மொழி அமுலாக்கலில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, January 6th, 2021

இரண்டாம் மொழிப் பரிச்சயத்திற்கான சான்றிதழ்களையும் கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளுகின்ற அரச அதிகாரிகள் பலரும் இரண்டாம் மொழியில் ஒரு வார்த்தைகூட புரிந்து கொள்ள முடியாத நிலைமைகளையே நடைமுறையில் பார்க்கின்றோம் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரச கரும மொழிகள் அமுலாக்கலில் அரச அதிகாரிகள் தங்களது முழுமையான பங்களிப்பினை அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தண்டனைச் சட்டக் கோவை சான்று மற்றும் பிணை சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் குறித்த விவாதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இது குறித்து தொடர்ந்தும் கூறுகையில்  –

இந்த நாட்டிலே அரச கரும மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் இருத்தல் வேண்டுமென இலங்கையின் அரசியலமைப்பின் 14வது அத்தியாயத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும், இன்று வரையில் இந்த நாட்டில் அது நடைமுறையில் இல்லாதது, கவலைக்குரிய அதே நேரம் கண்டிப்புக்குரிய ஒரு விடயமாகும் என்பதை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அரச சுற்றறிக்கைகள் முதற்கொண்டு, அரச அதிகாரிகளின் கடிதங்கள் வரையிலாக அனைத்தையும் அரச நிறுவனங்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே வாழ்ந்து வருகின்ற சிங்கள மொழி பரிச்சயமற்றவர்களுக்கு சிங்கள மொழி மூலமாகவே அனுப்பி வைப்பதும், அதனைப் பெறுகின்றவர்கள் மொழி புரியாத காரணத்தினால் பல்வேறு இடையூகளுக்கு உட்படுவதும் பல காலமாகவே தொடர்ந்து வருகின்றது.
கடந்த 03ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களுக்கு இளைஞர் சேவைகள் மன்றத்தினரால் வழங்கப்பட்டுள்ள வெற்றிச் சான்றிதழ்கள் அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் இருந்ததால், அதனை அந்த இளைஞர்கள் நிராகரித்திருந்தனர் எனச் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதற்குக் காரணம் கேட்டால், கொரோனா காரணமாக சிங்கள அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர், தமிழ் அதிகாரிகள் வவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால், சிங்கள அதிகாரிகள் கொரோனாவுக்கு முகங்கொடுத்தோ முகங்கொடுக்காமலோ பணிக்கு வருகின்றனர், தமிழ் அதிகாரிகள் மட்டும் கொரோனாவுக்கு அஞ்சி வீட்டிலேயே இருக்கின்றனரா? என்ற கேள்வி எழுகின்றது.
இந்த நாட்டின் இளைஞர் விவகார அமைச்சர், கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள், அமைச்சராக நியமிக்கப்பட்டு, தனது பதவியை ஏற்றுக் கொள்வதற்காக அவரது அமைச்சுக்கு வருகை தந்திருந்தபோது, அமைச்சு பெயர் பலகையில் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்த அமைச்சின் பெயரில் பிழை இருப்பதைக் கண்டு, அதனைத் திருத்தச் செய்த பின்னர் பதவியேற்றதை இங்கு நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
அத்தகைய ஒருவர் இளைஞர் விவகார அமைச்சராக இருக்கின்ற நாட்டில், இளைஞர்கள் சேவைகள் மன்ற அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்வதானது மிகவும் துரதிஸ்டவசமான முன்னுதாரணம் ஆகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
எனவே, அரச கரும மொழிகள் அமுலாக்கலில் அரச அதிகாரிகள் தங்களது முழுமையான பங்களிப்பினை அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டியது அவசியமாகின்றது. குறிப்பாக, இந்த அரசாங்கத்திலே இருக்கின்ற அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பலரும் அரச கரும மொழிகளை அமுலாக்குவது தொடர்பில் அக்கறை காட்டி வருகின்றனர். இதற்கு அரச அதிகாரிகள் தங்களது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது அவசியமாகும் என்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கடந்த காலங்களில் இரண்டாம் மொழிப் பரிச்சயத்திற்கென அரச அதிகாரிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு, அதற்குரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த போதிலும், அந்த பயிற்சிகளை மேற்கொண்ட பலரும் கொடுப்பனவுகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, அப் பயிற்சிகளில் தேறியதாக சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட போதிலும், அந்த அதிகாரிகாரிகளால் இரண்டாம் மொழியில் ஒரு வார்த்தைகூட புரிந்து கொள்ள இயலாத நிலைமைகளே இன்றும் காணப்படுவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம்.
எனவே, இரு மொழி மூலமான அரச நிறுவனங்களின் சேவைகளை பொது மக்கள் பெற்றுக் கொள்வதென்பது பெரும்பாலான வேளைகளில் அசாத்தியமாகவே காணப்படுகின்றது.
ஆங்கில மொழி என்பது கூட்டிணைப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்ற மொழி எனக் கூறப்படுகின்றது. எனினும், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கற்றவர்கள் – கற்கின்றவர்களில் எத்தனை வீதமானோர் ஆங்கில மொழித் தேர்ச்சி பெறுகின்றனர் என்பது பலரும் அறிந்த விடயமாகும்.
இத்தகைய நிலைமையில், அந்தந்த மொழிகளில் பரிச்சயம் மிக்கவர்கள் வாழ்கின்ற மற்றும் இரு மொழி மூலமான பரிச்சயம் மிக்கவர்கள் வாழ்கின்ற பகுதிகளில் போதுமானளவு அந்தந்த மொழிகளில் பரிச்சயமுள்ளவர்களை அல்லது இரு மொழிகiளில் நடைமுறையில் பரிச்சயம் உள்ளவர்களை அரச நிறுவனங்களில் முக்கியப் பதவிகளில் அமர்த்துவதற்கும், அத்தகைய ஆளணிகள் பற்றாக்குறையான சந்தர்ப்பங்களில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை பதவிகளில் அமர்த்துவதற்குமான நடவடிக்கைகள் அவசியமாகின்றது.
இங்கே, மொழிபெயர்ப்பாளர்கள் என்கின்ற போது, எமது நாட்டில் மொழிபெயர்ப்புத்துறை என்பது, ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது போல், பதவி நிலை உயர்த்தப்படுவதுடன், ஊதிய மட்டமும் உயர்த்தப்படல் வேண்டும்.
தண்டனை சட்டக் கோவை மட்டுமல்ல, அரச ஆவணங்கள் அனைத்தும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டாலும், அவற்றை தமிழ் கற்றறிந்த மக்களால்கூட புரிந்து கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது.
மூல மொழியில் இருக்கின்ற ஒரு சொல்லை தமிழ் மொழிக்கு பெயர்க்கின்ற போது, அந்த மூலச் சொல்லுக்குப் பொருத்தமில்லாத ஒரு சொல்லை தமிழ் மொழியில் கொண்டு வருவதென்பது மொழியெர்ப்பல்ல. ஆனால், ஒரு கடுமையான சொல்லை மூல மொழிச் சொல்லின் மொழிபெயர்ப்பாக தமிழ் மொழியில் கொண்டு வந்தாலும் அதனைப் புரிந்து கொள்ள முடியும். தமிழில் காலங்கடந்த சொல் என்று ஒன்றில்லை. ஆனால், ஒரு வார்த்தையை மூல மொழியில் இருந்து தமிழுக்கு கொண்டு வரும்போது, அந்த வார்த்தையின் ஒவ்வொரு சொற்களையும் நேரடி அர்த்தத்தில் தமிழில் எழுதுகின்றபோது, அந்த வார்த்தையின் அர்த்தங்களில் பிறள்வு நிலை ஏற்படுகின்றது.
எனவே, மூல மொழியில் இருப்பதை உள்வாங்கி, அதே மூல மொழி அர்த்தத்துடன் அதை தமிழ் மொழியில் எழுதினால் இந்த மயக்க நிலை ஏற்படாது என்பதை அவதானத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோன்று, அரசாங்கம் சார்பில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களுக்கென சிங்கள மொழியில் சூட்டப்படுகின்ற பெயர்களையும் தமிழாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்தும் முன்வைத்து வருபவன். கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களது காலத்தில் அத்தகைய மொழிமாற்றங்களை எனது மேற்கொண்டிருந்தோம். குறிப்பாக, ‘திவிநெகும’ என்பதற்கு தமிழில் வாழ்வின் எழுச்சி என்றும், ‘பிம் சவிய’ என்பதற்கு நிலச் சக்தி என்றும்பல சொற் பதங்களைக் கொண்டு வந்திருந்தோம்.
பின்னர் கடந்த நல்லாட்சி எனக் கூறப்பட்ட ஆட்சியில் அது புறக்கணிக்கப்பட்டிருந்தது. ‘கம்பெரலிய’ திட்டத்திற்கு தமிழ் பெயர் தேவை என நான் குறிப்பிட்டபோது, அது தேவை இல்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறினார்கள்.
தற்போதும், பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்ற போதும், அவற்றுக்கான தமிழ் பதங்களையும் நாம் குறிப்பிட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும்போது, அதனை எமது மக்கள் உணர்வுப்பூர்வமாக ஏற்று, அவற்றுடன் இணைந்து செயற்பட வசதியாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு, மொழி அமுலாக்கும் என்பது இன்னமும் அதிகளவில் நடைமுறையில் வருவதற்கு அனைவரும் இயன்றளவு உழைக்க வேண்டியது அவசியமாகும் என்பதைதை மீண்டும் வலியுறுத்தி விடபெறுகின்றேன்.
நன்றி.

Related posts:

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு  டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோ...
சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை முடக்கும் வகையிலான ஏற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்த...

அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்! - டக்ளஸ் தே...
வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில்...
வடமாகாணத்தில் பாழடைந்து கிடக்கும் அணுகு வீதிகள் பாலங்கள் எப்போது புனரமைக்கப்படும் - நாடாளுமன்றில் டக...