எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ள கடற்றொழிலாளர்களுக்கு புதிய திட்டம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Tuesday, December 12th, 2023

எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள உற்பத்தி செலவு அதிகரிப்பை சமாளிப்பதற்கு மாற்று திட்டம் ஒன்றை விரைவில் அமுல்ப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் விலையேற்றத்தை சமாளிக்கும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு மானியங்கள் வழங்கப்படுவதை சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புக்களும், இலங்கை கடலுணவுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்ற நாடுகளும் விரும்பாத நிலை காணப்படுவதால் மாற்றுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (11.12.2023) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத்  திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

முழுமையான உரை

நாடாளுமன்ற உரை – 11.12.2023

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இன்றைய தினம் எனது கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான சபை வாத – விவாதத்தில் கலந்துகொண்டு எனது கருத்துக்களை முன்வைப்பதற்கு வாய்ப்பு அளித்தமை குறித்து முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நாட்டின் பொருளாதார நிலைபேறுக்கு ஒரு பக்கம் பசுமை பொருளதாரத்தின் பங்களிப்பினைப் பெறுகின்ற அதேவேளை, நீலப் பொருளாதாரத்தின் மூலமான பங்களிப்பினையும், பசுமையூடான நீர் வேளாண்மைப் பொருளாதாரத்தின் பங்களிப்பினையும் வழங்குவதற்கென, அத்துறைகளை மேலும் வலுப்படுத்துவதே எமது எதிர்கால எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டில் எமது மேலதிக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றின் பயன்பாடுகளை நாம் எதிர்காலங்களில் அடைய முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் எமது மீனின உற்பத்தியானது, கடலோரத்தினைச் சார்ந்த கடற்றொழிலில் நூற்றுக்கு 40 வீதத்தினையும், ஆழ்கடல் கடற்றொழிலில் நூற்றுக்கு 32.7 வீதத்தினையும், நன்னீர் வோளாண்மையில் நூற்றுக்கு 27.2 வீதத்தினையும் கொண்டுள்ளது. அந்த வகையில், மொத்தமாக 293,880 மெற்றிக் தொன் மீனின அறுவடையினை நாம் அடைந்துள்ளோம்.

தனித்தனியே எடுத்துக் கொண்டால், கடலோர கடற்றொழில் உற்பத்தியானது 117.195 மெற்றிக் தொன்னாகவும், ஆழ்கடல் கடற்றொழில் உற்பத்தியானது 95.870 மெற்றிக் தொன்னாகவும், நன்னீர் வேளாண்மை உற்பத்தியானது 80.815 மெற்றிக் தொன்னாகவும் இருந்துள்ளது.

இதே காலகட்டத்தில் மொத்த மீனினக் குஞ்சுகளின் உற்பத்தி 54.46 மில்லியனாகும். இதில், 17.86 மில்லியன்,  நீர்வள செய்கை அபிவிருத்தி நிலையங்களின் மூலமும், ஏனையவை தனியார்த்துறை மூலமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

அதே நேரம், 32.15 மில்லியன், நன்னீர் இறால் குடம்பிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றில், 25.01 மில்லியன் இறால் குடம்பிகள் நீர்வளச் செய்கைகள் அபிவிருத்தி நிலையங்களினாலும், ஏனையவை தனியார்த் துறையினராலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 591 மில்லியன் உவர் நீர் இறால் குடம்பிகள் தனியார்த் துறையினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தை எடுத்துக் கொண்டால், 34,412.5 மெற்றிக் தொன் மீனின மற்றும் அது சார்ந்த உற்பத்திகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 16.952.2 மில்லியன் ரூபாவாகும்.

இவற்றில் அதிகமாக இலங்கையில் உற்பத்தியாகாத அல்லது உற்பத்தி குறைந்த மீனினங்கள், கருவாடு வகைகள் மற்றும் மீனின உணவு என்பன அடங்குவதுடன், இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்ற மீனினங்களில் ஓர்  அளவு, பெறுமதி சேர்க்கப்பட்டு, மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏனையவை மருத்துவமனைகளுக்கும், படையினருக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், தேசிய மட்டத்தில் மீனினங்களின் அறுவடை அதிகரிக்கின்ற செப்ரெம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இறக்குமதி மீனினங்களுக்கான இறக்குமதி வரியினை கிலோவுக்கு 400 ரூபாவாகவும், தேசிய மட்டத்தில் மீனினங்களின் அறுவடை குறைகின்ற ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுயில் இறக்குமதி மீனினங்களுக்கான இறக்குமதி வரியினை 275 ரூபாவாகவும் நிர்ணயித்து வருகின்றோம்.

ஏற்றுமதியினைப் பொறுத்த வரையில், 17,890.7 மெற்றிக் தொன் மீனினங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 7264.7 மில்லியன் ரூபாவாகும்.

அலங்கார மீன்களின் ஏற்றுமதி மூலம் 6373.7 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.

நீலப் பொருளாதாரத்திற்கேற்ப ஆழ்கடல் மற்றும் கரையினை அண்டியதான கடற்றொழில் உற்பத்திகளை மேலும் அதிகரித்துக்கொள்ளும் தேவை எம் முன்னே இருக்கின்றது. அந்த வகையில் அதற்கான ஏற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாக, சர்வதேச சந்தையில் டீசல் எரிபொருளின் விலையேற்றம் காரணமாக பலநாட் களங்களில் பலவும் கடலில் வெகுதூரம் செல்லாமல் குறிப்பிட்டளவு தூரம் வரையில் சென்று, ஒரே இடத்திலேயே கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதால் மீனின அறுவடையில் குறைவினைக் காணக்கூடியதாக இருக்கிறது. மண்ணெண்ணெய் எரிபொருளின் விலையேற்றம் காரணமாக குறிப்பிட்டளவு சிறிய படகுகளே கடற்றொழிலில் ஈடுபடுகின்றன.

எனவே, கடலில் அதிக மீனினங்கள் காணப்படுகின்ற இடங்களைக் காட்டுகின்ற தொழில்நுட்பக் கருவிகளை கடற்றொழில் படகுகளில் பொருத்துவது தொடர்பில் நாம் சர்வதேச மற்றும் தேசிய தனியார்த்துறையினருடன் கலந்துரையாடி வருகின்றோம். இந்த கருவி கடற்றொழில் படககளில் பொருத்தப்பட்டால், எரிபொருளுக்கான செலவினையும், காலத்தையும் குறைத்துக்கொள்ள முடியும்.

கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவது தொடர்பில் நாம் பல முயற்சிகளை மேற்கொண்டும் அது இயலாமற் போய்விட்டது. இத்தகைய மானியம் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இடமளிக்காத நிலை காணப்படுகின்றது. அதே நேரம் மீனின ஏற்றுமதி நாடுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இத்தகைய மானியம் வழங்கப்பட்டால், எமது நாட்டின் மீனினங்களின் விலைகளில் குறைவேற்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என ஏனைய ஏற்றுமதி நாடுகள் அஞ்சுகின்றன, எதிர்க்கின்றன.

இத்தகைய நிலையில், எமது கடற்றொழிலாளர்களின் தேசிய உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கு இந்த வரவு – செலவுத் திட்டத்தில் வேறு வழிகளில் உதவுவது குறித்து மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். அந்த வகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் திட்டத்தின் கீழான நிதி உதவியில் ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு முடிவு செய்துள்ளோம்.

அதே வேளை, எமது விவசாய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகளை கடற்றொழிலாளர்களுக்கும் வழங்க முடியும் என மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எமது கடற்றொழிலாளர்கள் சார்பில் எனது நன்றியை மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், மாற்று மின் வலு – குறிப்பாக மின்கலம், காற்றாலை, பாய்மரம் மற்றும் சூரிய சக்தி கொண்ட மின் வலு கொண்டு கடற்றொழில் படகுகளை செயற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பிலும் பரிசோதனைகளை மேற்கொண்டு, அது வெற்றியளித்துள்ளது. இதனை வெகு விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

அறுவடைக்குப் பின்னரான பாதிப்புகளைக் குறைக்கின்ற வகையில் நவீன குளிர்சாதன கருவிக் கட்டமைப்பினை பொருத்துவது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு இருக்கின்றோம். அதனடிப்படையில் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (குயுழு) உதவியுடன், கடற்றொழில் பலநாட் களமொன்றில் இந்தக் கருவிக் கட்டமைப்பைப் பொருத்தி, அக் களத்தினை பலமுறை ஒரு மாத கால பயண தடவைகளில் கடற்றொழிலுக்கு அனுப்பி மேற்கொண்ட பரிசோதனையானது வெற்றியளித்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது செயற்பாட்டில் இருக்கின்ற பலநாட் களங்கள் அனைத்துக்கும் இக் கருவிக் கட்டமைப்பினைப் பொருத்தவுள்ளோம். இந்தச் செயற்பாட்டினை மூன்று வருடங்களில் செய்து முடிக்க எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம். இதற்கென ஐ ழு வு ஊ யின் அனுமதியினைக் கோரவும் உள்ளோம். இந்தக் கருவிக் கட்டமைப்பினை பொருத்துவதன் மூலம் உற்பத்திச் செலவினைக் குறைத்துக் கொள்ள முடிந்த அதே நேரம், அறுவடைகளின் தரத்தினை 80 வீதத்திற்கு மேல் பேணவும் முடியும். இதற்கென நாம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் கீழ் அல்லது வெளிநாட்டு நிதி உதவிகளையும் பெற முயற்சிக்கின்றோம்.

அத்துடன், இனிமேல் புதிதாக கட்டப்படுகின்ற பலநாட் களங்களுக்கு இக் கருவி பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படும். இக் கருவிக் கட்டமைப்பு இல்லையேல் புதிய பலநாட் களங்களுக்கான அனுமதி வழங்கப்பட மாட்டாது.

மேலும், செயற்திறன்மிக்க இரு சிறிய கடற்றொழில் படகுகளும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. இவை எரிபொருளினை சிக்கனமாகப் பயன்படுத்தக்கூடியதும், செயற்திறன்மிக்கதும், கால நிலைக்கேற்ப செயற்படத் தக்கதும், ஐஸ் பெட்டிகளை கொண்டு செல்லும் வசதிமிக்கதுமான படகுகளாகும். எதிர்வரும் 14ஆம் திகதி இந்தப் படகுகளை உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (குயுழு) என்னிடம் கையளிக்கவுள்ளதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இதே தொழில்நுட்பத்தை ஏனைய சிறிய படககளுக்கும் வழங்கவுள்ளோம். அதற்கும், வெளிநாட்டு உதவிகள் அல்லது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியின் கீழ் உதவிகளைப் பெறுவதற்கு எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம்.

கடற்றொழில் துறைமுகங்கள் என்ற வகையில் நான் அனைத்து கடற்றொழில் துறைமுகங்களுக்கும் நேரில் சென்று கண்காணிப்பு செய்துள்ளேன். அந்த வகையில் அவற்றில் காணப்படுகின்ற குறைகளில் பெரும்பாலானவற்றை நிவர்த்திப்பதற்கு கூடுதல் முயற்சிகளை எடுத்தும் வருகின்றோம். 

மேலும் கந்தரை துறைமுக நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தினை அபிவிருத்தி செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இறங்குதுறையாக இருந்த இது, யுத்த காலகட்டத்தில் இலங்கைக் கடற்படையினர் வசம் இருந்து, அதன் பின்னர் போதிய வசதிகள் கொண்ட துறைமுகமாக மாறியிருக்கின்றது. அதேவேளை, எமது கடற்றொழிலாளருக்கான ஊக்குவிப்பு வாய்ப்புகளும் இருக்கவில்லை. எதிர்காலத்தில் அக் கோரிக்கையை ஊக்குவித்து, மயிலிட்டி கடற்றொழில் சங்கமும், இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனமும் இணைந்து, பங்காளிகளாக செயற்படும் திட்டம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன். அதேவேளை, அப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு பயிற்சியளித்து, கடன் வசதிகளையும் செய்து கொடுத்து, பலநாட் களங்கள் மூலமான கடற்றொழில் தொடர்பில் அவர்களையும் ஈர்ப்பதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.

மேலும், பருத்தித்துறை, குருநகர் மற்றும் மன்னாரில் பேசாலை போன்ற இடங்களிலும் புதிதாக கடற்றொழில் துறைமுகங்களை அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ரெக்கவ மற்றும் மாவெல்ல இறங்குதுறைகளின் பணிகள் பூர்த்தியாகி உள்ள போதிலும், நான் அங்கு சென்றிருந்தபோது, கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டிய சில திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளேன். வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ இறங்குதுறை மீளக் கட்டியமைக்கப்படவுள்ளது. தெஹிவளை இறங்குதுறையில் வெளிச்சவீடு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர்கொழும்பு தோணி மூலமான கடற்றொழிலாளர்களுக்கு 25 புதிய தோணிகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒலுவில் கடற்றொழில் துறைமுகத்தினையும் நாம் கடற்றொழில் துறைக்கு வசதியளிக்கும் முகமாக செய்து கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். வருகின்றோம். அதன் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, அங்கு ரின் மீன் தொழிற்சாலையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இத் தொழிற்சாலையின் மூலம் அப்பகுதியில் அதிகமாக அறுவடையாகின்ற காணாங் கெளுத்தி (லின்னா) இன மீன் வகைகளை இலகுவாக விற்பனை செய்து கொள்வதற்கு அங்குள்ள கடற்றொழிலாளர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றது.

மேலும், அப்பகுதியிலுள்ள கடல் வளங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இக் கடற்றொழில் துறைமுக நிர்மாணத்தின் மூலம் அந்த வளங்களை உச்ச அளவில் பயன்படுத்திக் கொள்வதற்கு இயலுமாகும்.

மேலும், உட்கட்டமைப்பு பணிகள் தொடர்பில் நடவடிக்கைளை எடுத்து வருகின்றோம். அவை யாவும் முடிவுறும் தருவாயில் ஒலுவில் கடற்றொழில் துறைமுகத்தினை கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டுக்கென திறந்து வைக்க முடியும்.

மட்டக்களப்பு கடற்றொழில் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவுள்ளோம்.

அதே நேரம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை மையப்படுத்தி, மீன் பதனிடும் பாரிய தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இந்து சமுத்திரத்தில் பிடிக்கப்படுகின்ற மீன் வகைகள் வியட்நாம், தாய்லாந்து மற்றும் தாய்வான் போன்ற நாடுகளிலேயே சர்வதேச தரம்மிக்கதாக பதனிடப்படுகின்றன. இந்த நிலையை மாற்றி, அவற்றை இலங்கையிலேயே பதனிடும் வாய்ப்பினை இதன் மூலம் உருவாக்க முடியும். இதன் ஊடாக பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்கும், ஆயிரக் கணக்கான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் இயலும்.

அதுமட்டுமல்லாது, இந்தியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து அரசாங்கங்களினதும் மற்றும் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினதும் (குயுழு) உதவிகளின் கீழ் கடற்றொழலாளர்களுக்கு உபகரணங்கள் மற்றும் உலருணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடற்றொழிலாளர்களுக்கு வீடமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

களப்பு அபிவிருத்தி மற்றும் பேணல் வேலைத்திட்டத்திற்கென 2023ஆம் 2024ஆம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ள  நிதியினைக் கொண்டு அபிவிருத்திக்கென பல  களப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான பிரதான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அத்துடன் அருகம்பே களப்பின் சேற்றினை அகற்றுதல், நாயாறு மற்றும் லங்கா பட்டுன ஆகிய களப்புகளின் அடிப்படை சூழல் ஆய்வுகளை மேற்கொள்ளல் மற்றும் சுத்தம் செய்தல், நந்திகடல் களப்பினை சுத்தஞ் செய்தல், சாலை களப்பினை சுத்தஞ் செய்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட களப்புகளின் எல்லைகளையிடல் மற்றும் மீனின உற்பத்தியினை அதிகரித்தல், நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி, களப்புகளின் முகாமைத்துவக் குழுக்களை அமைத்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதே நேரம் சீன அரசாங்கம் இலவசமாக வழங்கிய எரிபொருளை உரிய முறையில் அனைத்து கடற்றொழிலாளர்களுக்கும் வழங்கியிருந்தோம். இதில் எவருக்கேனும் மண்ணெண்ணெய் கிடைக்காமல் இருக்குமானால், அவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க முடியும்.

அந்தவகையில,; எமது கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமானது கடற்றொழிலார்கள் தொடர்பிலும், கடற்றொழில் படகுகள் தொடர்பிலும் பல்வேறு மேம்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து பாரிய பங்களிப்பினை வழங்கி வருவதுடன், இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனமும் உரிய பங்களிப்பினை வழங்கி வருகின்றது.

இந்திய இழுவை மடி வலைப் படகுகள் மூலமான எமது கடல் வளங்களின் அழிவுகள்,  கடற்றொழிலார்களின் வாழ்வாதாரங்கள் உட்பட அவர்களது கடற்றொழில் உபகரணங்களுக்கான பாதிப்புகள் தொடர்பில் நான் பலமுறை இந்த சபையிலும், சபைக்கு வெளியிலும் கூறியிருக்கின்றேன்.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பிரகாரம் இழுவை மடி வலைப் படகுகள் கைது செய்யப்படுகின்ற நிலையில் அவற்றின் தொழிலார்கள் மாத்திரமே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையில் விடுவிக்கப்படுகின்றனர். பின்னர் அவற்றின் உரிமையாளர்கள் வந்து நீதிமன்றத்தில் ஆஜராகி, இலங்கை கடற் பரப்பிற்குள் அந்த இழுவை மடி வலைப் படகுகள் வந்தமை தங்களுக்குத் தெரியாதெனக் கூறி, அவற்றை விடுவித்துக்கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.

இத்தகைய நிலையில்   சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்ற இழுவை மடி வலைப் படகுகளின் உரிமையளார்களுக்கும் குற்றப் பத்திரங்களை தாக்கல் செய்கின்ற வகையில் சட்ட மூலமொன்று அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேற்படி அத்துமீறி, எல்லைத் தாண்டி, இலங்கைக் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டு தொடர்ந்து கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகள் தொடர்பில் பல தடவைகள் இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன. சுட்டரீதியான கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், அவை எவையும் சரிவர கைகூடவில்லை.

இந்திய இழுவை மடி வலை கடற்றொழிலாளர்கள் பாரம்பரிய முறையில் அவர்களது கடற்பரப்பிலேயே கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும், இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் வந்து அவர்களைக் கைது செய்வதுமாகவே தமிழகத்தில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது மக்களின் பிரதிநிதி என்ற வகையிலும், கடற்றொழில் அமைச்சர் என்ற வகையிலும் இந்திய மற்றும் தமிழக மக்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் ஊடகங்கள் வாயிலாகவும், கடிதங்கள் மூலமும், நேரிடையேயும் உண்மை நிலைமையினை தெளிவுபடுத்தியுள்ளேன்.

அதாவது, இது இந்திய கடற்றொழிலாளர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான பிரச்சினை அல்ல, இது இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாட்டாளர்கள் காரணமாக இலங்கையின் கடற்றொழிலாளர்களின் குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் தமிழ் கடற்றொழிலார்களின் வாழ்வாதாரத்திற்கும், அவர்களது கடற்றொழில் உபகரணங்களுக்கம், இலங்கையின் கடல் வளத்திற்கும் பாதிப்புகளை, அழிவுகளை ஏற்படுத்துகின்ற பிரச்சினை என்பதையே நான் தெளிவுபடுத்தி வருகின்றேன்.

