மும்மொழி அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 9th, 2016

மும்­மொழிக் கொள்­கையை அமு­லாக்கும் செயற்­பா­டுகள் ஆக்­க­பூர்­வ­மா­ன­தாக காணப்பட­வில்­லை­யென சுட்­டிக்­காட்­டிய ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா மும்­மொழி அமு­லாக்­கத்தை உறுதிசெய்­வ­தற்­கான கண்­கா­ணிப்புக் குழு நிய­மிக்­கப்­பட வேண்­டு­மெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமுலாக்கல் கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களிடம் நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் எழுப்பப்படும் வினாக்கள்  நேரத்தின் போதே  ( 07.06.2016) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையின் முழுமையான வடிவத்தை எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

சிங்கள மொழியும், தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழிகளாக வேண்டும் என அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தால் திருத்தப்பட்டுள்ள 18(1) மற்றும் 18(2) உறுப்புரைகள் சுட்டிக்காட்டுகின்றன.  இதன் மூலம், சகல அரச ஆவணங்களும், படிவங்களும், அறிவித்தல்களும் (பெயர்ப்பலகைகள் அடங்கலாக), சுற்று நிருபங்களும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும்  இருக்க வேண்டும் ஃ வெளியிடப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் மொழியிலேயே அவர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும், சிங்கள மொழியில் பதில் அனுப்ப வேண்டிய தேவைகள் இருப்பின் தமிழ் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு இணைக்கப்படல் வேண்டும் என்றும், எந்தவொரு பிரஜையும் தமது சொந்த மொழி மூலம் அரச அலுவலகங்களுடன் தொடர்புகளைக் கொள்ள முடியுமென்றும், அதற்கான வசதிகள் சகல அரச அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அரச கல்வி நிறுவனங்கள், போதனா நிலையங்களில் மொழிகளுக்குத் தனித்தனியான நிறுவனங்கள் இருந்தாலன்றி, மூன்று மொழிகளிலும் போதனைகள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சிங்களம் தெரியாதவர்கள் கலந்து கொள்ளும் அரச கூட்டங்களில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் வகுப்புகளில் மொழிபெயர்ப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும், குறிப்புகள் அவர்களது மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒருவருக்குத் தெரியாத மொழியில் வாக்குமூலம் அளிக்கக் கட்டாயப்படுத்துவது, விளங்காத – வாசிக்க முடியாத வாக்குமூலத்தில் பலவந்தமாக ஒப்பம் வாங்குவது, ஒருவர் தொடர்பு கொண்ட மொழியிலன்றி அல்லது அவரின் தாய் மொழியிலன்றி வேறு மொழிகளில் தொடர்பு கொள்ள முயல்வது என்பன மொழி உரிமையை மட்டுமல்ல, அடிப்படை உரிமைகளையும் மீறும் செயல்களாகக் கொள்ளப்படும் என்றும், அரச மற்றும் நிர்வாக நடைமுறைகளின்போது மொழி உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுபவர்கள் அடிப்படை மனித உரிமை மீறலுக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றும், மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிடலாம் அல்லது அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் அவதானத்துக்குக் கொண்டுவரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அமுலுக்கு வந்ததன் பின்னர் ஆட்சியதிகாரத்திற்கு வந்துள்ள அரசுகளினால் தமிழ் மொழி அமுலாக்கம் குறித்து சுமார் 18 சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்ற போதிலும், தமிழ் மொழி அமுலாக்கம் என்பது கேட்பாரற்றதொரு நிலையில் பின்தங்கியிருப்தையே காணக்கூடியதாக இருக்கிறது என்பது தெரியவருகிறது. ஒரு சில அமைச்சுக்களைத் தவிர ஏனைய அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற கடிதங்கள், ஆவணங்கள் என்பன தனிச் சிங்கள மொழியிலேயே அனுப்பப்படுவதாகவும், அவற்றைப் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்புகளின் உதவிகளை நாட வேண்டியுள்ளதாகவும், இதனால் ஏற்படுகின்ற தாமதங்கள் காரணமாக பல்வேறு இழப்புகளைச் சந்திக்க நேரிடுவதாகவும் பலரும் முறையிடுகின்ற நிலையே காணப்படுகின்றது.

