பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க விடுவதா – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, May 5th, 2017

முல்லைதீவு, துணுக்காய், உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 50 வீட்டுத் திட்ட மக்கள் ஏற்கனவே யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, தற்போது மீள்குடியேற்றப்பட்ட நிலையில் அடிப்படை வசதிகளின்றி பாதிக்கப்பட்டு வருவது தொடர்பில் உரிய அவதானமெடுத்து, அவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (05) நாடாளுமன்றத்தில் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், பெண் தலைத்துவத்தைக் கொண்ட குடும்பங்கள், மற்றும் விஷேட தேவைகள் கொண்டவர்களில் 50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, இந்திய அரசின் உதவியுடனான வீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் 50 வீடுகள் அமைக்கப்பட்டு, முல்லைதீவு, துணுக்காய், உயிலங்குளம் பகுதியில் 2012ஆம் ஆண்டு குடியமர்த்தப்பட்டன. இக் குடியேற்றமானது 50 வீட்டுத் திட்டம் என அழைக்கப்படுகின்றது.

இக் குடியேற்றத் திட்டத்தில், மின்சாரம், தண்ணீர், முன்பள்ளி, பாடசாலை போன்ற வசதிகளின்மை, பிரதான வீதி முதல் உள்ளக வீதிகள் வரை புனரமைப்பின்மை காரணமாக, இக் குடியேற்றத் திட்டத்தைக் கைவிட்டு மக்கள் வெளியேறுகின்ற நிலையே உருவாகியுள்ளதாகவும், அந்த வகையில் தற்போது 28 குடும்பங்கள் வெளியேறியுள்ளன எனவும் தெரிய வருகின்றது.

நேரடி யுத்தப் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள எமது பகுதிகளில் வீடில்லாப் பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உள்ள நிலையில், கடினமான முயற்சியின் பயனாகக் கிடைத்து, பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் வீடுகள் அமைக்கப்பட்ட வரலாறு தங்களுக்குத் தெரியும் என எண்ணுகின்றேன். எனவே, வீடுகள் இவ்வாறு கைவிடப்படும் நிலையானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

எனவே, உயிலங்குளம் 50 வீட்டுத் திட்டத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு சாதகமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும், இவ்வாறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், அக் குடியேற்றத்தைக் கைவிட்டுச் சென்ற குடும்பங்கள் மீளக் குடியேற வராத நிலை உறுதி செய்யப்பட்டால், காலியான வீடுகளை வேறு மாற்றுத்திறனாளிகளுக்கோ, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கோ வழங்கக் கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் - நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா ...
நியமனத்தை எதிர்பார்த்திருக்கும் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...
மருதங்கேணியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்படும் கடற்றொழில் நடவடிக்கைக்கு சட்ட ரீதியிலான அனுமத...

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்ட...
புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம...