யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்டா? நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, May 17th, 2016
யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் தொடர்பில் காவலத்துறையினர் அண்மையில் ‘ரொக் டீம்’ என்றொரு குழுவினரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவரும் நிலையில், அக் குழு தொடரப்பாகவும், யாழ் குடா நாட்டில் சமூக  விரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிலையியற் கட்டளை 23/2 ன் கீழ் இன்றைய தினம் முன்வைத்துள்ள விடயங்கள்.
யாழ் குடாநாட்டில் போதை வஸ்து பாவனை மற்றும் கடத்தல் சம்பவங்கள், வாள் வெட்டுச் சம்பவங்கள், கொலை, கொள்ளை, அச்சுறுத்தல்கள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகள் போன்ற சமூக சீர்கேட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. காவல்த் துறையினரின் பல்வேறு நடவடிக்கைகள் இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையிலும், இவ்வாறான சம்பவங்கள் குறைவின்றி அதிகரித்து வருவதையே அன்றாடம் வெளிவருகின்ற பத்திரிகைகள் மற்றும் ஏனைய ஊடகங்களின் மூலம் தெரியவருகின்றது. இவ்விடயம் தொடர்பில் நான் கடந்த 2016. 02. 24ம் திகதி நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 23/2ன் கீழ் எழுப்பியிருந்த வினாக்களுக்கு தாங்கள் பதிலளித்து, இவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்திருந்ததுடன், இவற்றை ஆராயவென யாழ்ப்பாணத்திற்கான நேரடி விஜயத்தையும் மேற்கொண்டு, காவல்த்துறை உட்பட ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணித்திருந்தீர்கள். அந்த வகையில், எமது மக்கள் சார்பாக தங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தாங்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, யாழ் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை நடாத்தி, அங்கு நிகழும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தததன் பின்னரும், யாழ் குடாநாட்டில் அவ்வாறான செயற்பாடுகள் குறைவின்றி தொடர்ந்ததையே காணக்கூடியதாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 08ம் திகதி காவல்த்துறையினர் ‘ரொக் டீம்’ என அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து பேர் அடங்கிய ஒரு குழுவினரைக் கைது செய்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இக் குழுவினர், கடந்த காலங்களில் யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுள்ள 09 பாரதூரமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் 25 வயதுக்குக் குறைந்தவர்கள். இக் குழுவிற்குத் தலைமைத் தாங்கியதாகக் கூறப்படுகின்ற மானிப்பாயைச் சேர்ந்த மோகன் தனுசனின் வயது 20 ஆகும். இதில், உரும்பிராயைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுமார் நிசாந்தன், கோப்பாயைச் சேர்ந்த 22 வயதுடைய ஸ்ரீ ரஞ்சன் ராகுலன், கோப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய கோபால் கிஷோர், கல்வியங்காட்டைச் சேர்ந்த 19 வயதுடைய இரத்தினசிங்கம் செந்தூரன் ஆகியோர் அடங்குவதாகத் தெரிய வருகிறது.
யாழ் குடாநாட்டில் மேற்படி வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்திருந்த நிலையில், நான் உட்பட பல்வேறு அரசியல் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், நீதிபதிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், பல்வேறு அழுத்தங்களை முன்வைத்துவந்த நிலையில், இக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் குழுவினர் கைது செய்யப்பட்டதையடுத்து, யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவந்த வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் ஓரளவு கட்டுப்பாட்டுக்கு வந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இக் குழுவினர் கைது செய்யப்பட்ட கடந்த 08ம் திகதி இரவு வண்ணார்ப்பண்ணை, சிவப்பிரகாசம் வீதியில் ஒரு வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றும், 11ம் திகதி, தாவடி, பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் ஒரு பெண்ணின் 11 பவுன் தங்கத் தாலி ஒன்று வழிபறி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றும்,  12ம் திகதி அளவெட்டி பகுதியில், 21 வயதுடைய இளைஞன் மீது மூவர் கொண்ட  குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
மேற்படி ‘ரொக் டீம்’ குழுவினருக்கு சுவிட்சர்லாந்திலிருந்து வங்கி ஊடாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பணம் வந்துள்ளதாகவும், இவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில்  ஓரிரு கொள்ளைச் சம்பவங்களைத் தவிர அதிகமானவை தாக்குதல் சம்பவங்கள் என்றும் ஊடகங்கள் வாயிலாகத் தெரியவருகின்ற நிலையில், இக் குழுவின் நோக்கம், யாழ் குடாநாட்டில் தொடர்ந்து பதற்ற நிலையைப் பேணுவதா? என்றும், இந்த நிலையில், யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்திருந்த கொள்ளைச் சம்பவங்களுடன் வேறேதும் குழுக்களுக்கு அல்லது நபர்களுக்கு தொடர்புகள் இருக்குமா என்றும்  சந்தேகம் எழுகிறது.
