கொரோனா தொற்றை தேசிய பொறுப்பாக கருதி உதவுங்கள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை!

Friday, March 13th, 2020

தேசிய பொறுப்பாக கருதி உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரோனா வைரஸ் தொற்றினை பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதன் மூலம் நாடு என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பல்வேறு துறைகளையும் சேர்ந்த நிபுணர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு முக்கிய நாடுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரினதும் உதவி தேவையானதாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சீனாவின் வுஹான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவது ஆரம்பமானது முதல் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் முறையாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் செயற்பட்டதன் மூலம் நோய்த்தொற்றை தவிர்க்கக்கூடியதாக இருந்தது.

தொடர்ந்தும் இந்த நிலைமையை பேணுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நோய்த் தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் அனைத்து தரப்பினரதும் முழுமையான உதவி தேவையாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related posts: