அமெரிக்கா, ஜெர்மனுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்த இந்தியா திட்டம்!

Thursday, June 8th, 2023

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஜே. ஆஸ்டின் மற்றும் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் ஆகியோர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக அடுத்த வார தொடக்கத்தில் இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.

அமெரிக்காவுடனான இணை மேம்பாடு மற்றும் இணை தயாரிப்புத் திட்டங்கள் நிகழ்ச்சி நிரலில் முதன்மையானதாக உள்ள அதேவேளை, ஜெர்மனியுடனான பேச்சுவார்த்தைகள் இந்திய கடற்படைக்கு வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தை மையப்படுத்தியதாக இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சந்திப்புகளின்போது தொழில்துறை ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்து   கலந்துரையாடப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

ஷங்க்ரி-லா தொடர்பான உரையாடலில் பங்கேற்ற பிறகு, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஆஸ்டின் இரண்டு நாள் பயணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். இது அவரது இரண்டாவது இந்திய விஜயமாகும். 

இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு அடித்தளமிடும் வகையில், இரு நாடுகளிலிருந்தும் முக்கிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளிப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், சிக்கலான மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் முன்முயற்சியின் வரம்புக்குள் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு இலகுரக போர் விமானத்தை இயக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனரல் எலக்ட்ரிக் ஜி-414 இன்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான முயற்சிகளை இரு நாட்டு தலைவர்களும் கவனத்தில் கொள்வார்கள்.

அதேபோன்று ஜேர்மன் மத்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்திய விஜயத்திலும் பல முக்கிய திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளன.

Related posts: