நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? – கல்வி அமைச்சரிடம்  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, September 21st, 2016

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சர் அகிலவிராஜ் அவர்களிடம் கெள்வி எழுப்பியுள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போதே  அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் –

நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா, ஹட்டன், ஹங்குராங்கெத்த, கொத்மலை, வலப்பன ஆகிய ஐந்து கல்வி வலயங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் தமிழ்ப் பாடசாலைகளைப் பொறுத்த வரையில், நுவரெலியாவில் 116, ஹட்டனில் 106, வலப்பனையில் 26, கொத்மலையில் 37, ஹங்குராங்கெத்தவில் 11 என்ற வகையில் மொத்தமாக 296 பாடசாலைகள் உள்ளன.

இந்த வகையில், நுவரெலியா மற்றும் ஹட்டனைப் பொறுத்த வரையில் 222 தமிழ் மூலப் பாடசாலைகள் உள்ளன. இவ்விரு வலையங்களிலும் சிங்கள மொழி மூலப் பாடசாலைகள் சுமார் 75 வரையிலேயே உள்ளன. இந்த நிலையில் நுவரெலியா கல்வி வலயத்தில் சிங்கள மொழி மூலமான கல்விப் பணிப்பாளரின் கீழான நிர்வாகமே நடைபெறுவதாகவும், ஹட்டன் கல்வி வலயத்தில் தமிழரல்லாத ஒருவரே பதவிக்கு வருவதாகவும் அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மொழி புரியாத அதிகாரிகள் செயற்படுகின்ற நிலையில் அப் பகுதியில் தமிழ்க் கல்வி நிலையை மேம்படுத்த இயலாதுள்ளதாக அப்பகுதி கல்விசார் சமூகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். இந்த விடயத்தில் சுமூகமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குக் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா? என டக்ளஸ் கேள்வி எழுப்பினார்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களிடம் தொடர்ந்தும் தனது கேள்விகளை முன்வைக்கையில், மேற்படி மாவட்டத்தில் கல்விசார் அனைத்து விடயங்களும் சிங்கள மொழி மூலமே இடம்பெறுவதாகவும், தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு சிங்கள மொழி மூலமான பணிப்பாளர்களும், ஆசிரிய ஆலோசகர்களும் சென்று மேற்பார்வை செய்கின்ற நிலை உருவாகியிருப்பதாகவும் மேலும் தெரிய வருகிறது. இவ்வாறு மொழி புரியாத அதிகாரிகள் செயற்படுகின்ற நிலையில் அப் பகுதியில் தமிழ்க் கல்வி நிலையை மேம்படுத்த இயலாததாக உள்ளதாக அப்பகுதி கல்விசார் சமூகத்தினர் எடுத்துக் காட்டுகின்றனர்.

ஒரு மொழி மூலமான பாடசாலைகள் அதிகம் காணப்படுகின்ற கல்வி வலயத்தில் அம் மொழி மூலமாக நிர்வாகக் கடமைகளை ஆற்றக்கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே அப் பாடசாலைகளின் மூலமான நோக்கங்களை முழுமையாக அடைய முடியும். அந்த வகையில் எமது நாட்டின் இலவசக் கல்விக் கொள்கையை எமது மாணாக்கர் அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்று சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியதுடன், மேற்படி எனது கேள்விக்கான பதிலையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தையும் கௌரவ அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் கூறினார்.

Related posts:

புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியுhது? நாடாளுமன்றில் டக்ள...
வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? ...