நாட்டுக்கு தேசிய பொருளாதார கொள்கை அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, October 9th, 2018

‘முதற் கோணல் முற்றிலும் கோணல்’ என்பதுபோல் இந்த நாட்டின் பொருளாதார நிலைமை ஆகிவிட்டிருப்பது வேதனையைத் தருகின்றது. எனவே இப்போதாவது இந்த நாடு ஒரு தேசிய பொருளாதாரக் கொள்கையினை வகுத்து செயற்படுவதற்கு முன்வர வேண்டிய அவசியமே உணர்த்தப்பட்டு வருகின்றது என்றே கருதுகின்றேன். இந்த நாட்டுக்கு தேசிய பொருளாதாரக் கொள்கையின்மையே முதற் கோணலாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் 2018ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை தொடர்பான அறிக்கை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாடு இன்று மிக முக்கியமானப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது.  இந்த நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு சமாந்திரமான வகையில் அரச வருமானமானது விரைவான குறைபாட்டினைக் கண்டிருக்கின்றது. இது அரசின் பொதுச் சேவைகளை முன்னெடுப்பதில் தடையாகவுள்ளது. இத்தடையானது எமது மக்களையே பெரிதும் பாதிக்கின்றது. குறிப்பாக வடக்கு – கிழக்கு போன்ற கடந்தகால யுத்தப் பாதிப்புகளுக்கு நேரடியாக முகங்கொடுத்து பாரிய பின்னடைவுகளைக் கொண்டுள்ள பகுதி வாழ் மக்கள் பெரிதும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் இது பாதிப்பிக்கின்றபோது ஏற்கனவே பாதிப்புகள் அனைத்தும் நிலுவையில் இருக்கின்ற வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு மேலும் அரச சேவைகளின் தேவைகள் நிறைகின்ற நிலையில்  இது மீள் செலவிடப்பட வேண்டிய மிகைத் தொகையாக அமைந்துவிடுகின்றது.

இந்த நிலைமையில் அரச முதலீடுகளை நாம் எதிர்பார்ப்பதைவிட – அதற்கான வலியுறுத்தல்களை மேற்கொள்வதைவிட – அரச வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தே மிக முக்கிய அவதானங்களைச் செலுத்த வேண்டியிருக்கின்றது. இதனைச் செய்தால்தான் அரச செலவீனங்களை மேற்கொள்ள முடியும் என்பது பொதுவாகவே பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கின்ற விடயமாக இருக்கின்றது.

இங்கு அரச செலவினங்களைக் குறைத்தல் அல்லது கட்டுப்படுத்தல் என்கின்ற நிலை குறித்து பேசப்படுகின்றது. வீண் விரயங்கள் வீண் செலவினங்களால் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்று கூறப்படுகின்றது. இப்போதும்கூட இந்த வீண்விரயங்கள் வீண் செலவீனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி எழாமல் இல்லை. அதேநேரம் மக்களுக்கான அரச சேவைகளை கட்டுப்படுத்துவதோ – குறைப்பதோ ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு விடயமல்ல.

அதற்காக பொருட்களின் விலைகளை அதிகரித்தும் மறைமுக – நேரடி வரி விதிப்புகளை அதிகரித்தும் மட்டுமே அரச வருமானம் ஈட்ட வேண்டும் என்கின்ற நிலைமையில் தங்கியிருக்கக்கூடாது. இவ்வாறான செயற்பாடுகளால் மக்களை பட்டினி போட்டு அதன் மூலம் சுரண்டப்படுகின்ற வருமானத்தால் அம் மக்களுக்கு சேவை செய்வது என்பது ஏற்புடைய செயலாகாது.

இன்று இந்த நாடு வருமானம் ஈட்டுகின்ற பிரதான துறையாக உல்லாசப் பிரயாணத்துறை காணப்படுகின்றது. அந்தவகையில் இந்த நாடு இந்த வருடத்தில் 2 மில்லியன் உல்லாசப் பிரயாணிகளை எதிர்பார்த்திருந்தாலும் உல்லாசப் பிரயாணிகளை ஈர்ப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் இந்த நாட்டில் எந்தளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கின்றன? என்பது தொடர்பில் நிலவுகின்ற கேள்விக் குறி இன்னமும் அகன்றுள்ளதாகத் தெரியவரவில்லை.

அதேநேரம் நாட்டில் அடிக்கடி ஏற்படுகின்ற பணி நிறுத்தப் போராட்டங்களும் இத்துறையினை பாதிப்பதாகவே அமைகின்றன  உல்லாசப் பிரயாணத்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துகின்ற நிலையில் இருந்துவரக்கூடிய பொருளாதார வளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன – அல்லது அவற்றின் மூலமான பொருளாதார ஈட்டல்களுக்கு தடை ஏற்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கடற்றொழிலை இதற்கு உதாரணமாகக் காட்ட முடியும்.

ஆகவே ஒரு தொழிற்துறை இலாபகரமானதாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனது வள இடத்தில் இன்னொரு இலாபகரமான தொழில் கொண்டு அதனை மூடி விடுவது என்பதும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றது.

அந்த வகையில் இந்நாட்டின் கடற்றொழில்த்துறையானது பாரியளவிலான நவீனத்துவத்தினைக் கோரியும் விரிவாக்கலையும் கோரி நிற்பதுடன் தடைகளைத் தகர்த்தெறியவும் கோருகின்ற நிலையினைக் காண முடிகின்றது. இந்தத் தடைகள் உள்நாட்டுத் தடைகளாகட்டும் வெளிநாட்டுத் தடைகளாகட்டும் அவை கடல் வளப் பாதிப்புகளையும் அந்தந்த மாவட்ட கடற்றொழிலாளர்களது தொழிலுக்கான சுதந்திரமான உறுதிப்பாட்டையும் பாதிப்பதாக – அழிப்பதாகவே அமைந்து வருகின்றன.

நாட்டின் விவசாயத் துறையினை எடுத்துக் கொண்டாலும் அதனது முன்னேற்றத் தன்மை வெகுவாகக் குறைந்துகொண்டே வருகின்றது. விவசாயத் துறை தொடர்பில் இதுவரையில் இந்த நாட்டில் ஒரு தேசிய கொள்கை இல்லாத நிலையில் நாட்டில் ஒரு புறத்தில் மக்கள் மரக்கறி வகைகளுக்கு அதிக விலையினைக் கொடுக்க வேண்டிய நிலையில் இன்னொரு புறத்தில் மரக்கறி உற்பத்திகள் ஆயிரக் கணக்கான டொன்கள் அளவில் காட்டு யானைகளுக்கு கொட்டப்படும் நிலை ஏற்பட்டு வருகின்றது.

இதன்காரணமாக ஒரு புறத்தில் நுகர்வோரும் மறுபுறத்தில் விவசாய உற்பத்தியாளர்களுமே பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர். இந்த நாட்டில் தற்போதைக்கு விவசாயத் துறையில் ஈடுபடுகின்ற மக்கள் பெருமளவில் குறைந்து 20 வீதமான மக்களே அதில் ஈடுபடுகின்ற நிலை எற்பட்டுள்ளது. இந்த மக்களிலும் இன்று விவசாயத்துறை தொடர்பில் விரக்தி நிலையே ஏற்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் மிகவும் குறைந்த வருமானம் ஈட்டுகின்றவர்களாகவும் விவசாயத் துறை தொழிலாளர்களே காணப்படுகின்றனர்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியிழப்பு அதிர்ச்சிக்கு எதிராக வெங்காயம் உருளைக்கிழங்கு அரிசி போன்ற உள்ளூர் உற்பத்திகள் மக்களுக்கு உதவியாக அமையுமென அண்மையில் மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. இவை மட்டுமல்ல தற்போதைய இந்த நாட்டு பொருளாதார நெருக்கடி நிலைமையிலிருந்து மீள உள்ளூர் உற்பத்திகளின் பல்வேறு பொருட்களின் உதவிகளைப் பெற முடியும். இதையே நானும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளேன். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டதாகவே இல்லை.

இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது. இது உங்களால் எந்தளவுக்கு சாத்தியமாகும் எனக் கூற முடியாது. அதற்குரிய அடிப்படை ஏற்பாடுகள் இந்த நாட்டில் அத்திவாரமாகக் கூட இன்னும் உருப்பெறாத நிலையே காணப்படுகின்றது.

இது 1970ல் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருந்தும் பிற்காலமானது அதை நிராகரித்திருந்த பயணத்தை ஆரம்பித்துத் தொடர்ந்ததால் அதனது பயன்பாடு இந்த நாட்டுக்கு போதியளவில் கிட்டவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

ஆனால் 1997ல் இது மலேசியாவில் சாத்தியமானது. அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பொருளாதார ரீதியில் முன்னேறி இன்று தனது நாட்டுப் பொருட்களை உலக நாடுகள் கொள்வனவு செய்யக்கூடிய வகையிலான வழிவகைகளை இத்திட்டம் ஏற்படுத்திக் கொடுத்தது. சுமார் 6 வருட காலம் இறக்குமதிகள் நிறுத்தப்பட்டு தேசிய உற்பத்திகள் வலுப்படுத்தப்பட்டன. மலேசியா அன்று முன்னெடுத்திருந்த இத் திட்டம் அந்நாட்டு மக்களின் அங்கீகாரத்துடன், அர்ப்பணிப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டதால் அது வெகுவாகவே சாத்தியமடைந்திருந்தது.

