2,500 சட்டவிரோத குடியேற்றங்களுக்கு இஸ்ரேல் அனுமதி!

Thursday, January 26th, 2017

ஆக்கிரமிப்பு செய்த மேற்குக் கரையில் 2,500க்கும் அதிகமாக யூத குடியேற்ற வீடுகளை கட்டும்  திட்டத்திற்கு அனுமதி அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டோர் லிபர்மன் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த திட்டம் அமைதி எதிர்பார்ப்பை சீர்குலைக்கும் என்று எச்சரித்திருக்கும் பலஸ்தீன அதிகாரிகள் இந்த கட்டடங்கள் அமைக்கப்படும் இடம் தமது எதிர்கால தேசம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் இரு நாட்டு தீர்வு அடிப்படையிலான அமைதி முயற்சிக்கு தடங்கலாக அமையும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் இஸ்ரேல் புதிய குடியேற்றத் திட்டத்தை அறிவிப்பது இது இரண்டாவது முறையாகும். முந்தைய ஜனாதிபதிகளை விடவும் டிரம்ப் இஸ்ரேல் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் கூடுதல் நெளிவு போக்கு கொண்டவராக கருதப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் அளிக்கப்பட்ட பெரும்பாலான புதிய வீடுகள் மேற்குக் கரையில் உள்ள குடியேற்ற பகுதிகளிலேயே கட்டப்படவுள்ளது.

இதில் ரமல்லாவுக்கு அருகில் உள்ள பெயித் எல் குடியேற்ற பகுதியில் நூற்றுக்கணக்கான புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான நிதி டிரம்பின் மருமகன் மற்றும் அவரது சிரேஷ் ஆலோசகர் ஜரெட் குஷ்னரின் குடும்பத்தால் நடத்தப்படும் அமைப்பினாலேயே வழங்கப்படுகிறது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நெதன்யாகு தனது டுவிட்டரில், “எமது கட்டுமானங்கள் தொடர்ந்து முன்னெடுக்கடும்” என்று பிரகடனம் செய்தார்.

எனினும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு தனித்தனி நாடுகள் கொண்ட இரு நாட்டு தீர்வை தாம் தொடர்ந்து ஆதரிப்பதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். எனினும் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் கட்டுமானங்களை அமைக்க இருந்து கட்டுப்பாடுகளை அவர் தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கிழக்கு ஜெரூசலத்தில் 566 சட்ட விரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை அமைக்க கடந்த ஞாயிறன்று ஜெரூசலம் நகர சபை அனுமதி அளித்தது.

1967 இல் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது தொடக்கம் அங்கு சுமார் 140 குடியேற்றங்களில் 500,000க்கும் அதிகமான யூதர்கள் வாழ்கின்றனர். இந்த குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானதாகும்

Related posts: