நாட்டில் கடந்த ஆண்டு ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர் – பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டு!

Saturday, October 21st, 2023

நாட்டில் ஏறக்குறைய 2000 தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு ஐந்து இலட்சத்து 33 ஆயிரத்து 858 பேர் வேலையை இழந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அதன்படி, இவ்வாறு வேலையை இழந்தவர்களுள் தொழில்துறையைச் சேர்ந்த மூன்று இலட்சத்து 96 ஆயிரத்து 159 பேரும் சேவைத் துறையில் ஒரு இலட்சத்து 37ஆயிரத்து 699 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, கடந்த வருடத்தில் தனி நபர்களின் வேலை நேரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் 66.1 வீதமானவர்கள் 40 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு மேல் வேலை செய்த போதிலும் அதே வருடத்தின் நான்காம் காலாண்டில் 40 மணித்தியாலங்கள் மற்றும் அதற்கு மேல் வேலை செய்தவர்களின் எண்ணிக்கை 61.7 வீதமாக குறைந்துள்ளதாக வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அந்த ஆண்டில், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 51.2 வீதத்திலிருந்து 48.9 வீதமாகக் குறைந்துள்ளது,

20-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை 14.2 வீதத்திலிருந்து 17.2 ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன .

மேலும், மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: