒருவரை இணைத்துக் கொண்டால் அதனை தேசிய அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்தோடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போதுள்ள அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமுடியாதெனவும் தனி நபராகவே செல்ல முடியுமெனவும் கூறப்பட்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கம் ஒன்று கிடையாது. ஆகவே அமைச்சரவையின் எண்ணிக்கையும் 30 ஐ தாண்ட முடியாது.

அவ்வாறு அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க முற்பட்டால் அதனை ஜனாதிபதி நிராகரிப்பதற்கும் அதிகாரமுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

Related posts:


ஐ.எஸ் அமைப்பின் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில் – பிரித்தானிய “சன்” செய்தித்தாள் எச்சரிக்கை!
இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் த...
சீரற்ற காலநிலை - உயிரிழந்தவர்களின் குடும்பங்பளுக்கு பிரதமர் இரங்கல் - பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண...