அமரர் அமிர்தலிங்கம் போன்றவர்களின் ஜனநாயக தலைமைத்துவம் அலட்சியப்படுத்தப்பட்டு அவர்களின் அமைதிவழிப் போராட்டங்கள் குருதியால் துலைக்கப்பட்ட காலகட்டத்தையும் நாம் நினைத்துப் பார்க்கின்றோம். டக்ளஸ் தேவானந்தா

Saturday, May 20th, 2000

20 may 2000

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காண்பதற்காகச் சகல இன மக்களினதும் விருப்பார்வங்கள் வெளிப்பட்டிருக்கின்ற காலகட்டத்தில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த நாட்டு மக்கள் சுய அரசியல் சக்திகளால் உருவாக்கப்பட்ட இன முரண்பாடுகளால் பிரிக்கப்பட்டிருந்து சிந்திய இரத்தமானது இன ஒற்றுமை ஒன்றுதான் இந்த நாட்டின் நிரந்தர அமைதிக்கும் முன்னோக்கிய வளர்ச்சிக்கும் வழிவகுக்க முடியுமென்பதைக் கற்றுத் தந்திருக்கின்றது. நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின் போது மாண்புமிகு பிரதமர் அவர்கள் இனப் பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை முன்வைத்துப் பிரசாரத்தை நடத்தினாரென்பதை நாம் அறிவோம். அதுமட்டுமல்ல  “தாம் பதவிக்கு வந்தால் புலிகளோடு பேச்சுவார்த்தை நடாத்துவோம்” என்றும் கூறியிருந்தார்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே

“இருபத்தினான்கு மணி நேரத்தில் சிங்கள மொழி ஒன்றுதான் அரச கரும மொழி” என்று சட்டம் கொண்டு வருவதாகப் பிரசாரம் செய்து பதவிக்கு வரக்கூடிய ஒரு காலகட்டமும் இருந்தது. மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறிப்பதன் மூலம் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற முடியும். என்று நம்பிய காலகட்டமும் இருந்தது. தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டமாக மட்டும் சித்தரித்து அதனை நசுக்கியே தீருவோம் என்று பேசியவர்கள் கரகோஷம் பெற்ற காலகட்டமும் ஒன்று இருந்தது. தமிழ் பேசும் மக்கள் நியாயமான உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய போது “இந்த நாட்டிலே சிங்கள மக்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகளுக்கு உலை வைக்கத்தான் குரல் எழுப்புகிறார்கள்” என்று சொன்னால் துரதிஷ்ட வசமாக அதனை நம்புகின்ற நிலையும் இருந்தது. எங்கள் முன்னோடியான தந்தை செல்வநாயகம் அமரர் அமிர்தலிங்கம் போன்றவர்களின் ஜனநாயக தலைமைத்துவம் அலட்சியப்படுத்தப்பட்டு அவர்களின் அமைதிவழிப் போராட்டங்கள் குண்டாந்தடிகள் – குருதியால் – துலைக்கப்பட்ட காலகட்டத்தையும் நாம் நினைத்துப் பார்க்கின்றோம். அதன் விளை வாக நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்ட சூழ்நிலையும் அடக்கு முறைகளால் ஆயுதப் போராட்டத்தை அடக்கி விடலாம் என்று மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களையும் எண்ணிப்பார்க்கின்றோம்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே

நடந்த முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின் போது இந்த நாட்டில் இனப் பிரச்சினை இருக்கின்றதென்று கௌரவ பிரதமர் அவர்கள் கூறினார்கள். புலிகளோடு பேசுவோம் என்றும் கூறினார்கள். நமது மதிப்புக்குரிய தோழர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்கள் வடக்கு – கிழக்கு இணைப்பை வலியுறுத்தித் தொலைக்காட்சி விவாதமொன்றில் பேசியிருந்தார். கௌரவ பிரதமர் அவர்கள் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றார். அதே போன்று வடக்கு – கிழக்கு இணைப்பை வலியுறுத்தி தோழர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இனவாதம் பேசி அட்டைக் கத்திகளை வீசிக் கொண்டிருந்த சில கட்சிகள் குழுக்கள் மிகப் பரிதாபமான முறையில் தோற்றுப் போயின.

சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாதவாறு இனவாதிகள் இடையிலே தொங்க விடப்பட்டிருந்த திரையை யுத்தம் கிழித்துப் போட்டு விட்டது. நாம் எதற்காக இரத்தம் சிந்திக் கொண்டிருக்கின்றோம். யாருடைய நலன்களுக்காக எமக்குள் மோதிக் கொண்டிருக்கிறோம். என்ற சிந்தனையை தாங்க முடியாத யுத்தத்தின் சுமை தூண்டிவிட்டிருக்கின்றது. இந்த நாட்டின் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் தேவையற்ற யுத்தத்தினால் தங்கள் பிள்ளைகள் பலியாவதை விரும்பவில்லை. பெற்ற வயிறுகள் தங்கள் மடியிலே நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்காமல் நிம்மதியான ஒரு வாழ்க்கைக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் பேசும் மக்கள் போராடுவது தமது உரிமைகளுக்காகவே தவிர சிங்கள மக்களின் உரிமைகளுக்கெதிராகவோ அந்த உரிமைகளின் மீது பொறாமை கொண்டோ அல்ல. என்பதைச் சிங்கள மக்கள் இன்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் பாசிசப் போக்கானது சிங்கள மக்களை மட்டுமல்ல தமிழ்  பேசும் மக்களையும் பாதித்திருக்கின்றது என்பதை வடக்கு – கிழக்கிலே இருந்து இடம்பெயர்ந்து வந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும்; வடக்கு – கிழக்கிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்  மக்களும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதனால் புலிகள் “தாம் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதிகள்” என்று கூறிக் கொண்டாலும் கூட தமிழ் பேசும் மக்கள் அனைவருமே புலிகளின் போக்கை ஏற்றுக் கொண்டவர்கள் என்று அர்த்தமில்லை என்பதைச் சிங்கள மக்களும் தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

கௌரவ  பிரதிச் சபாநாயகர் அவர்களே

ஈ.பி.டீ.பீ. யினராகிய நாங்களும் ‘புளொட்’ ‘ரெலோ’ஆகிய தமிழ்க் கட்சிகளும் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் அரச படைகளுடன் செயற்படுவதும் எமது உறுப்பினர்கள் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் பலியாவதும் தமிழ் பேசும் மக்களின் போராட்டம் பற்றிய உண்மையான நிலையினைச் சிங்கள மக்கள் நன்கு அறிந்து கொள்ள ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்பதையும் மறந்து விடக்கூடாது.

கௌரவ  பிரதிச் சபாநாயகர் அவர்களே

எமது கட்சியினர் ஏன் ஆயுதங்களுடன் இருக்க வேண்டும் என்ற கேள்வியைச் சிலர் எழுப்புகின்றார்கள். நாங்கள் உண்மையைப் பேச வேண்டும் என்றால் எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலையில் தான் நாங்கள் இருக்கின்றோம். இல்லாவிட்டால் நாம் அரசாங்கத்தைப் பற்றி மட்டும்தான் இந்தச் சபையில் மட்டுமல்ல வெளியிலும் கண்டித்துப் பேசக்கூடிய ஒரு நிலை இருக்கும். புலிகளைப் பற்றி வாயே திறக்க முடியாத ஒரு நிலை இருக்கும். புலிகளைப் பற்றி வாயே திறக்க முடியாத ஒரு நிலை ஏற்படும். இந்த நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கு எதிராகவும் சஜநாயக நிறுவனங்களுக்கு எதிராகவும் புலிகள் நடந்து கொள்ளும்போது தமிழ் பேசும் மக்களின் தரப்பிலிருந்து அதனைக் கண்டிக்க முன்வருபவர்கள் நிராயுதபாணியாக இருக்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

இப்போது புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்ற ஓர் அணுகு முறையைப் புதிய அரசாங்கமும் பிரதமர் அவர்களும் முன்வைத்துள்ள னர். புலிகளின் எதிர்க்கும் ஆற்றலை அழிப்பது என்ற அடிப்படையில் வடக்கிலே உள்ள மக்களுடைய வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டிருந்த பாவனைப் பொருட்களுக்கான தடையைப் புதிய பிரதமர் நீக்கியிருக்கின்றார். இதன் மூலமாகப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தனது அக்கறையை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கின்றது. இது ஒரு நல்ல சூழ்நிலை என்றே நாம் கருதுகின்றோம். இந்தச் சூழ்நிலையினைப் புலிகள் இயக்கம் ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் அணுகினால் அது வரவேற்கப்படக்கூடிய ஒரு மார்க்கமாகவே இருக்கும்.

புலிகள் எமது தனிப்பட்ட எதிரிகள் அல்ல. அவர்கள் உண்மையாகவே கௌரவமான சமாதானத்திற்கான பாதையைத் திறப்பதற்கு உளப்பூர்வ மாக முன்வருவார்களேயானால் அதனை முதலில் வரவேற்பவர்களாக நாம் இருப்போம். ஆயுதங்கள் மூலம் அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நினைக்காமல் கருத்துக்களைக் கருத்துக்களால் சந்திக்கிற ஜனநாயக நடைமுறையை ஏனைய கட்சிகளுடனான உறவில் அவர்கள் கடைப்பிடிப்பார்களேயானால் நாம் ஒரு புதிய தொடக்கத்தைக் காண முடியும். தமிழ்பேசும் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கான போராட்டத்தில் புலிகள் இயக்கத்திற்கு இருக்கக் கூடிய நியாயமான பங்களிப்பினை நாம் மதிக்கின்றோம்.

ஆனால் இன்று குறிப்பிடப்பட்ட சில பகுதிகள் தமது கட்டுப்பாட்டில் இருக்கின்றன. என்பதற்காக, ஏனைய தமிழ் அமைப்புக்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக வழிக்கு வந்த பின்னரும் அதனைத் தாம் கைவிடாமல் இருக்கின்ற காரணத்துக்காக – ஏனைய தமிழ் அமைப்புக்களின் தியாகங்களையும் பங்களிப்பினையும் அவர்கள் மறுத்துப் பேசுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

புதிய அரசாங்கம் புலிகளோடும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளோ டும் இனப்பிரச்சினைத் தீர்வுக்காகப் பரந்துபட்ட பகிரங்கமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க நாட்டங்கொண்டிருப்பதனை நாங் கள் வரவேற்கின்றோம். அதேசமயம் பேச்சுவார்த்தையென்றாலென்ன யுத்த நிறுத்தமென்றாலென்ன அது மீண்டுமொரு தீவிரமான யுத்தத்துக்கான ஓய்வு காலமாக இருந்து விடக்கூடாது. என்பதையும் அரசாங்கமும் புலிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். புலிகள் தொடர்பாக  – அவர்களுடைய கடந்தகாலச் செயற்பாடுகளின் விளைவாக  – அவர்கள் மீது உடனடியாக நம்பிக்கை கொள்ள முடியாத நிலை எங்களுக்கிருக்கின்றது.

வடபகுதி மக்களின் பாவனைப் பொருட்களின் மீதான தடை விலக்கப்பட்டிருக்கின்றது. புலிகள் பத்துப் பொலிஸாரை விடுதலை செய்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் அவர்களிடம் பொலிஸாரும் இராணுவத்தினரும் சிக்கி இருக்கிறார்கள். எமக்கு கிடைத்த தகவலின் படி  3000க்கும் மேற்பட்ட தமிழர்களும் 38 முஸ்லிம்களும் புலிகளின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

“நாம் வடக்கே தனி அரசாங்கம் ஒன்றை நடாத்துகின்றோம். அந்த அடிப்படையில் அவர்களைச் சிறையில் வைத்திருக்கின்றோம்.அவர் களைச் சிறையில் வைத்திருக்கும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது.” என்பது போல் புலிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது மட்டு மல்லாமல் தம் வசமிருந்த சிங்கள பொலிசாரை மட்டும்தான் புலிகள் விடுதலை செய்திருக்கிறார்களே தவிர, தம்மால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ் பொலிஸார் எவரையும் இதுவரை அவர்கள் விடுதலை செய்ய வில்லை. அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா என்பது கூட யாருக்கும் தெரியாது.

முஸ்லிம்களையும் விடுவிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம். (அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்)

எனவே “இலங்கையில் இரண்டு அரசுகள் அந்த அரசுகளுக்கிடையே போர்க் கைதிகள் பரிமாற்றம் போர்நிறுத்தம் பேச்சுவார்த்தை” என்கின்ற மறைமுகமான தன்மையினைப் புலிகள் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. இந்த நிலையில் புலிகள் பேச்சுவார்த்தைக்கு வந்து தமது அரசியல் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக முன்வைக்காதவரை அரசாங்கத்தின் கைகளை மட்டும் கட்டிப் போடுகின்ற ஒரு நிலைமையினை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை. எனவேதான் அவசரகாலச் சட்டவிதியை வடக்கு – கிழக்கிலே நீடிப்பதற்கு நாம் ஆதரவளிக்க வேண்டிய நிலை இருக்கின்றது. அதேசமயம் நீடிக்கப்படுகின்ற இந்த அவசரகாலச் சட்ட விதிகளைக் காரணம் காட்டிச் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமானால் புதிய அரசாங்கத்திற்குத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கைக் குப் பாதகம் எற்படும் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

கௌரவ பிரதம அமைச்சர் அவர்களே

வடக்கு – கிழக்கில் உள்ள மக்களின் தேவைகளை உணர்ந்து பாவனைப் பொருட்களின் தடையை விலக்கியுள்ளதன் மூலம் தங்கள் நல்லெண் ணத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். வடக்கு – கிழக்கிலுள்ள மக்கள் எதிர்நோக்குகின்ற உடனடிப் பிரச்சினைகள் சிலவற்றுக்கும் தகுந்த பரிகாரத்தை நீங்கள் காணவேண்டுமென்றும் தற்போதுள்ள போரினால் அன்றாட வாழ்வில் அவலங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். தற்போதுள்ள நடைமுறைப்படி அந்தந்தப் பிரதேச பாதுகாப்புப் படை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே மீன்பிடிக்கின்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த முறையினை மாற்றி மீனவர்கள் வடக்கு – கிழக்குப் பிரதேசத்திலே மீன்பிடிக்கக் கூடிய அனுமதியைத் தாங்கள் வழங்க வேண்டும். அதுமட்டுமல்ல மீனவர்கள் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுக்குள்ளாவதும் உயிர் ஆபத்துக்களைச் சந்திப்பதும் நிறுத்தப்பட வேண்டும்.

வடக்கு  – கிழக்கிலே தொடரும் யுத்தத்தால் அகதிகள் தொகையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த அகதிகளுக்கு மீள் குடியேற்ற வசதிகளைச் செய்யும்போது அவர்கள் தமது சொந்தத் தொழில்களைச் செய்யக் கூடிய நிலைமையினை உருவாக்க வேண்டும். தற்போது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் மீளக் குடியேறியுள்ள அகதிகள் தமது சொந்தத் தொழிலை மேற்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். பாதுகாப்புக் காரணங்கள் கூறப்பட்டு அவாகளுடைய தொழில் வாய்ப்புக்கள் தடை செய்யப்படுகின்றன. உதாரணமாக விவசாயிகள் தமது சொந்தக் காணிகளுக்கே சென்று விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் நிரந்தர தொழில் வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல தமிழ் முஸ்லிம் அகதிகள் முகாம்களில் இருக்கும் சீர்கேடுகள்,அடிப்படை வசதிகளின்மை போன்றவற்றைச் சீர்செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும்.

கௌரவ பிரதம அமைச்சர் அவர்களே

வடக்கு – கிழக்கு யுத்தத்தின் காரணமாக காணாமல் போனவர்கள், பலியானவர்கள் ஆகியோருக்கு மரண அத்தாட்சிப் பத்திரங்கள் பெறுவதிலும் தாமதங்கள் ஏற்படுகின்றன. அதனால் அவர்களை நம்பியிருந்த குடும்பங்கள் உரிய நடவடிக்கை எடுக்க முடியாது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக வந்தாறுமூலை பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து மரண அத்தாட்சிப் பத்திரங்கள் பெறுவதில் அவர்களது உறவினர்கள் இன்றுவரை அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம். தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்கின்ற உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கைகளைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும் என்பதையும், அரசியல் தீர்வு காண்பதற்கான சிறந்த தளத்தை உருவாக் கும் என்பதையும் கூறி விடைபெறுகின்றேன் நன்றி.

20 may 2000

Related posts:

சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை முடக்கும் வகையிலான ஏற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்த...
133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள்  - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!
கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை வீண்விரயம் செய்வதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...