இந்த நாட்டில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் நடுத் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். உற்பத்திகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இறக்குமதிகள் நிறைந்து கொண்டிருக்கின்றன.

நாட்டிலே ஏற்றுமதி உற்பத்தி வலயங்கள் தொடர்பில் அதிகளவு அக்கறையில்லாத நிலைமையே காணப்படுகன்றது. தீப்பெட்டி தொழிற்சாலைகளைக்கூட மூடுமளவுக்குக் கொண்டு வந்தாகிவிட்டது

அரச உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்களும் அதனது தவணை முறை செலுத்துகைகளும் நாட்டுக்கு சுமையாக இருக்கின்றன. அதாவது மொத்த தேசிய உற்பத்திக்கு சமாந்திரமாக எடுத்துக் கொண்டால் சுமார் 80 சதவீதமான கடன் பளு இருந்து வருகின்றது. சுமார் 5 பில்லியன் டொலர்கள் இந்த வகையில் அடுத்த வருடம் முதல் செலுத்துகை மேற்கொள்ள வேண்டியுள்ளன. இந்த வருடம் அதற்கான தயார் நிலை வருடமாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை

அதாவது ‘விடிய விடிய இராமாயணம். விடிந்தால் ராமன் சீதைக்கு என்ன முறை?’ எனக் கேட்பதுபோல் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் நீங்கள் நாள்தோறும் கதைத்தும் விவாதித்தும் இறுதியில் இப்போது என்ன செய்வது? எனத் திண்டாட வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.

சர்வதேச நாயண நிதியம் இலங்கையுடன் கொண்டுள்ள நீடித்த நிதி வசதியொன்றுக்கான ஆதரவளிக்கும் திட்டத்தின் மூலமாக மேற்படி கடன்கள் முகாமைத்துவப்படுத்தப்பட்டு வந்தாலும் இது ஒரு விடுதலைக்கான வழியன்றி, நெருக்கடி மிகுந்த நிலை என்பது காலப்போக்கில் தெரிய வரும் என்றே எண்ண வேண்டியுள்ளது. அதேநேரம் இந்த சர்வதேச நாணய நிதியம் கூட மேற்படி திட்டத்தின் ஊடான தனது 5வது கலந்துரையாடலில்கூட பொருளாதார மறுசீரமைப்பையே இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரச மீண்டெழும் செலவினம் தொடர்பில் பாரக்கின்றபோது அதுவும் கடந்த ஆண்டின் அரையாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 59497 மில்லியன் ரூபா அதிகரிப்பினையே இந்த வருட காலாண்டில் காட்டுகின்றது. அதேபோன்று ஊதியங்கள் ஓய்வூதியங்கள் என எல்லாமே அதிகரித்து அரசாங்கத்தினால் இச் செலவினங்களை தாங்க இயலாத நிலையேற்பட்டு அதுவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய செலவினங்கள் தொடர்பிலான முகாமைத்துவமின்மை காணப்படுகின்றது.

மேலும் நட்டத்தில் இயங்குகின்ற அரச நிறுவனங்கள் – அதிக பணியாளர்களையும் குறைந்த பயன்களையும் கொண்டதாக செயற்பட்டு வருகின்றன.

மறுபக்கத்தில் வரி அறவீடுகள் என்கின்றபோது சாதாரண மக்களிடமிருந்து பெறப்படுகின்ற வரிகள் செல்வந்தர்களிடமிருந்து நீங்கள் குறிப்பிடுகின்ற வகையில் அனைத்து வழிகளிலும் ஒழுங்குற அறவிடப்படுகின்றதா? என்பது தொடர்பில் இன்னும் தெளிவற்ற தன்மையே காணப்படுகின்றது.

எனவே இந்த நாட்டின் பொரளாதார நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டுமெனில் உடனடி – நடைமுறைச் சாத்தியமானதொரு வழிமுறைக்கு வந்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. தொடர்ந்தும் இதே வகையில் மந்த நிலையில் செல்வோமேயானால் இருண்ட யுகமானது மிக அருகாமையிலேயே இருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
விகிதாசார அடிப்படையில் முப்படைகள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களில் வேலைவாய்ப்பு தேவை - பிரத...
உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் - நாடாளும...