58 கோடி போலி கணக்குகளை முடக்கியது முகநூல் நிறுவனம்!

Thursday, May 17th, 2018

நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி போலி கணக்குகளை முடக்கியிருப்பதாக முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வன்முறை மற்றும் பாலியல்ரீதியான பதிவுகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு, 5 கோடி முகநூல் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, தங்களது பயன்பாட்டாளர்களின் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முகநூல் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி போலி கணக்குகளை முடக்கியிருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மேம்படுத்தப்பட்ட தகவல்தொழில்நுட்பங்களின் உதவியுடன், வன்முறை, பயங்கரவாதம், பாலியல்ரீதியான படங்கள் மற்றும் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை 58.5 கோடி போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதே காலக்கட்டத்தில், வன்முறை, பயங்கரவாதம், பாலியல்ரீதியான சுமார் 3 கோடி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் வன்முறை காட்சிகள் அடங்கிய 34 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பான எச்சரிச்கைகளும் அனுப்பப்பட்டன. இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில் நீக்கப்பட்ட விடியோக்களைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.

பயன்பாட்டாளர்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் முகநூல் தளத்தில் இருந்து 200 செயலிகள் நீக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: