கொரோனா தொற்று: போலி மருந்துகள் சந்தையில்: எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை!

Friday, April 10th, 2020

கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் வளர்ந்துவரும் நாடுகளில் கொரோனா வைரஸை குணப்படுத்தக்கூடியது என கூறி போலி மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக ஆபிரிக்க நாடுகளிலேளே கொரோனவிற்கான போலி மருந்துகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

உலகின் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இதுவரை ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தொற்றியுள்ளது.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிய 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியும் உள்ளனர். தொடர்ந்தும் உலக நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸிற்கு ஆளாகிவரும் நிலையில் இன்னமும் இந்த வைரஸை குணப்படுத்தக்கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகம் முழுவதும் பரந்துவாழும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் பாராது கொரோனாவிற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் சில நாடுகளில் அதற்கான மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளன.

எனினும் இந்த மருந்துகள் போலியானவை என்று அறிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், இந்த போலி மருந்துகளை உட்கொள்வதால் “கடுமையான பக்க விளைவுகளை: ஏற்படுத்தக்கூடும் என்றும் சில வேளைகளில் உயிர்களையும் பறிக்கும் என்றும் சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் இரண்டு பெரிய மருந்து உற்பத்தியாளர்களான சீனாவும் இந்தியாவும் கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், மருந்து பொருட்களின் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்த நிலையிலேயே ஆபத்தான மற்றும் போலியான மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 90 நாடுகளில் கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் போலி மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 121 கைதுகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை 14 மில்லியன் டொலர் மதிப்புள்ள போலி கொரோனா மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: