வடபகுதி அபிவிருத்தியில் இராணுவத்தினர் – றெஜினோல்ட் குரே !

தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலும் வடக்கில் அபிவிருத்திப் பணிகளிலும் இராணுவத்தினர் தம்மை இணைத்துக் கொண்டிருப்பதாக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிட்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
நல்லிணக்கம் ஏற்படுவதற்கு பெரிதும் தடையாக இருப்பது கல்வியே. சிங்கள மகா வித்தியாலயம், தமிழ் மகா வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம் என நம்முள்ளே பிரிவினையை ஏற்படுத்தக் கூடிய வகையில் பாடசாலைகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்கு மாறாக சிறிசேன, நடராசா, முகமட் ஆகியோர் ஒன்றாக ஒரு இடத்தில் அமர்ந்து படிக்கின்ற வகையில் பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும்.
குறைந்தது பாடசாலையை விட்டு வெளியேறியதன் பின்னர் என்னுடன் படித்த எனது நண்பன் நடராசா என்று பேசக்கூடிய வகையில் நாம் செயற்பட வேண்டும். நல்லிணக்கத்தினை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் இணைந்து செயற்படுவதன் மூலமே உருவாக்க முடியும். இன, மத, குலம் என்ற அனைத்தையும் மறந்து நாம் ஒன்றாக பயணிக்க வேண்டும்.
வடக்கில் தற்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. மயிலிட்டி, காங்கேசன்துறை போன்ற பகுதிகளில் படிப்படியாக அந்த பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு சொந்த காணிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மேலும், மக்களை குடியமர்த்துவதற்காக அரசு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை வலுப்படுத்த மத்திய அரசின் உதவிகள் அனைத்தினையும் நான் பெற்றுக்கொடுப்பேன் எனத்தெரிவித்தார்.
அத்துடன், வடக்கில் இராணுவத்தினர் அபிவிருத்திப் பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலும், அவர்களின் கல்வி, போக்குவரத்து போன்றவற்றிலும் தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்துவருகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|