இந்த செயற்பாட்டினை நான் மட்டும் எடுத்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. வடக்கிலே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என நான் பகிரங்கமாகவே பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

இந்த விடயம் தொடர்பில் இங்குள்ள இந்தியத் தூதுவருடன் கதைப்பதாக சில தமிழ் அரசியல்வாதிகள் கூறியுள்;ளனர். இந்த விடயம் தொடர்பில் இந்தியத் தூதரகம் அறியாமல் அல்ல. எனவே, இதையும் கடந்து, வடக்கின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக தமிழகம் சென்று, தமிழக முதல்வர், எதிர்க்கட்சித ;தலைவர் அடங்களாக ஏனைய அரசியல் தரப்பினர், ஊடகங்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தெளிவுபடுத்த வேண்டும். 

அடுத்ததாக, தேசிய ரின் மீன் உற்பத்தியானது நாட்டில் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகின்றது. 2019ஆம் ஆண்டளவில் சுமார் 05க்கும் குறைவாக இருந்த ரின் மீன் உற்பத்தித் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தற்போது 16ஆக அதிகரித்துள்ளன. இவற்றைவிட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத ரின் மீன் தொழிற்சாலைகளும் செயற்பட்டு வருகின்றன.

தேசிய அளவில் ரின் மீன் கைத்தொழிலை மேலும் அதிகரிப்பது தொடர்பில் எமது அமைச்சு தொடர்ந்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தேசிய ரின் மீன்களின் உற்பத்திக்கென நாட்டில் மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுகின்றபோது அம் மூலப் பொருட்களை இறக்குமதி செய்கையில் அதற்கென  விசேட இறக்குமதி வரிச் சலுகையினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதோடு, இறக்குமதி ரின் மீன்களுக்கான இறக்குமதி வரியினை அதிகரிப்பதற்கான நடவடிக்கையினையும் எடுத்துள்ளோம்.

ரின் மீன்களை இறக்குமதி செய்கின்றவர்கள் குறைந்த தரமுடைய ரின் மீன்களை இறக்குமதி செய்து சந்தைப்படுத்துவதால், தேசிய ரின் மீன் உற்பத்தியானது சந்தையில் விலைகள் தெடர்பிலான பாதிப்பிற்கு உட்படுகின்றது. இதனை நிவர்த்திக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படுகின்ற ரின் மீன்களுக்கான தரச் சான்றிதழ்களை உற்பத்தி செய்யப்படுகின்ற அந்தந்த நாடுகளிலிருந்து பெறப்பட்டு, லேபலில் குறிப்பிடப்பட வேண்டும் என்ற நடவடிக்கையினை எடுத்து வருகின்றோம்.

மூலப் பொருளாக இறக்குமதி செய்யப்படுகின்ற புதிய, உறைந்த மீன்களுக்கான மொத்த ஆர்சனிக் அளவுக்கு பதிலாக கனிம ஆர்சனிக் அளவினை புதுப்பிப்பது தொடர்பிலும், சோதனை மற்றும் பரிசோதனை செயல் முறையை எஸ். எல். எஸ் ஐக்கு ளுடுளுஐ மாற்றுவது தொடர்பிலும் நாம் அவதானமெடுத்து வருகின்றோம்.

தேசிய மட்டத்தில் ரின் மீன்களை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். குறிப்பாக, சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலமாக சந்தைப்படுத்தவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், படையினர் போன்ற அரச நிறுவனங்களுக்கு விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதே நேரம், தரமற்ற ரின் மீன்களைத் தயாரிக்கின்ற, விற்பனை செய்கின்ற தொழிற்சாலைகளை தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

தேசிய ரின் மீன் உற்பத்தியாளர்களை அடிக்கடி சந்தித்து, அவர்களது பிரச்சினைகளைக் கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்து வருவதன் மூலம் இக் கைத்தொழிலை மேம்படுத்தி வருகின்றோம்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் காரணமாக கொழும்பு, களுத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நேரடி கடற்றொழிலாளர்கள் 15,032 பேரும், மறைமுக கடற்றொழிலாளர்கள் 4,891 பேருமாக மொத்தம் 19,923 பேர் தொழில் தடையினால் பாதிக்கப்பட்டதாக இனங்காணப்பட்டனர்.

எமது அமைச்சு பிரசுரித்திருந்த பத்திரிகை விளம்பரங்கள் மூலமாகவும், கிராமிய, பிரதேச மற்றும் மாவட்ட குழுக்கள் மூலமாகவும் இவர்கள் இனங்காணப்பட்டனர். இந்த இழப்பீடு பெறுவதற்கு தகுதியுடைய எவருக்கும் இழப்பீடுகள் இதுவரையில் கிடைக்காதிருப்பின், அது தொடர்பில் அவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

அதன்படி, இதுவரையில் முதலாவது கட்டமாக – 420,000,000 ரூபாவும், 2வது கட்டமாக, 354,544,105.70 ரூபாவும், 3வது கட்டமாக, 911,526,476.89 ரூபாவும், 4வது கட்டமாக 1,604,279,391.37 ரூபாவும் என மொத்தமாக சுமார் 3070 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குவதற்கென கிடைத்து, அவை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நான்கு கட்டங்களில் வழங்கப்பட்டுள்ளன.

இத் தொகையானது மேற்படி கப்பலின் காப்புறுதி நிறுவனம் வழங்கிய இடைக்கால இழப்பீட்டுத் தொகையாகும். எமது கோரிக்கை மேலும் இழப்பீடுகள் பெறுவதற்கென முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவை இப்போது கிடைத்திருப்பதைவிட பல மடங்காகலாம்.

மேலும் மேற்படி கப்பல் அனர்த்தம் காரணமாகப் கடற்றொழிலாளர்களின் பாதிக்கப்பட்ட வலைகளுக்கு பதிலாக 6.5 மில்லியன் ரூபாவுக்கு புதிய வலைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி இழப்பீடானது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் காரணமாக கடற்றொழில் தடைவிதிக்கப்பட்டிருந்த பகுதிகளின் கடற்றொழிலார்கள், கடற்றொழில் சார்ந்த மறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் அது சார்ந்த ஏனைய துறையினருக்கே வழங்கப்பட்டுள்ளதை நான் மீண்டும் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

இந்த நிலையில் மேற்படி கப்பல் அனர்த்தம் காரணமாக Nயுசுயுஇ ஆநநிய ஆகிய நிறுவகங்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிப்புகள் இனங்காணப்பட்ட பகுதிகளைத் தாண்டி வேறும் பகுதிகள் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளதாக சில அரசியல் தரப்பினர் கூறி வருகின்றனர். இது தொடர்பில் Nயுசுயுஇ ஆநநிய போன்ற நிறுவகங்களைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவதற்கும் நான் உத்தேசித்துள்ளோம்.

நன்னீர் வேளாண்மை மற்றும் உவர் நீர் வேளாண்மையினை ஊக்குவிக்கும் வகையில் அண்மையிலே இந்தியாவில் இருந்து இத்துறை சார்ந்த நிபுணர்கள் குழுவொன்றை நாம் அழைத்திருந்தோம். அக் குழு இலங்கையிலே பல்வேறு இடங்களை ஆராய்ந்துள்ளது. இந்தக் குழுவின் திட்டங்களைப் பெற்று, இந்திய நிதிப் பங்களிப்புடன் விரைவில் இத்துறையினை மேலும் பரவலாக முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளோம்.

தற்போதைய நிலையில் மீனின இனப்பெருக்க நிலையங்களின் தேவைகளே அதிகளவில் காணப்படுகின்றன. தற்போதைக்கு 17 மீனின இனப்பெருக்க நிலையங்களே நாட்டில் செயற்பட்டு வருகின்றன. எனவே, இவற்றை அதிகரிப்பதற்கு எண்ணியுள்ளோம். அரச சார்பான மீனின இனப்பெருக்க நிலையங்களை அதிகரிப்பதோடு, தனியார்த்துறை சார்ந்த மீனின இனப்பெருக்க நிலையங்களை அதிகரிப்பதற்கும் ஊக்குவிக்கவுள்ளோம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கிளிநொச்சி மாவட்டத்திலே புதுமுறிப்பு பகுதியில் ஏற்கனவே ஓர் அரச சார்பற்ற நிறுவனம் அமைத்துள்ள மீன் குஞ்சுகளை வளர்க்கின்ற 30 தொட்டிகளை நாம் தனியார்த் துறையினருடன் இணைந்து புனரமைப்புச் செய்து வருகின்றோம். இவற்றில் 05 தொட்டிகள் புனரரைப்புச் செய்யப்பட்டு மீன் குடம்பிகள் விடப்பட்டுள்ளன. ஏனைய 25 தொட்டிகளையும் புனரமைத்துவிட்டால் மேலும் குறிப்பிட்டளவு மீன் குஞ்சுகளை நீர் நிலைகளில் விட முடியும். அதற்கான ஏற்பாடுகளும் இருக்கின்றன.

63.     அண்மையிலே நான் தென் கொரியாவுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில் ‘ஒரு சமுத்திரம். ஒரு கடற்றொழில் சமூகம்’ என்ற தொனிப் பொருள் கொண்ட மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தேன். இதன்போது உலகின் 45 நாடுகளைச் சேர்ந்த கடற்றொழில் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கே உரை நிகழ்த்திய உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (குயுழு) பிரதிநிதி ஒரு விடயத்தை சுட்டிக் காட்டியிருந்தார். அதாவது, கடல் வெப்பமாகுதல், சட்டவிரோத மற்றும் முகாமைத்துவமற்ற மீன் அறுவடைகள், கடல் மாசடைதல், கடல் நிரப்பப்படுதல் போன்ற பல காரணங்களால் எதிர்காலத்தில் கடல் வளங்கள் குறைந்து, மீனினங்களின் உற்பத்தியும் வெகுவாக குறைந்து விடுகின்ற நிலையில்,  நீர் வேளாண்மை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவர்களது ஆய்வின் விளக்கமாக இருந்தது.

அதே நேரம், நாம் ஒரு கிலோ இறைச்சியை பெற வேண்டுமானால் அதற்கென 8.2 கிலோ கிராம் உணவினை செலவிட வேண்டும் என்றும் ஆனால், ஒரு கிலோ நீர் வேளாண்மை அறுவடையைப் பெற வேண்டுமானால் அதற்கென 1.2 கிலோ கிராம் உணவினை செலவிட்டால் மட்டும் போதுமானது என்பதும், நீர் வேளாண்மை அறுவடையானது அதிக ஊட்டச் சத்தினைக் கொண்டதுமாகும் என்பதே அவர்களது கருத்தாகவும் இருந்தது.

எனவே, எமது மக்களின் போசாக்கு நிலையை மேம்படுத்துவது, தொழில்வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வது, ஏற்றுமதி பொருளாதாரத்தினையும், கிராமிய பொருளாதாரத்தினையும் அதிகரித்துக் கொள்வது போன்ற காரணங்களை முன்னிட்டு நீர் வேளாண்மையை இந்த நாட்டில் பரவலாகவும், மிக அதிகளவிலும் முன்னெடுப்பதற்கு நாம் எதிர்ப்பார்ப்பு கொண்டுள்ளோம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அத்துடன் நீர் நிலைகளில் மீனினக் குஞ்சுகளை விடுவதற்கு இந்த வருடத்தில் எமது அரசாங்கம் 100 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. அடுத்த வருடத்திற்கென மேலும் 200 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியினைக் கொண்டு, நாட்டில் பரவலாக நீர் நிலைகளில் மீனினக் குஞ்சுகளை விடவுள்ளோம்.

2022ஆம் ஆண்டினைப் பொறுத்தவரையில் எமது நாட்டின் நீர் வேளாண்மை உற்பத்தியானது சுமார் 11,600 மெற்றிக் தொன்களாகவே இருக்கின்றன. எமது நாட்டின் நீர் சார்ந்த இயற்கை வளங்களும், திறமையான மனித வளமும் ஒன்று சேருமிடத்து நீர் வேளாண்மையை மிக உயரிய அளவுக்குக் கொண்டுவர முடியும். குறிப்பாக, உவர் மற்றும் நன்னீர் மீனினங்கள், இறால், நண்டு, கடல்பாசி போன்றவை எமது நாட்டு மக்களின் உயர்தர போசாக்குக்கு மாத்திரமின்றி, ஏற்றுமதி பொருளாதாரத்திலும் முக்கியத்;துவமிக்கவை. அதேபோன்று, கடலட்டையானது பாரிய அந்நியச் செலாவணியை ஈட்டித்தரத்தக்கது. இவை அனைத்துத் திட்டங்களும் அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித்தரக் கூடியவையாகும்.

அந்த வகையில் இத்துறை சார்ந்து எமது அமைச்சின் கீழுள்ள தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையினதும் (Nயுஞனுயு)இ தேசிய நீர்வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவகத்தினதும், (Nயுசுயு) ஒத்துழைப்புகள் எமக்குக் கிடைத்து வருகின்றன.

தேசிய நீர்வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவகமானது (Nயுசுயு) எமது செயற்பாடுகளுக்கு உரிய பங்களிப்பினை வழங்கி வந்தாலும்கூட, அவர்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடாமை காரணமாக இந்த நிறுவகம் எதையுமே செய்வதில்லை என சிலர் கூறிவருகின்றனர். இது தவறு என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தைப் பொறுத்த வரையில் இதுவரையில், கண்டி மாவட்டத்தில் 04, கேகாலை மாவட்டத்தில் 07, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 04, மாத்தறை மாவட்டத்தில் 07, இரத்தினபுரி மாவட்டத்தில் 04, பதுளை மாவட்டத்தில் 06, களுத்றை மாவட்டத்தில் 07, காலி மாவட்டத்தில் 06, கொழும்பு மாவட்டத்தில் 15, கம்பஹா மாவட்டத்தில் 28, குருனாகலை மாவட்டத்தில் 06, அனுராதபுரம் மாவட்டத்தில் 04, திகாமடுல்ல மாவட்டத்தில் 01 என மொத்தமாக 97 விற்பனை நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன.

இவற்றில் அனைத்து விற்பனை நிலையங்களும் இலாபம் ஈட்டுவதாக இல்லை. எனவே, அவற்றை இலாபம் ஈட்டக்கூடிய வகையில் மறுசீரமைக்க வேண்டியத் தேவையும், இத்தகைய மீன் விற்பனை நிலையங்கள் இல்லாத பகுதிகளில் மேலும் மீன் விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டியத் தேவையும் இருக்கின்றது.

அத்துடன், தற்போது இலங்கை கடற்றொழில் திணைக்களத்திற்குரிய விடுமுறை விடுதிகளை சுற்றுலாத்துறை மேம்பாட்டு அதிகார சபையின் வழிகாட்டலுக்கமைய அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றோம்.

மன்னார் மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன அலுவலக வளாகங்களில் வாகன சேவைகள் நிலையங்களையும், எரிபொருள் வழங்கும் நிலையங்களையும் அமைத்து வருகின்றோம்.

நாடளாவிய ரீதியில் கூட்டுத்தாபனத்திற்குரிய காணிகளில் தனியார்த்துறையினருடன் இணைந்த வர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

எனவே, வெகு விரைவில் இலங்கை கடற்றொழில் திணைக்களத்தினை நட்டமில்லாத ஒரு நிறுவனமாக மாற்ற இயலும் என நம்புகின்றேன்.

இந்த நிலையில், ஜப்பானிய அரசாங்கம் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பயன்படுத்துவதற்கென 07 குளிரூட்டி வாகனங்களை வழங்கியிருக்கின்றது. இதன் மூலமாக இம் மாகாணங்களில் மீனின உற்பத்தி விருத்திக்கு மேலும் பங்களிப்பினை வழங்க முடியும்.

சீனோர் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அதன் பணிகள் முறையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வருடத்திலே, மகாவலி அதிகார சபை, அபிவிருத்தி லொத்தர் சபை, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு, (குயுழு) கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன சீனோர் நிறுவனத்தின் தயாரிப்புகளை பெற்றுள்ளன.

மேலும், கடற்றொழில் சுற்றுலாத்துறைக்குத் தேவையான படகுகள் மற்றும் கண்ணாடி இழை வகை உற்பத்தி என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும், தற்போதுள்ள  கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டமூலங்களின் அனைத்து திருத்தங்களையும் இணைத்து,  கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தில் சில சேர்க்கைகளையும், அகற்றல்களையும், திருத்தங்களையும் மேற்கொண்டு, புதிய சட்ட வரைபொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

எமது கடற்றொழிற்துறையை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதும், அபிவிருத்தி செய்வதும், கடற்றொழிலாளர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும்.

இது வரைபே அன்றி முடிவல்ல. இந்த வரைபு தற்போது கடற்றொழில் துறையினர், துறைசார்ந்தவர்கள் போன்றோரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறுகின்ற வகையில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது மூன்று சுற்றுகள் விடப்பட்டு, அதன் மூலம் பெறப்பட்ட கருத்துக்களில் முக்கியமான கருத்துக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் பின்னர் இன்னுமொரு சுற்றும் விடப்படும். அதன் பின்னரே இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும்.

இதனை சிலர் அறியாமை, சுயலாப அரசியல் காரணங்களுக்காகவும், தங்களது ஆதாயங்களுக்காகவும் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (ஐடுழு) கடற்றொழிலாளர்களின் நலன்கள் கருதிய சர்வதேச தரம்வாய்ந்த பல்வேறு விடயங்களை வலியுறுத்துகின்றது. இலங்கை இந்த சாசனத்தில் கைச்சாத்து இடா விட்டாலும், அதன் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இணைந்து ஆரம்பித்துள்ளோம். அதன்  ஒரு முக்கிய மைல் கல்லாக கடற்றொழில் ஒழுங்குமுறைகளின் பணியின் துவக்கம் என்கின்ற நிகழ்வு இம்மாதம் 08ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றிருந்தது. அதில் நானும், கௌரவ அமைச்சர் மனுச நாணாயக்கார அவர்களும், எமது இராஜாங்க அமைச்சர் கௌரவ பியல் நிசாந்த டி சில்வா அவர்களும் கலந்து கொண்டிருந்தோம். கடற்றொழிலாளர்கள் தொடர்பில் நல்லதொரு பார்வையினை இந்த அமைப்பு கொண்டிருக்கின்றது. இதனை நாம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் கூறிக்கொண்டு,

மேற்படி அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்ற எமது இராஜாங்க அமைச்சர் கௌரவ பியல் நிசாந்த டி சில்வா, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, இராஜாங்க அமைச்சுக்கான மேலதிக செயலாளர் திருமதி. அனுசா கோகுல, மேலதிக செயலாளர் திரு. கபில குணரத்ன, மேலதிக செயலாளர் திரு. தம்மிக்க ரணதுங்க, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த,  எனது ஆலோகசர் திரு. எஸ். தவராசா, எனது ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஏனைய அனைத்து நிறுவகங்கள் மற்றும் திணைக்களங்களினதும் தலைவர்கள், பணிப்பாளர் நாயகங்கள், பணிப்பாளர்கள், அமைச்சு மற்றும் ஏனைய துறைகளின் அனைத்து ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி,

வணக்கம்.

Related posts:

எதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!
அகிம்சை குரலுக்கு மதிப்பளித்திருந்தால்  இலங்கை இரத்தம் தோய்ந்த தீவாக மாறியிருக்காது – நாடாளுமன்றில் ...
பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்தக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ்...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பிலான உண்மை நிலைப்பாடு என்ன? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக...
‘இரண்டாவது பண்டாரநாயக்க’அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க! டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் தெர...