கொடிகாமம் பொதுச் சந்தையின் மலகூடம் சீரின்மை – பொதுமக்கள் கடும் விசனம் !

Saturday, August 4th, 2018

சாவகச்சேரி பிரதேச சபையின் கொடிகாமம் பொதுச்சந்தை மலசலகூடம் பாவிக்க முடியாத நிலையில் சுகாதாரச் சீர்கேடுகளுடன் காணப்படுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒழுங்கான பராமரிப்பு இல்லாமையே இந்த சீர்கேட்டுக்குக் காரணம் என்றும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மலசலகூடத்திற்குள் ஒழுங்காகத் தண்ணீர் வருவதில்லை. சிறிய குழி அமைக்கப்பட்டிருப்பதால் குழி நிரம்பி மலசலம் குழிக்குள் செல்ல முடியாது நாற்றமெடுக்கிறது. நாளாந்தம் இந்த அவலத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இது இன்னும் எத்தனை நாள்களுக்கு நீடிக்கவுள்ளது? என்று பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

சந்தை வளாகத்துக்கு அருகிலும் துர்நாற்றம் வீசுகிறது. பலமுறை பிரதேச சபைக்கு அறிவித்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் கந்தையா வாமதேவனைத் தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த மலசலகூடமானது சபை பொறுப்பேற்கும் போது பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்டது.

அதன்பின் துப்புரவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. எவ்வாறாயினும் அது பழைய கட்டடமாகவே காணப்படுவதால் சுகாதாரச் சீர்கேடுகள் காணப்படுகின்றன. அதுவே உண்மை. இந்தச் சந்தையை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 70 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யவுள்ளோம். அதன் அடிப்படையில் சிறுநீர் கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. சந்தை அபிவிருத்தி நிறைவுறும்போது அனைத்துப் பிரச்சினைகளும் நிறைவுறும் என்றார்

Related posts: