மக்கள் பிரதிநிதியின் அசட்டையால் சாலைகள் சீரமைப்புத் திட்டம் மாகாணத்தில் தள்ளிப் போகிறது!

Thursday, September 21st, 2017

வடக்கு மாகாணத்தில் உள்ள சாலைகளைச் சீரமைப்பதற்கு ஐரோட் செயற்றிட்டம் அடுத்த ஆண்டும் ஆரம்பிக்கப்படாது என்று சாலை அபிவிருத்தித் திணைக்களத் தகவல்கள் தெரிவித்தன.

மக்கள் பிரதிநிதிகள் இதற்கு முன்னுரிமையளிக்காது இருப்பதே தாமதத்துக்கு முதன்மைக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதனால் தற்போதைய நிலையில் ஆயிரம் கிலோமீற்றர் சாலை சீரமைக்கப்படுவது அடுத்த வருடமும் சந்தேகமே என்றும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலிருந்தும் பல சாலைகளைத் தேர்ந்தெடுத்து மொத்தமாக ஆயிரம் கிலோமீற்றர் நீளமான சாலைகளைச் சீரமைப்பது என்றும் ஐரோட் திட்டத்தில் முன்னர் தீர்மானிக்கப்பட்டது. ஐரோட் செயற்றிட்டம் இந்த வருட இறுதியில் கைகூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்தத் திட்ட நிதி உதவியில் குறித்த சாலைகளைக் காப்பற் மற்றும் கொங்கிரீட் சாலைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் நடப்பு வருடத்தின் இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வருட இறுதியில் செயற்றிட்டம் சார்பான கேள்வி கோரல் நடைபெற்று அடுத்த வருடம் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் சாலைகள் சீரமைப்பு வேலைகள் 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

வடக்குமாகாணத்திலுள்ள சாலைகளைச் சீரமைப்பதற்குத் துறை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஐரோட் செயற்றிட்டத்தை வடக்கு மாகாணத்துக்குப் பெற்றுக் கொடுக்க முன்வந்தனர். இதன் அடிப்படையில் பிரதேச சபைகளின் கீழ் உள்ள 500 கிலோமீற்றர் வரையான உள்ளூர் சாலைகள் மற்றும் 700 கிலோமீற்றர் வரையான முதன்மைச் சாலைகள் சீரமைக்கப்பட வேண்டியுள்ளன.

சாலை அபிவிருத்தி அதிகாரசபையின் உதவியுடன் முதன்மை சாலைகள் சீரமைப்பின் போது 240 கிலோமீற்றர் நீளமான சாலைகள் யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் 130 தொடக்கம் 140 கிலோமீற்றர் நீளமான சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.

பின்னர் இந்தச் செயற்றிட்டங்களை யாரும் செயற்படுத்த முன்வரவில்லை. இதனால் அடுத்த வருடமும் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்க முடியாத நிலை உள்ளது. அடுத்த வருடத்தின் ஜீலை மாதம் கேள்வி கோரல் நடைபெற்று 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதமே வேலைகள் ஆரம்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதேவேளை ஐரோட் செயற்றிட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts:


அடுத்த இரண்டு வாரங்களில் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் – அமைச்சர் ...
இலங்கையில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம் - பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேர...
“எங்கள் மக்களுக்குத் தேவையான உணவை நாங்கள் வழங்க வேண்டும் - அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் அதிரடி பணிப...