பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்த செய்திகள் வதந்தி – முற்றாக மறுக்கின்றது வர்த்தக அமைச்சு!

Monday, June 5th, 2017

இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பான செய்திகள் அனைத்தும் பொய்யான வதந்திகள் என வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன வலியுறுத்தியுள்ளன.

அண்மைக் காலமாக இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானிலிருந்து சதொச நிறுவனம் பிளாஸ்டிக் கலந்த பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தித் தளங்களில் பரவலான ஒரு செய்தி பரப்பப்பட்டிருந்தது.

எனினும் குறித்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று மறுக்கும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன , உரிய பரிசோதனைகளின் பின்னரே பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

அத்துடன் இவ்வாறான செய்திகள் பரவத் தொடங்கியதன் பின்னர் மீண்டுமொரு முறை குறித்த அரிசியை பரிசோதனைக் கூடமொன்றில் சமைத்து பரிசோதனைக்கு உட்படுத்திய போதிலும் எதுவித பிளாஸ்டிக் கலவைகளும் அடங்கியிருக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்களின் நன்மை கருதி குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்கப்படும் பாகிஸ்தான் பாஸ்மதி அரிசியை பொதுமக்கள் எதுவித அச்சமும் இன்றி கொள்வனவு செய்யலாம் என வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன உறுதிப்படுத்தியுள்ளன

Related posts: