வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, July 10th, 2019

வவுனியா வடக்கு VA/223B  சின்னடம்பன் கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த கரப்பக்குத்தி கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 17 பயனாளிகளுக்குரிய வீடமைப்புத் திட்டம் தற்போது தடைப்பட்டுள்ளதாக கரப்பக்குத்தி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேற்படி வீடமைப்புத் திட்டத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காணிகள், 2006 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் அங்குள்ள சில தனி நபர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள அரச அனுமதிப் பத்திரம் கொண்ட காணிகள் என்றும், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்புத் திட்டத்திற்கென இக்காணிகள் அப்பகுதி பிரதேச செயலாளர் உள்ளிட்டோரால் சிபாரிசு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த வன இலாக்காவினர் அக் காணிகளை பார்வையிட்டுச் சென்றதாகவும், அப்போது அக்காணிகள் பற்றி எவ்விதமான பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கதைக்கவில்லை என்றும் தெரிவிக்கும் மேற்படி மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர், கடந்த ஜூன் 20ஆம் திகதி வீட்டுப் பயனாளிகள் அக் காணிகளில் அத்திவாரங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப் படையினருடன் அங்கு வருகை தந்திருந்த வன இலாக்காத் துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்த 7 நபர்களை கைது செய்துள்ளனர் என்றும், இதனால் அவ்வீட்டுத் திட்டம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேற்படி காணி தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்புத் திட்டத்திற்கென வழங்கப்பட்ட நாள் முதற் கொண்டு அக்காணிகள் பற்றி எவ்விதமான அக்கறையினையும் காட்டியிராத வன இலாக்காத் துறையினர், மேற்படி வீடமைப்புத் திட்டத்திற்கான நிதி பயனாளிகளுக்கென விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், அத்திவாரங்களை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தபோது, இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பதானது தங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மேற்படி மாதர் அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, மேற்படி விடயம் தொடர்பில் ஆராய்ந்து, கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை விரைவில் மேற்கொள்ள முடியுமா? எனது மேற்படி கேள்விக்கான பதிலையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்  நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 27/2 கேள்வி நேரத்தின்போது வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

Related posts:

அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை...
வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை...
யாழ். பல்கலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டு...

மாகாண சபை தவறியுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தலையிட...
வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன...
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...