நீர் வற்றியமையால் 4 குளங்களின்கீழ் 53 ஏக்கரில் சிறுபோக செற்செய்கை – கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவிப்பு!
 Wednesday, April 18th, 2018
        
                    Wednesday, April 18th, 2018
            
துணுக்காய், பாண்டியன்குளம் ஆகிய கமநல சேவை நிலையங்களிற்குட்பட்ட 76 சிறிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் சுமார் 3 ஆயிரத்து 900 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு வரும் நிலையில் நடப்பாண்டில் குளங்களில் நீர் வற்றிப் போயுள்ளதால் சிறுபோக செற்செய்கையாக 4 குளங்களின் கீழ் 53 ஏக்கரில் மட்டுமே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துணுக்காய், பாண்டியன்குளம் கமநல சேவை நிலையங்களின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:
கடந்தாண்டு தொடக்கம் நடப்பாண்டு முற்பகுதி வரையிலான காலத்தில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக போதிய மழைவீழ்ச்சியின்மையால் நீர்ப்பாசனக் குளங்களிற்கு நீர்வரத்து குறைவடைந்தமையால் கடந்த கால போகம் மற்றும் நடப்பாண்டுக்குரிய சிறுபோக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் 15 நீர்ப்பாசனக் குளங்கள் உள்ள நிலையில் உயிலங்குளம் கிராமத்தில் உள்ள மணற் குளத்தில் மட்டும் 11 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்தின் கீழ் 61 நீர்ப்பாசனக் குளங்கள் உள்ள நிலையில் பாலைப்பாணி குளத்தின் கீழ் 12 ஏக்கரிலும் கொம்பறுத்த குளத்தின் கீழ் 15 ஏக்கரிலும் வடகாடு குளத்தின் கீழ் 12 ஏக்கரிலும் அம்பாள்புரம் வண்டிக் கட்டுக் குளத்தின் கீழ் 5 ஏக்கரிலுமாக மொத்தம் 4 குளங்களின் கீழ் 42 ஏக்கரில் மட்டுமே நெல் பயிரிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக கமநல சேவை நிலையங்களிற்குட்பட்ட 76 நீர்ப்பாசனக் குளங்களில் 5 குளங்களில் மட்டும் 53 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளமையால் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் சுமார் 8 ஆயிரத்து 300 குடும்பங்கள் நிர்க்கதியான நிலையிலுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        