சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்:  பகிஷ்கரிப்புக்கு அழைப்பு!

Tuesday, August 7th, 2018

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்தியும் சமுர்த்தி வங்கி நிதியத்தை கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்தும் சமுர்த்தி உரிமைகளைக் காக்கும் தேசிய முன்னணி ஏற்பாட்டில் எதிர்வரும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரியளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் அனைத்து சமுர்த்தி பணியாளர்கள் மற்றும் வெளிக்கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

சமுர்த்தி உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் சங்கம், சமுர்த்தி முகாமையாளர் சங்கம், அலுவலக ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர பொது தொழிலாளர் சங்கம் ஆகியன ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதம செயலாளர் எஸ்.ஏ.டி.ஜாக்குமார, சமுர்த்தி முகாமையாளர் சங்க தலைவர் பி.கே.ரனுக்கே ஆகியோர் சகல மாவட்டங்களிலும் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இந்த போராட்டத்துக்காக ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல வருட காலமாக தொடரும் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பணிப்பாளர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர்களுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசப்பட்டது. எனினும் அந்தப் பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையிலேயே இப்பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வை காணும் பொருட்டு பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இத் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சமுர்த்தி உரிமைகளைக் காக்கும் தேசிய முன்னணி அறிவித்துள்ளது.

Related posts:


நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
இவ்வருடம் இலங்கை வருகைதந்த சுற்றுலாப் பயணிகளில் 24 வீதமானோர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர் - இலங்கை சுற்...
தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரி...