ஒட்சுட்டானுக்கென தனியானதொரு பிரதேச சபையை  அமைப்பதில் தடைகள் ஏதும் உள்ளனவாகு – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, July 8th, 2016

இன்று வரையிலும் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் அலுவலகம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து செயற்படுகின்றது. இந்நிலையில், ஒட்டுச்சுட்டான் பகுதி வாழ் மக்கள் தமது பிரதேச சபை தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக புதுக்குடியிருப்பு செல்ல நேரிடுவதாகவும் இதனால் குறித்த மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்துவருவதாகவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(7) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவரது உரையின் முழுவடிவையும் எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

முல்லைதீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மூவின மக்களுமாக 19,096 பேர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு 1990ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் திகதி பிரதேச செயலாளர் அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டது.

உதவி அரச அதிபர் அலுவலகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அலுவலகம், ஒட்டுசுட்டான், மேல்பற்று வடக்கு கிராம சபைக் கட்டடத்தில் இயங்கிவந்த நிலையில், 1998ஆம் ஆண்டு இடம்பெற்ற இடப்பெயர்வின்போது, முத்தையன்கட்டு, இடதுகரை பிரதேசத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் புதுக்குடியிருப்புக்கு இடமாறியது.

அதன் பின்னர், 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கற்சிலைமடுவில் தனியார் வீடொன்றில் இயங்கிய நிலையில் பின்னர் மீண்டும் ஒட்சுட்டானில் தனியார் வீடொன்றில் இயங்கி, 2006ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ம் திகதி முதல் ஒட்டுசுட்டானில் புதிதாக அமைக்கப்பட்ட நிரந்தர கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்தது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் அலுவலகமானது இன்று வரையிலும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து இயங்கிவருகின்ற நிலையில், ஒட்சுட்டான் பகுதி வாழ் மக்கள் தங்களது பிரதேச சபை தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக புதுக்குடியிருப்பு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், திருமுறிகண்டி, கூழாமுறிப்பு, ஓதியமலை, பெரியகுளம், தண்டுவான், பழம்பாசி, எபரிய, இத்திமடு போன்ற பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்த நிலையில் தங்களது பிரதேச சபை தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு புதுக்குடியிருப்பு நோக்கிச் செல்ல வேண்டிய நிலையில் இருந்துவருகின்றனர்.

இந்த நிலையில், ஒட்டுசுட்டானுக்கென தனியான பிரதேச சபை ஒன்றினை அமைத்துக் கொள்வதற்காக இப் பகுதி மக்கள் பல ஆணடு காலமாக முயற்சித்து வருகின்ற போதிலும், அவர்களது முயற்சிகள் ஈடேறாத நிலையிலேயே உள்ளன.

ஒட்சுட்டானுக்கென தனியானதொரு பிரதேச சபையை அமைப்பதில் தடைகள் ஏதும் உள்ளனவா?

தடைகள் ஏதும் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்து உரிய பிரதேச சபையை அமைக்க நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து விளக்க முடியுமா?

அவ்வாறான தடைகள் ஏதும் இல்லாதவிடத்து, இப் பிரதேச சபையை எவ்வகையில், எப்போது அமைக்க முடியுமென தெளிவுபடுத்த முடியுமா?

அதே நேரம், வெலிஒயா பிரதேச செயலர் பிரிவானது முல்லைதீவு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வரும் நிலையில், இங்குள்ள 9 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் 4 கிராம சேவையாளர்கள் பிரிவுகளின் பிரதேச சபை தொடர்பான பணிகள், வவுனியா மாவட்டத்தின், வவுனியா வடக்கு பிரதேச சபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஏனைய 5 கிராம சேவையாளர்கள் பிரிவுகளின் பிரதேச சபை தொடர்பான பணிகள், முல்லைதீவு மாவட்டத்தின் கரைதுபை;பற்று பிரதேச சபையின் கீழ் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், நிர்வாக ரீதியில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைதீவு மாவட்டத்தின் கீழ் செயற்பட்டுவரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள அனைத்து கிராம சேவையாளர்கள் பிரிவுகளினதும் பிரதேச சபை தொடர்பான பணிகளை முல்லைதீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடியுமா?

அல்லது, மேற்படி நிர்வாக ரீதியிலான சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய வகையில் மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கை என்ன என்பது பற்றி தெளிவுபடுத்த முடியுமா?

இன்றைய பாராளுமன்ற சபையில் எனது மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் வழங்கவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

Related posts:

இரணைமடு - யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? -  நாடா...
உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுளின் இழப்பினை ஈடு செய்ய நட...
புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் ...

சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதேனும் நடவட...
யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் - நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா ...
தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியுhது? நாடாளுமன்றில் டக்ள...