தமிழ் மொழி அமுலாக்கத்தை மேலும் வலுவுள்;ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தங்களது அமைச்சு மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகள் தொடர்பில் கூற முடியுமா?

கல்வி அமைச்சில் தமிழ் மொழிக்கென தனியான பிரிவும், தமிழர் ஒருவர் அவ்வமைச்சின் இராஜாங்க அமைச்சராகவும் இருக்கும் நிலையில், வடக்கு – கிழக்கு உட்பட தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட கல்விச் சமூகத்தினருக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள், சுற்றுநிருபங்கள், கைநூல்கள், குறிப்பேடுகள் போன்றவை சிங்கள மொழியிலேயே அனுப்பப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலைமையை மாற்றியமைக்க எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளக் குறித்து ஆராயப்படுகின்றனவா? என்பது குறித்து கூற முடியுமா?

நாட்டில் சுமார் 72 பிரதேச செயலகங்கள் இரு மொழி பிரதேச செயலகங்களாக உள்ள நிலையில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களின் வசதி கருதி இப் பிரதேச செயலகங்களில்  மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? என்பது பற்றி கூற முடியுமா?

குறிப்பாக, பல அரச நிறுவனங்களுடன் தமிழ் மொழி மூலமான தொடர்புகளை மேற்கொள்ள இயலாத நிலையே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதனைத் தவிர்ப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது பற்றி அறியத்தர முடியுமா?

தமிழ் மொழி அமுலாக்கம் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கும்வரை காத்திருக்காமல், இது தொடர்பில் ஆராய்ந்துபார்த்து உரிய நடவடிக்கைகளை எடுக்க அரச கரும மொழிகள் ஆணைக்குழு ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்து அதன் மூலமாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்பட்டு, செயற்பாடுகள் ஏதும் முன்னெடுக்கப்படுகின்றனவா?

அரச நிறுவனங்களில் இரு மொழிகளில் தேர்ச்சி பெற்ற அலுவலர்களின் பற்றாக்குறை மற்றும் ஏனைய வளப் பற்றாக்குறைகளை நீக்குவதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் ஏதேனும் உண்டா என்பது பற்றி விபரிக்க முடியுமா?

சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் மொழியையும், தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சிங்கள மொழியையும் கற்பதே இந்த நாட்டுக்கான வலுவானதும், ஆரோக்கியமானதுமான மொழிக் கொள்கையாக இருக்க முடியும்.

எனவே, இதற்கேற்ற வகையில் ஆரம்பம் முதலே மாணவர்கள் கல்வி பயிலக் கூடிய வகையில் தேசிய கல்விக் கொள்கைத் திட்டமொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி கூற முடியுமா?

அதற்கப்பால் தற்போதைய அரச அலுவலர்களுக்கு இரு மொழிகள் கற்பதற்கான வாய்ப்பு – வசதிகளை ஏற்படுத்தி, அச் செயற்பாடுகளை உறுதி செய்வது தொடர்பில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அறியத்தர முடியுமா?

அரச கரும மொழிகள் தொடர்பான கொள்கையின் அமுலாக்கத்திற்குப் பொறுப்பான பிரதம அரச கரும மொழிகள் அமுலாக்கல் அலுவலர்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமுலாக்கல் அலுவலர்கள் அதற்கான தேர்ச்சியினைப் பெற்றவர்களா? என்பது குறித்தும், அரச கரும மொழிகள் அமுலாக்கம் தொடர்பில் அவர்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்பில் தொடர் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்பது குறித்தும் தெளிவுபடுத்த முடியுமா?

மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

டக்ளஸ் தேவானந்தா பா. உ.

செயலாளர் நாயகம் – ஈபிடிபி

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்

Related posts:


வடமராட்சியில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலால் பாரம்பரிய மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன - நாடா...
இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  - நாடாளுமன்றில்...
கிளிநொச்சி விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை இலவசமாக வழங்க ஏற...