எனவே, மேற்படி ‘ரொக் டீம்’ குழுவினர் கைது செய்யப்பட்டதன் பின்னர் யாழ் குடாநாட்டில் மேற்படி சம்பவங்கள் குறைந்துள்ளதால், இதுவரையில் அங்கு இடம்பெற்றுவந்த சம்பவங்களுக்கு இக் குழுதான் முழுப் பொறுப்பா? அல்லது, வேறேதும் குழுக்கள் அல்லது நபர்கள் இவற்றில் தொடர்புபட்டு, மேற்படி குழு கைதானதன் அச்சம் காரணமாக தங்களது செயற்பாடுகளை முடக்கியுள்ளனரா? என்பது குறித்து இனங்காணப்பட்டுள்ளதா? இனங்காணப்பட்டிருப்பின், அது குறித்து தெளிவுபடுத்த முடியுமா?
வேறு குழுக்கள் அல்லது நபர்களுக்கும் இவ்வாறான செயற்பாடுகளில் தொடர்புகள் இருக்குமாயின் அவர்களையும் உடனடியாக கைது செய்வதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி அறியத்தர முடியுமா?
மேற்படி ‘ரொக் டீம்’ குழுவுடன் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசியல்வாதியின் மகன் ஒருவருக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மை என்ன  என்பது பற்றி கூற முடியுமா?
மேற்படி ‘ரொக் டீமின்’ பின்னணி மற்றும்  நோக்கம்  பற்றிய விபரங்களைத் தர முடியுமா?
இவ்வாறான குழுக்கள் மீண்டும் உருவாகாத வகையில் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது பற்றி அறியத்தர முடியுமா?
மேற்படி குழுவில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் குறைந்த வயதுடையவர்கள் என்பதுடன், அதில் இருவர் பாடசாலை மாணவர்களென்றும் அறிய முடிகிறது. எனவே, இத்தகைய இளம் பராயத்தினர் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாத முறையில் ஏதேனும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை சமூக மட்டத்தில் விரிவாகவும், பரந்தளவிலும் மேற்கொள்ள இருக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து கூற முடியுமா?
யாழ் குடாநாட்டில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் ஈடுபட்டிருந்ததாக ஏற்கனவே ‘ஆபா’ என்கின்ற ஒரு குழுவினர் கைது செய்யப்பட்டிருந்தனர். அக் குழுவினரின் செயற்பாடுகள் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளனவா?
யாழ் குடாநாட்டில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கீழ் வருகின்ற 10 பொலிஸ் பிரிவுகளைச் சார்ந்த பகுதிகளிலேயே அதிகளவு குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகத் தெரியவருகிறது. அதே நேரம், யாழ் குடாநாட்டு பொலிஸ் நிலையங்களில் அப் பகுதி சார்ந்த தமிழ்  அதிகாரிகள் போதியளவு நியமிக்கப்படாமையும் அங்கு குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
யாழ் குடாநாடு உட்பட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் பேதியளவு அப் பகுதி சார்ந்த தமிழ் காவல்த்துறையினரை நியமிக்க நடவடிக்கை எடுத்தால் என்ன?
மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கீழான 10 பொலிஸ் நிலையங்களைச் சார்ந்த பகுதிகளிலும் காவல்த்துறையினரின் ரோந்து நடவடிக்கைகளை  – குறிப்பாக இரவு வேளைகளில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க முடியுமா?
போதைப் பொருட்கள் மற்றும் கேரள கஞ்சா போன்றவற்றைக் கடத்துவதுற்கான பிரதான தளமாக வடக்கு மாகாணம் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு கடத்தப்படுகின்றவற்றில் ஓரளவு கால்த்துறையினரால் கரைகளில் வைத்தே கைப்பற்றப்படுகின்றன என்றும், கடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்படுகின்ற சம்பவங்கள் மிகவும் குறைவு என்றும், இவ்வாறு கடத்தப்படுகின்ற போதைப் பொருட்கள் மற்றும் கேரள கஞ்சா என்பவை அதிகளவில் தென்பகுதிக்கே கொண்டுவரப்படுகின்றன எனவும், இவற்றில் ஒரு தொகை யாழ் குடாநாட்டில் பாவனையில் இருந்து வருவதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில், மேற்படி கடத்தல் செயற்பாடுகளையும், யாழ் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவனையையும் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறியத்தர முடியுமா?
இரண்டு நாட்களுக்கு ஒன்று என்ற வகையில் யாழ் குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறியத்தர முடியுமா?
மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களை கௌரவ அமைச்சர் சாகல ரத்னாயக்க அவர்கள் வழங்குவாராக.

Related posts:

அனுமதியளிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலை எவரும் தடுக்கமுடியாது : விரைவில் உரிய நடவடிக்கை - செயலாளர் நாயக...
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி. அஞ்ச...
மண்டைதீவில் அமையவுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!